அரசின் எல்லா திட்டங்களிலும் பேரழிவு மேலாண்மை பற்றிய புரிதலும், முன்னேற்பாடுகளும் இருக்க வேண்டும்
கடலின் அடியில் 2004 டிசம்பர் 26-ல் நிலம் நடுங்கியது. காலைச் சிற்றுண்டி சாப்பிடுகிற நேரம். வாயைப் பிளந்துகொண்டே வந்தது சுனாமி. 2.3 லட்சம் பேரை வாரிச் சுருட்டிக்கொண்டு போனது. இந்தோனேஷியா, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைப் பதம் பார்த்த அந்தச் சுனாமிதான் பேரழிவு பற்றிய புதிய பாடத்தைக் கற்றுத் தந்தது.
தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் 373 கிராமங்களில் 1.5 லட்சம் குடியிருப்புகள் சேதம். 8,036 மனிதர்களும் 16,519 கால்நடைகளும் பலி. தப்பி ஓடியவர்கள் ஐந்து லட்சம்.
பேரழிவு மேலாண்மைச் சட்டம் பிறக்க சுனாமிதான் காரணம். இயற்கையாலும் மனிதராலும் தற்செயலாகவும் ஏற்படுகிற பேரழிவுகளை இந்தச் சட்டம் கணக்கில் கொள்கிறது. அரசின் எல்லா திட்டங்களிலும் பேரழிவு மேலாண்மை பற்றிய புரிதலும் அதற்கான முன்னேற்பாடுகளும் இருக்க வேண்டும் என்று சட்டம் எதிர்பார்க்கிறது.
சென்னையின் பின்னடைவு
பேரழிவுக்கு முந்தைய கட்டம், தாக்கும் கட்டம், பிந்தைய கட்டம் என மூன்று வகையாகவும் பேரழிவு மேலாண்மை செயல்பட வேண்டும் என்றும் அது வழிகாட்டுகிறது. வருமுன் காப்பது முதல் கட்டச் செயல்பாடு. பேரழிவுகள் நிகழும்போது சேதங்களைக் குறைப்பது இரண்டாம் கட்டம். பேரழிவுக்குட்பட்ட பகுதிகளையும் மக்களையும் பழைய நிலைக்கு மீட்பது மூன்றாவது கட்டம். இந்தப் புரிதல் நமக்குச் சரியாக இருக்கிறதா என்று சோதிக்க வந்ததே சென்னை வெள்ளம். அதில் நாம் தேறவில்லை.
கன மழையால் ஆறுகளில் தண்ணீர் அளவுக்கு அதிகமாகப் பாய்ந்து, கரைகள் உடைக்கப்படுவதே வெள்ளம். 1980-ல் சென்னை நகரின் தண்ணீர் தேங்கும் பகுதி 80% ஆக இருந்தது. 30 ஆண்டுகளில் 15% ஆகக் குறைந்துவிட்டது என்கிறது ‘கேர் எர்த்’ அறக்கட்டளை. குளங்களும் ஏரிகளும் அடுக்குமாடி வீடுகளாகிவிட்டன. தேங்க இடமில்லாமல் தண்ணீர் தவிக்கும்போது, அதை மழைநீர் வடிகால்கள் மூலம் கடத்திவிடுவதற்கான ஏற்பாடுகளும் குறைவு. வெள்ளத்தில் சென்னை, தவித்ததற்கு இதுவும் காரணங்கள்.
100 வருடங்கள் இல்லாத அளவுக்கு அதிகமான மழை பெய்ததால் எதுவும் செய்ய முடியவில்லை. யாராலும் எதையும் செய்ய முடியாது என்றும் சிலர் பேசினார்கள். அது சரியானதல்ல. விஞ்ஞானரீதியான வானிலை முன்னறிவிப்பு நம் நாட்டில் 1958-லேயே தொடங்கிவிட்டது. அறிவிப்புகளின் துல்லியம் 81 % முதல் 98 % ஆக உயர்ந்தும் உள்ளது. கணிப்பில் ஏற்பட்ட முன்னேற்றம், வருமுன் காப்பதில் வெளிப்படவில்லை என்பதுதான் பிரச்சினை.
சமூக சேவகர் படை
பொதுவாக, தமிழகத்தின் வங்காள விரிகுடா கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் புயல்களும் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். ஆந்திரத்தில் உருவாகிற அளவுக்கு இல்லை என்றாலும், தமிழகக் கடலோரப் பகுதியும் அபாயங்களைச் சந்திக்கும் பகுதியே.
இந்தியாவில் எட்டு மாநிலங்கள்தான் வெள்ளம் உள்ளிட்ட நெருக்கடியான சூழல்களில் எப்படிச் செயல்படுவது என்பதற்கான திட்டங்களைத் தயாரித்துள்ளன என்கிறது தலைமைக் கணக்காயர் அறிக்கை. அதில் தமிழகம் இல்லை. “மாநிலங்கள் மட்டுமல்ல; 2011 நிலவரப்படி நாட்டில் 4,728 அணைகள் உள்ளன. இவற்றுக்கான ஒரு தேசியச் செயல்திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சகம்கூட உருவாக்கவில்லை” என்கிறது அது.
தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற முன்னறிவிப்பு கடந்த ஆண்டில் தமிழக அரசுக்கு முன்னதாகவே சொல்லப்பட்டது. ஆனாலும், இத்தகைய பேரழிவுகளை எதிர்கொள்வதற்காக மத்திய அரசு பயிற்றுவித்துள்ள படைப் பிரிவுகளைத் தமிழக அரசு போதுமான அளவு கேட்டுப்பெறவில்லை என்கிறது அறிக்கை. மேலும் சில படைப் பிரிவுகள் இருந்திருந்தால் மீட்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்திருக்கும்.
ஒவ்வொரு மாநிலமும் 300 முதல் 800 வரையிலான எண்ணிக்கையில் தனக்கான சொந்தப் படையைப் பயிற்சியளித்துப் பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது மத்திய அரசின் வழிகாட்டல். ஆனால், 2012 வரையிலும் பிஹார், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் நாகாலாந்து எனும் ஏழு மாநிலங்கள் மட்டுமே அதைச் செய்துள்ளன. இந்தப் படை இல்லாத விளைவைத்தான் சென்னை கடந்த வெள்ளத்தில் அனுபவித்தது. சமூகத்தில் தன்னெழுச்சியாக எழுந்த புதிய தலைமுறை சமூகச் சேவகர் படை நிரப்பியதும் இந்த இடைவெளியைத்தான்.
இது விஷயத்தில் இந்தியத் தலைமைக் கணக்காயரின் விமர்சனங்கள் புதிதல்ல. 2013 மே 15 -ல் தமிழகத்தின் சட்டப் பேரவையிலும் ஒரு அறிக்கை முன்வைக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களான கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலியில் “நெருக்கடிகால மையங்கள் தயார் நிலையில் இல்லை” என்று அது விமர்சித்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டமான கடலூரில் உள்ள 59 முன்னெச்சரிக்கை மையங்களில் 14-ம், நாகப்பட்டினத்தில் உள்ள 30 மையங்களும் செயல்படும் நிலையில் இல்லை. இவை செயல்பாட்டில் இருந்திருந்தால், 2011-ல் ‘தானே புயல்’ தமிழகத்தைத் தாக்கியபோது கடலோரக் கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கான தகவல் தொடர்பு எளிதாக இருந்திருக்கும்.
சீரழிவில் பேரழிவு மேலாண்மை
பேரழிவு மேலாண்மைச் சட்டப்படி ஆரம்பிக்கப்பட்ட ‘அவசரகாலச் செயல்பாட்டு மையங்கள்’ அரசின் மற்ற துறைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பேரழிவு மேலாண்மைக்காக ஒதுக்கப்பட்ட சாதனங்கள் கவனிப்பாரில்லாமல் கிடக்கின்றன அல்லது மற்ற துறைகளால் பயன்படுத்தப்பட்டன.
உயிர் காக்கும் உடைகளும் கணினிகளும் பிரின்ட்டர்களும் கன்னியாகுமரியில் நில அளவைத் துறையின் பழைய பொருட்களைப் போட்டுவைக்கும் அறையில் போடப்பட்டிருந்தன. தூத்துக்குடியில் பேரழிவு மேலாண்மைத் துறையை எயிட்ஸ் கட்டுப்பாடு மையம் ஆக்கிரமித்துள்ளது. திருநெல்வேலி மையத்துக்குத் தரப்பட்ட உயிர்காக்கும் சாதனங்கள் நான்கு ஆண்டுகளாகப் பிரிக்கப்படாமல் இருந்துள்ளன. மாவட்டங்களில் உள்ள எந்த ஒரு பேரழிவு மேலாண்மை மையத்துக்கும் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அறிக்கை விமர்சிக்கிறது.
இதற்கு எல்லாம் கிரீடம் வைத்தாற்போல ஒன்று, பேரழிவு மேலாண்மைக்காக 2008-ல் உருவாக்கப்பட்ட முதல்வர் தலைமையிலான மாநில அளவிலான குழுவும் ஆறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட மாவட்டக் குழுக்களில் ஐந்தும் ஒரு முறைகூடக் கூடி விவாதிக்கவில்லை என்கிறது அந்த அறிக்கை. பேரழிவு மேலாண்மையின் அவசியத்தை யாரும் மதிக்கவில்லை என்பதற்கு இதுவே ஆதாரம்.
இந்நிலையில், இன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்?
தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago