இந்திய சினிமா நூற்றிப் பத்து வயதை நெருங்கிவிட்டது. சுதந்திரத்துக்குப் பிந்தைய கடந்த 75 ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாழ்க்கைச் சித்திரங்களும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களும் பல மொழிகளில் வெளியாகியுள்ளன.
பெண்களுக்கு அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டிருந்த காலத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி லட்சுமி பாயின் வீரத்தையும் தியாகத்தையும் வெகுஜனத் திரையில் பதிவுசெய்தது சோரப் மோடி இயக்கித் தயாரித்த ‘ஜான்சி கி ராணி’ (1953). 1958இல் வெளியான வங்க மொழிப் படம் ‘பாகா ஜதீன்’ மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜதீந்திரநாத்தைப் பற்றியது.
தமிழ் சினிமாவின் பெருமிதம்
கறுப்பு-வெள்ளை காலத்தில் விடுதலை வேள்விக்கு தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஆளுமைகளைப் பற்றிய பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகின. காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக தேசியவாத சிந்தனைகளுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவரான சிவாஜி கணேசன், இதுபோன்ற படங்களில் பெருவிருப்பத்துடன் நடித்தார்.
» 75-வது சுதந்திர தினம்: விண்வெளியில் இருந்து இந்தியாவுக்கு வாழ்த்துச் செய்தி
» சல்மான் ருஷ்டி தாக்குதல் | 20 விநாடிகளில் 15 கத்திக்குத்து.. நடந்ததை விளக்கிய நிருபர்
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ (1959) திரைப்படத்தில் ஆங்கிலேயர்களை பகைத்துக்கொண்டதால் தூக்குமேடை ஏறிய பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மனுக்குத் திரையில் சிவாஜி புத்துயிர் அளித்தார். கட்டபொம்மனிடம் வரி கேட்கும் ஜாக்சன் துரையைப் பார்த்து ஆவேசமான குரலில் “எம்மோடு வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா..” என்று தொடங்கி அவர் பேசும் நெடிய வசனம், தமிழ் ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனத்திலும் ஆழமாகப் பதிந்த ஒன்று.
‘கப்பலோட்டிய தமிழன்’ (1961) திரைப்படத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உசிதம்பரனாரை கண்முன் நிறுத்தினார். தமிழகம் மறந்துவிட்ட ‘பெரும் தமிழர்' வ.உ.சியின் போராட்டம் ஓரளவுக்காவது பொது வெளியில் நினைவிருக்கிறது என்றால், அதற்கு இந்தத் திரைப்படமும் முக்கியக் காரணம்.
கவியரசர் கண்ணதாசன் தயாரித்த ‘சிவகெங்கை சீமை’ (1959), மருது சகோதரர்கள் என்றழைக்கப்படும் பெரிய மருது, சின்ன மருதுவின் தியாகத்தைப் பதிவுசெய்தது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்றறியப்படும் சிப்பாய்க் கலகத்துக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களும் தியாகங்களும் தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டன என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் மருது சகோதர்களின் வரலாற்றில் இருக்கின்றன. அதை அனைவருக்கும் கொண்டுசேர்த்தது இந்தப் படைப்பு.
விருது வென்ற திரைப்படங்கள்
இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராக ஆதிவாசிகளையும் விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி மறைந்திருந்து தாக்கும் கெரில்லாப் போரைக் கையிலெடுத்த பழங்குடித் தலைவர் அல்லூரி சீதாராம ராஜுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தெலுங்குப் படம் ‘அல்லூரி சீதாராம ராஜு’ (1976). கிருஷ்ணா நடித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், நந்தி விருதையும் வென்றது.
கேத்தன் மேத்தா இயக்கிய ‘சர்தார்’ (1994), மகாத்மா காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகப் பதவியேற்று இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபபாய் படேலின் வாழ்க்கையைப் பதிவுசெய்தது.
ஷியாம் பெனகல் இயக்கத்தில் வெளியான ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபர்காட்டன் ஹீரோ’ (2004) என்னும் இந்திப் படம், இந்தியாவுக்கு வெளியே இருந்தபடி இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டமைத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போர் தொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கைச் சித்திரம்.
தன்னுடைய புரட்சிகரக் கவிதைகளால் மக்கள் மனங்களில் விடுதலைக் கனலை மூட்டிய மகாகவி பாரதியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஞான. ராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’ (2000), சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை வென்றது. ‘தி லெஜண்ட் ஆஃப் பகத் சிங்’ (2002) பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்டு தூக்குதண்டனை பெற்ற புரட்சி வீரர் பகத் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. ராஜ்குமார் சந்தோஷி இயக்கிய இந்தப் படத்தில் நடித்ததற்காக அஜய் தேவ்கன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.
கேத்தன் மேத்தா இயக்கத்தில் ஆமிர் கான் நாயகனாக நடித்திருந்த ‘மங்கள் பாண்டே: தி ரைஸிங்’ (2005), 1857இல் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிவந்த இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒன்றுதிரண்டு போரிட்ட சிப்பாய்க் கலகம் தொடங்குவதற்கு முக்கியப் பங்களிப்பைச் செலுத்திய மங்கள் பாண்டேயின் சாகசங்களை பதிவுசெய்தது. எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய ‘பழசிராஜா’ (2009), கிழக்கிந்திய கம்பெனி விதித்த அநியாய வரிக்கு எதிராக வெகுண்டெழுந்து போர் புரிந்த கோட்டயம் அரசர் கேரள வர்மா பழசிராஜாவைப் பற்றிய மலையாளப் படம்.
இதில் மம்முட்டி நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் நான்கு பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
தவறவிடப்பட்ட வாய்ப்புகள்
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதிலுமிருந்து பொதுமக்களைத் திரட்டி அகிம்சை வழியிலான போராட்டத்தை வழிநடத்திய மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்று நாம் அழைத்தாலும், அவருடைய தன்னிகரற்ற வாழ்க்கையை திரைப்படமாகப் பதிவுசெய்த பெருமை ரிச்சர்ட் அட்டன்பரோ என்னும் ஆங்கிலேய இயக்குநருக்கே கிடைத்தது. பென் கிங்ஸ்லி காந்தியாக வாழ்ந்திருந்த ‘காந்தி’ (1982) எட்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது.
கரோனா ஊரடங்குக் காலத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான ‘சர்தார் உதம்’, ஜலியான்வாலா பாக் படுகொலை நிகழ்வுக்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஆளுநர் மைக்கேல் ஓ ட்வையரை லண்டனுக்குச் சென்று தலைமறைவாக வாழ்ந்து பழிதீர்த்த சோஷலிஸப் புரட்சியாளர் சர்தார் உதம் சிங்கை அனைவருக்கும் தெரியவைத்த சிறந்த வெகுஜனப் படைப்பு.
திரைப்படத் தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தி 1919இல் பஞ்சாப் மாகாணத்தின் ஜலியான்வாலா பாக்கில் பல அப்பாவிகள் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வை நேரில் கண்டது போன்ற அதிர்ச்சியையும் வலியையும் உணரவைத்த திரைப்படம் இது. பிரிட்டிஷார் மீதான வெறுப்பை முன்வைக்கிறது என்று இந்திய அரசால் நியமிக்கப்பட்ட நடுவர் குழு கூறியதால், இந்தியாவின் அதிகாரபூர்வ பரிந்துரையாக இந்தப் படம் ஆஸ்கருக்கு அனுப்பப்படவில்லை.
சினிமாவில் போராட்ட நிகழ்வுகள்
சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை கதைக் கருவாகவோ சில காட்சிகளாகவோ பயன்படுத்திக்கொண்ட ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன: சிவாஜி கணேசன் நடித்த ‘ராஜபார்ட் ரங்கதுரை’ திரைப்படத்தில் ஒரு நாடகக் காட்சியில் கொடி காத்த குமரனின் தியாகத்தை நினைவூட்டினார்.
பிரியதர்ஷன் இயக்கிய ‘காலாபானி’/’சிறைச்சாலை’ (1996) அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரம் செறிந்த பின்னணியையும் சிறையில் அவர்கள் எதிர்கொண்ட கொடுமைகளையும் உயிர்ப்புடன் பதிவுசெய்தது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்’ (1996) திரைப்படத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து போரிட்ட தமிழராக கமல் ஹாசன் நடித்திருந்தார்.
இந்திய தேசிய ராணுவத்தினருடன் நேதாஜி இருப்பது போன்ற நிஜக் காணொளித் துணுக்குகள் படத்தில் இடம்பெற்றன. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஆமிர் கான் நடித்த ‘ரங் தே பஸந்தி’ (2006) திரைப்படத்தில் பகத்சிங் உள்ளிட்ட புரட்சிப் படையினரின் தியாக நிகழ்வுகள் காட்சிகளாக இடம்பெற்றன
இன்னும் பல இந்தியத் திரைப்படங்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றையும் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையும் பதிவுசெய்துள்ளன. இன்னும் அறியப்படாத பல தியாகிகளும் சொல்ல விடுபட்ட நிகழ்வுகளும் திரைப்படமாக்கப்படாமல் இருக்கின்றன.
இன்றைய இளம் இயக்குநர்கள் இது போன்ற திரைப்படங்களை படைக்க முன்வர வேண்டும். அவற்றின் மூலம் சுதந்திரப் போராட்டத்தின் மகத்துவத்தை இன்னும் பலர் உணர்ந்து, பொறுப்புள்ள குடிமக்களாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். படைப்பாளிகள் நாட்டுக்கு ஆற்றும் சிறந்த பங்களிப்பாகவும் அது அமையக்கூடும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago