சுதந்திரச் சுடர்கள் | ஒன்றுபட்ட இந்தியா

By செய்திப்பிரிவு

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மொழிவாரி மாநில கோரிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமய்யா தலைமையில் (ஜேவிபி) துணைக் குழுவின் அறிக்கை, ஆந்திர மாநிலத்தை மட்டும் உருவாக்கலாம் என்று அனுமதித்தது.

அதைக்கூட மொழி அடிப்படையிலானதாக அது கருதவில்லை. இருப்பினும் அந்த அறிக்கைக்குப் பிறகு மொழிவாரி மாநில கோரிக்கைகள் படிப்படியாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. தனி ஆந்திர மாநிலம் கோரி பொட்டி ஸ்ரீராமுலு மதராஸ் மாகாணத்தில் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில், அவர் உயிரிழந்த பிறகு போராட்டம் தீவிரமடைந்தது.

பொட்டி ஸ்ரீராமுலு

மக்கள் போராட்டம்

மதராஸ் மாகாணத்தின் மலபார் பகுதியில் முன்னாளில் கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தானங்களின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளை இணைத்து ஐக்கிய கேரளம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற போராட்டம் மக்களுடைய ஆதரவைப் பெற்றது.

கம்யூனிஸ்டுகள் அதில் முக்கியப் பங்கு வகித்தனர். பம்பாய் மாகாணத்திலும் மகாராஷ்டிரம், குஜராத் என்று இரண்டு தனித்தனி மாநிலங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற் கான போராட்டம் வலுவடையத் தொடங்கியது.

இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் ஆரம்ப விதை, தேசிய சித்தாந்தத்திலிருந்துதான் ஏற்பட்டது, காங்கிரஸ் கட்சியே இதை நிறைவேற்றித்தருவதாக உறுதிமொழி அளித்திருந்தது என்பவை உண்மைகளாக இருக்க, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் நிலை நேரெதிராக மாறிவிட்டது.

இந்தப் போராட்டங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவையாகப் பார்க்கப்பட்டு, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

சில வட இந்திய மாநிலங்களின் நில எல்லைகளில் மட்டும் சிறிதளவு மாறுதல்களைச் செய்ய ஜேவிபி அறிக்கை அனுமதி தந்தது. கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய தனி மாநில கோரிக்கைகளை, அவற்றை எழுப்ப இது சரியான நேரமல்ல என்று நிராகரித்தது.

மாநில மறுசீரைமப்பு ஆணையக் கூட்டத்தில் மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஜவாஹர்லால் நேரு

விசால ஆந்திரா கோரிக்கையை மட்டும் ஏற்ற ஜேவிபி அறிக்கை, மதராஸ் பட்டணம் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது அப்படியே கிடப்பில் போட்டது.

ஆந்திர மாநில கோரிக்கையை ஏற்றாலும், மொழிவாரி மாநிலப் பிரிவினை கூடாது என்று கூறியதால், ஆந்திர மாநிலம் அமைவதும் உடனடியாக மேற்கொள்ளப்பட மாட்டாது என்பது தெளிவாகிவிட்டது. தனி ஆந்திர மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் மேலும் சில ஆண்டுகள் நீடித்தது.

பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த பிறகுதான் 1953 அக்டோபர் 1இல் ஆந்திரம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி மொழிவாரி மாநிலங்கள் தொடர்பான தன்னுடைய நிலையை அப்படியே நேரெதிராக மாற்றிக்கொண்டதால் வன்முறை நிறைந்த போராட்டங்களுக்கு வழியமைத்துவிட்டது.

காங்கிரஸின் இந்த நிலையால் மொழிவாரி மாநிலங்களுக்கு ஆதரவாக ஒலித்த வெறியற்ற குரல்கள் வலுவிழந்து, எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பிரிவினைவாத கோஷங்கள் வலுவடையும் நிலை ஏற்பட்டது.

மாநில மறுசீரமைப்பு ஆணையம்

இந்தப் பின்னணியில்தான் 1953 டிசம்பரில் மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் (எஸ்ஆர்சி) உருவாக்கப்பட்டது. மாநிலங்களை மறுசீரமைப்பது தொடர்பாக விருப்பு-வெறுப்பில்லாமலும் திறந்து மனத்துடனும் ஆராயுமாறு ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

1955 ஜூன் 30க்குள் அறிக்கை தர வேண்டும் என்று முதலில் பணிக்கப்பட்ட அந்த ஆணையத்துக்கு 1955 செப்டம்பர் 30 வரையில் கால நீட்டிப்பு தரப்பட்டது. மொழிவாரியாகத்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் புறக்கணிக்க ஆணையத் தால் முடியவில்லை.

தேசப் பிரிவினையால் அச்சமேற்பட்டு எதிர்மறையான அணுகுமுறைக்குச் சென்ற காங்கிரஸ் தலைமையிடமும் மாற்றங்கள் ஏற்பட்டன.

மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்று சுதந்திரத்துக்கு முன்னதாக தேசிய இயக்கம் கொண்டிருந்த உணர்வு மாநில மறுசீரமைப்பு ஆணையத்தையும் தொற்றிக்கொண்டது. “இப்போதுள்ள மாநிலங்களின் அமைப்பு பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்தும்போது நேரிட்ட விபத்துகளாலும் சூழல்களாலும் ஏற்பட்டவையே.

தேசியவாத உணர்வு மக்களிடையே தலையெடுத்திருப்பதால், வெறும் நிர்வாக வசதிக்கான கண்ணோட் டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாணப் பிரிவினைகளை உரிய நடவடிக்கைகள் மூலம் சமப்படுத்துவது அல்லது எதிர்சமன் படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மூலம் சரிசெய்தாக வேண்டும்” என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

தேசிய ஒருமைப்பாடு, நிர்வாக வசதி, செலவுகளைக் குறைப்பது என்று பல்வேறு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தாலும் மொழிவாரியாக மாநிலங்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் விட்டுவிடவோ, ஒத்திப்போடவோ முடியாது என்பதை ஆணையம் வலியுறுத்தியது.

எனவே, அது ஏற்படுத்திய வழிகாட்டி நெறிகள் யதார்த்த நிலைக்கு மிகவும் அணுக்கமாகவே இருந்தன. தேசிய இயக்கம் கொண்டிருந்த உணர்வுக்கும் அது நெருக்கமாக இருந்தது.

தனி மாநிலமாக ஆந்திரா - தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்

ஹைதராபாத் பகுதியில் இருந்த தெலுங்கு மொழி பேசும் மாவட்டங்களை ஆந்திர மாநிலத்துடன் சேர்த்துவிட வேண்டும் என்று மாநில மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்தது. மதராஸ் மாகாணத்தில் இருந்த மலபார் மாவட்டமும் கொச்சி – திருவிதாங்கூர் சமஸ்தானங்களுக்கு உள்பட்ட பகுதிகளும் இணைக்கப்பட்ட கேரளம் உருவாக்கப்பட வேண்டும் என்றது.

அதே போல மைசூர் மாநிலத்துடன் பம்பாய் – ஹைதராபாத் பிரதேசங்களில் கன்னடம் பேசியவர்கள் வசித்த பகுதிகளையும் மதராஸ் மாகாணத்தின் சில பகுதிகளையும் இணைத்து கர்நாடகம் உருவாக்கப்பட ஆணையிட்டது.

மராட்டி பேசும் மக்களைக் கொண்ட பகுதிகளுடன் பம்பாய் மாகாணத்தைத் தனி பகுதியாகப் பிரிக்க வேண்டும், விதர்பா பிரதேசம் தனி மாநிலமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. விதர்பா இதுவரையில் மகாராஷ்டிரத்திலிருந்து பிரிக்கப்படவில்லை.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளிலும் சிறிய மாற்றங்களைச் செய்ய அது பரிந்துரைத்தது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற கருத்தை மாநில மறுசீரமைப்பு ஆணையமும் சரியென்று ஏற்றுக்கொண்டது என்பதுதான்.

இது தொடக்கம்தான். மாநில மறுசீரமைப்பு ஆணையம் 1956-ல் அளித்த அறிக்கை அடிப்படையில் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பம்பாய் மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு குஜராத்தி பேசும் மக்களுக்காக குஜராத் என்னும் தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. பம்பாயுடன் பிற மராட்டிய பகுதிகள் இணைந்து மகாராஷ்டிரம் என்ற புதிய பெயரைப் பெற்றது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து மதராஸ் மாகாணத் துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. பஞ்சாப் மாநிலம் - பஞ்சாப், ஹரியாணா, இமாசலப் பிரதேசம் என்று மூன்றாகப் பிரிக்கப் பட்டது. இதே அடிப்படையில் வட கிழக்கில் அசாம் என்ற பெரிய மாநிலத்திலிருந்து ஏழு மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.

பின்னோக்கிப் பார்க்கும்போது, காங்கிரஸ் அஞ்சியதைப்போல மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பதற்குப் பதிலாக ஒற்றுமைப் படுத்தியிருக்கிறது. மத்திய அரசு வலுவாக இருந்தால்தான் நாட்டின் ஒருமைப்பாடு காக்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை, கூட்டாட்சித் தத்துவத்துக்கு கணிசமான சேதத்தையே விளைவித்தது. மொழிவாரி மாநிலங்கள் என்ற கொள்கை தேசிய இயக்கத்தின் நெறிமுறைகளுக்கு இயைந்ததாகவே இருக்கிறது.

நன்றி: ‘தி இந்து’ ஆவண காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்