சுதந்திரச் சுடர்கள் | மகளிர்: விடியல் தந்த விசாகா நெறிமுறை

By ப்ரதிமா

வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டத்துக்கு முன்னோடியாக விளங்கியது ‘விசாகா நெறிமுறைகள்’. ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம்தான் விசாகா நெறிமுறைகள் உருவாக்கப்படக் காரணம்.

ராஜஸ்தான் மாநிலப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பணியாளராகச் செயல்பட்டவர் பன்வாரி தேவி. கிராமப்புறப் பெண்கள் மத்தியில் சுகாதாரம், கல்வி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவரது வேலை. 1990-களில் பரவலாக இருந்த குழந்தைத் திருமண நடைமுறையை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் இவர் ஈடுபட்டிருந்தார்.

1992இல் இவர் முன்னெடுத்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்குக் கிராம மக்கள் ஆதரவளிக்கவில்லை. இருந்தபோதும் ஒன்பது மாதப் பெண் குழந்தைக்கு நடைபெறவிருந்த திருமணத்தைக் காவலர்கள் உதவியுடன் தடுத்து நிறுத்தினார். இதனால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர், பன்வாரி தேவியின் கணவரைத் தாக்கி, பன்வாரி தேவியைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர். இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினர் 52 மணி நேரம் கழித்தே புகாரைப் பதிவுசெய்தனர்.

மாவட்ட நீதிமன்றத்தில் பன்வாரி தேவிக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பன்வாரி தேவிக்கு நிகழ்ந்த இந்த அநீதிக்கு எதிராகப் பெண்ணிய அமைப்புகள் குரல்கொடுத்தன. இதில் அரசு எந்த விதத்திலும் பொறுப்பேற்கவில்லை என்பதைக் கண்டித்து வீதிகளில் இறங்கிப் போராடினர்.

பணியிடங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல் காரணமாகப் பெண்களே வேலையைவிட்டு நீக்கப்படுகின்றனர். அவர்களைப் பணியிலிருந்து நீக்குவதன் வாயிலாக அரசு, தனியார் நிறுவனங்கள் தங்கள் கடமையிலிருந்து தப்பித்துக்கொள்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் இப்படியொரு சூழலில் வேலையின்றி நிராதரவாக நிற்பதைச் சுட்டிக்காட்டிப் பெண்கள் அமைப்பினர் போராடினர்.

பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவது வேலை வழங்கும் நிறுவனங்களின் பொறுப்பு என்பதை வலியுறுத்தியும் பன்வாரி தேவிக்கு நீதி கேட்டும் ‘விசாகா’ என்கிற பொதுவான பெயரில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவைப் பெண்கள் தாக்கல்செய்தனர்.

அதன் விளைவாக 1997இல் உருவாக்கப்பட்டதுதான் பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான ‘விசாகா நெறிமுறைகள்’. எவையெல்லாம் பாலியல் சீண்டல், பணி வழங்கும் நிறுவனமும் பணியாளரும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் போன்றவை அதில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

- ப்ரதிமா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE