சுதந்திரச் சுடர்கள் | கலை: ஒற்றுமையின் இசை மொழி!

By வா.ரவிக்குமார்

இந்தியாவின் ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கும் கயிறாகப் பல கலைஞர்கள் தங்களின் பங்களிப்பைச் செலுத்தியிருக்கின்றனர். அவர்களில் தன்னிகரில்லாத புகழுக்கும் பெருமைக்கும் உரியவர்களில் முக்கியமானவர், பீம்சென் ஜோஷி.

1988இல் இந்தியாவின் சுதந்திர திருநாளில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் ‘மிலே சுர் மேரா தும்ஹாரா' என்னும் பாடல் வெளியானது. இந்தியாவின் பெருமைமிகுந்த கலைஞர்கள் பலரும் இந்தப் பாடலில் பங்களித்திருப்பார்கள்.

இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, அசாமி, வங்க மொழி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, கஷ்மீரி, சிந்தி, உருது உள்ளிட்ட பதினான்கு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். இந்தப் பாடலுக்கு இசையை அமைத்தவர் பண்டிட் பீம்சென் ஜோஷி.

இந்தியாவின் ரத்த நாளங்களாக ஓடும் நதிகள், பீடபூமிகள், கடற்கரைகள், மலைச் சிகரங்கள், பள்ளத்தாக்குகள், வயல் வெளிகள், பாலைவனங்கள் எனப் பல்வேறு நிலப்பரப்புகளில் மண் சார்ந்த கலைஞர்கள் பாடும் காட்சிகள் பதிவாகியிருக்கும்.

வெவ்வேறு மண் சார்ந்த மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் கொண்டிருந்தாலும் நாம் அனைவரும் இந்தியரே என்னும் உயர்வான விழுமியம் பாடலின் கருப்பொருளாக இருக்கும்.

‘இசைந்தால் நம் இருவரின் சுரமும் நமதாகும்’ என்னும் வரிகளைத் தமிழில் பாடியிருப்பார் பாலமுரளி கிருஷ்ணா. இந்த இசைத் தொகுப்பின் ஆரம்பத்தில் பன்னீர் தெளித்து மயிலிறகால் நம்மை வருடிக்கொடுக்கும் குரலில் பாடலைத் தொடங்கியிருப்பார் பீம்சென் ஜோஷி.

அதே போல, `தீர்த்த விட்டல க்ஷேத்திர விட்டல’ என்று பண்டிட் பீம்சென் ஜோஷி பாட ஆரம்பித்தாலே போதும் மெய்சிலிர்க்கும் பக்தி அலை பொங்கி எழும். பண்டரிபுரத்தில் அருள்பாலிக்கும் அந்த பாண்டுரங்கனே நேரில் வந்து களிநடனம் புரிய ஆரம்பித்துவிடுவான்.

இன்னொருபுறம் `சதா எள்ளி ஹ்ருதயதல்லி’, `பாக்யதா லக்ஷ்மி பாரம்மா’ போன்ற அவரது தாய்மொழியான கன்னட மொழியில் அமைந்த பக்தி கீதங்கள் நம்மை வேறு உலகிற்கே அழைத்து சென்றுவிடும். சாஸ்திரிய இசை, திரை இசை இரண்டிலும் கோலோச்சிய பீம்சென்னின் நூற்றாண்டு இது.

- வா.ரவிக்குமார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE