மேலாண்மை வாரியம் மட்டுமே சர்வரோக நிவாரணி என்று சித்தரிக்கப்படும் நிலையில், அதன் அதிகாரப் போதாமை அச்சத்தைத் தருகிறது
ஆண்டாண்டு காலமாக நீடித்துக் கொண்டிருக்கும் காவிரி நீர்ச் சிக்கலைத் தீர்க்க மேலாண்மை வாரியத்தை அமைப்பது என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைவருமே வந்துவிட்டனர், கர்நாடக அரசைத் தவிர. அதைச் செய்த பிறகு, காவிரி நீரைத் திறந்துவிடுவதைத் தவிர, கர்நாடக அரசுக்கு வேறு வழியே இல்லை என்றெல்லாம் பேசப்படுகிறது. எனில், அந்த அளவுக்கு வானளாவிய அதிகாரம் கொண்டதா காவிரி மேலாண்மை வாரியம்?
நடுவர் மன்றம் காட்டிய வழி
உண்மையில், காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், தனது இறுதித் தீர்ப்பை முறையாகவும் உறுதி யாகவும் அமல்படுத்த இரண்டு அமைப்பு கள் வேண்டுமென்று சொல்லியிருந்தது. அவை, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு. அதோடு, அவற்றுக்கான பணிகளையும் அதிகார எல்லைகளையும் விரிவாகப் பேசியிருந்தது.
மத்திய நீர்ப்பாசனத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய மேலாண்மை வாரியத்துக்கு ஒரு முழு நேரத் தலைவரையும் இரண்டு முழு நேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்க வேண்டும். இவர்கள் நீர்த்தேக்க நிர்வாகம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் 15 முதல் 20 ஆண்டுகள் விரிவான கள அனுபவமும் நிபுணத்துவமும் பெற்ற தலைமைப் பொறியாளர்களாக இருக்க வேண்டும்.
மேலும், மத்திய விவசாயத் துறையும் நீர்ப்பாசனத் துறையும் தலைமைப் பொறியாளர் / ஆணையர் அந்தஸ்து கொண்ட தலா ஓர் உறுப்பினரைப் பகுதி நேர உறுப்பினர்களாக வாரியத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும். அடுத்து, தமிழ் நாடு, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தலா ஓர் உறுப்பினரை வாரியத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும். இவர்கள் பொதுப்பணி/விவசாயம்/நீர்வளத் துறையைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் அந்தஸ்தில் இருக்க வேண்டும். இறுதியாக, வாரியத்தின் செயலாளர். இவர் சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சாராத கண்காணிப்புப் பொறியாளர் அந்தஸ்து கொண்டவர்.
வாரியக் கூட்டத்தை நடத்துவதற்கான குறைவெண் (Chorum) 6. அது இல் லாததன் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட கூட்டத்தை அடுத்த மூன்று நாட்களுக்குள் கூட்டியாக வேண்டும். வாரியத்தில் விவாதிக்கப்பட்டு, எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் பெரும்பான்மை அடிப்படையிலானது.
மத்திய அரசின் ஒப்புதலுடன் மேலாண்மை வாரியம் நிறுவப்பட்ட நொடியிலிருந்து தமிழகத்தின் கீழ்பவானி, அமராவதி, மேட்டூர், கர்நாடகத்தின் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், கேரளாவின் பாணாசுரசாகர் ஆகிய அணைகள் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலின்படியே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் இயக்கப்பட வேண்டும். கவனிக்கவும்: கட்டுப்படுத்த முடியாது, வழிகாட்ட மட்டுமே இயலும்.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவை உருவாக்குவது மேலாண்மை வாரியத்தின் முதல் பணி. நீர்ப்பாசனத் துறையிலிருந்து ஒரு முழு நேர உறுப்பினர், சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள், மத்திய நீர் ஆணையத்தின் பிரதிநிதி, மத்திய விவசாய அமைச்சகப் பிரதிநிதி, காவிரி மேலாண்மை வாரியச் செயலாளர் ஆகியோரைக் கொண்ட குழுவாக இந்த ஒழுங்காற்றுக் குழு நிறுவப்படும்.
ஒழுங்காற்றுக் குழுவின் பணிகள்
அனைத்து அணைகளிலும் இருக்கும் நீரின் அளவு, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையின் அளவு குறித்த தகவல்களைச் சேகரிப்பது, வாரியத்தின் வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நீரைத் திறந்துவிடுவது, பருவகால, வருடாந்திர அறிக்கை தயாரிப்பு ஆகியன இந்த ஒழுங்காற்றுக் குழுவின் முக்கியமான பணிகள். இவற்றுக்குத் தேவைப்படும் பணியாளர்களை மேலாண்மை வாரியமே நியமித்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டின் ஜூன் முதல் தேதியன்றும் அந்த ஆண்டுக்கான நீர்த் தேவை குறித்து ஒவ்வொரு மாநில அரசும் தத்தமது பிரதிநிதிகளின் வழியே மேலாண்மை வாரியத்துக்கு அறிக்கை தந்துவிட வேண்டும். பாசனப் பரப்பு, சாகுபடிப் பருவம் ஆகியவற்றை ஆய்வுசெய்து, நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நீரைத் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு உத்தரவிடுவது மேலாண்மை வாரியத்தின் பணி. பற்றாக்குறை காலங்களில், நடுவர் மன்றத் தீர்ப்பு குறிப்பிட்டிருக்கும் விகிதத்தின்படி நீர்ப்பங்கீட்டு அளவை வாரியம் நிர்ணயிக்கும்.
அணைக்கட்டுகளில் தேவைப்படும் ஹைட்ராலிக் கட்டமைப்புகளை உருவாக் கவும், அளவீட்டுக் கருவிகளைப் பொருத் தவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தர விடுவதும், பணிகளைக் கண்காணிப்பதும் வாரியத்தின் வரம்புக்கு உட்பட்டவை. வாரியம் விரும்பினால் எப்போது வேண்டுமானா லும் நீர்த் தேக்கங்களில் சேமிக்கப்பட் டிருக்கும் நீரின் அளவு, மழைநீர் அளவு, திறந்துவிடப்பட்ட நீரின் அளவு, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு தொடர்பான விவரங்களைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து கேட்டுப் பெற முடியும்.
மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்கள்
மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் விரும்பினால், எந்தவொரு அணைக்கட்டு, நீர்த் தேக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் எப்போது வேண்டுமானாலும் நேரில் சென்று பார்வையிடுவது, தகவல்களைக் கோருவது, அளவீட்டுக் கருவியைப் பொருத்தும் பணிகளைப் பார்வையிடுவது, கேள்வி எழுப்புவது, குறைகளைச் சுட்டிக்காட்டுவது, தேவையெனில் பணிகளை நிறுத்துவது போன்றவற்றைச் செய்ய முடியும்.
இறுதியாக, மேலாண்மை வாரியத் தின் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒத்துழைக்க மறுத்தால், அவற்றின் மீது மத்திய அரசின் உதவியைக் கேட்க முடியும். இந்த இடம்தான் நெருடலைத் தருகிறது. மத்திய அரசின் உதவி என்றால் எப்படியானது என்ற தெளிவு இல்லை.
அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு உதவி செய்யத் தயங்கவோ, மறுக்கவோ செய்தால், மேலாண்மை வாரியத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? தனக்கிருக்கும் வழக்கு தொடரும் உரிமையைப் பயன்படுத்தி, திரும்பவும் உச்ச நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமா? ஒருவேளை உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளைப் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னால், ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நிற்க வேண்டுமா? எனில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததன் நோக்கமே அடிபட்டுப் போகுமே?
மேலாண்மை வாரியம் மட்டுமே சர்வரோக நிவாரணி என்று சித்தரிக்கப்படும் நிலையில், அதன் அதிகாரப் போதாமை அச்சத்தைத் தருகிறது. ஏனென்றால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே உதாசீனம் செய்யும் கர்நாடக அரசு, வலுவான, உறுதியான, தெளிவான அதிகாரங்கள் இல்லாத மேலாண்மை வாரியத்தின் முடிவுக்குக் கட்டுப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதில், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மத்திய அரசு வகுத்துக் கொடுக்கவிருக்கும் விரிவான அதிகார எல்லைகளில் உறைந் திருக்கிறது!
- ஆர்.முத்துக்குமார், ‘கச்சத்தீவு’, ‘மதுவிலக்கு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago