எகிப்து சவால்

By செய்திப்பிரிவு

எகிப்தின் அதிபர் பதவிக்குக் கடந்த வாரம் நடந்த பொதுத்தேர்தலில் அப்துல் ஃபட்டா எல் சிசி வெற்றிபெற்றுவிட்டார். சமீப காலம் வரை அவர்தான் எகிப்து ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தார். மக்களுடைய ஆதரவு பெற்ற, ஓரளவு அரசியல் பேசத் தெரிந்த தலைவர்கள் அனைவரும் போட்டியிட முடியாமல் சிறையில் தள்ளப்பட்டார்கள். நாட்டின் 5.40 கோடி வாக்காளர்களில் 47% மட்டுமே வாக்களித்தார்கள். அதில் 95% வாக்குகளை சிசி பெற்றிருக்கிறார். வாக்குப்பதிவு நடந்தவிதம் கேலிக்கூத்து. முதலில் இரு நாள்கள்தான் வாக்குப்பதிவு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாக இருந்ததால் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டதுடன், வாக்களிக்காதவர்கள் வீடுவீடாகச் சென்று மிரட்டப்பட்டார்கள். குடிநீர், மின்சார விநியோகம் நிறுத்தப்படும், ரேஷனில் பொருள்கள் கிடைக்காது என்றெல்லாம் அச்சுறுத்தப்பட்டதால் மேலும் பலர் வேண்டாவெறுப்பாக வந்து வாக்களித்துள்ளனர்.

எகிப்து இப்போது கடுமையான பொருளாதாரச் சிக்கலில் ஆழ்ந்திருக்கிறது. ஊழல் உச்சத்துக்குப் போய்விட்டது. வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகம். விலைவாசி கட்டுக்கடங்கவில்லை. பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கான மானியங்களைக் குறைத்தால்தான் நாடு மீட்சி அடையும் என்று முதலீட்டாளர்கள் கோருகின்றனர். ராணுவத்தைக் கொண்டு மக்களை அடக்கினாலே நாட்டில் அமைதி திரும்பிவிடும் என்று சிசி நினைக்கிறார். எகிப்தில் ஆட்சி மாற்றம் குறித்து அமெரிக்கா கவலைப்படவில்லை. அதன் கவலையெல்லாம் புதிய அதிபர், இஸ்ரேலுடன் எகிப்து ஏற்கெனவே செய்துகொண்ட சமரச ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும், பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE