செவ்வாய்க் கோளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட ஓர் இயற்பியல் அறிவியலாளர், அந்த ஆய்விலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, “வாருங்கள், புவிக்கோளைப் பற்றி முதலில் கற்றுக்கொள்வோம்’’ என்று கூறினால் எப்படி இருக்கும்? அதுபோல உயர் தொழில்நுட்பக் கருவிகளைக் கண்டறிந்த ஓர் அறிவியலாளர், சுற்றுச்சூழல் சிக்கல்களைத் தொழில்நுட்பரீதியில் தீர்த்துவிட முடியும் என்று நம்பும் அரசியல்வாதிகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்புவதைக் கற்பனை செய்துபாருங்கள்.
இந்த இரண்டு அறிவியலாளரும் ஒருவரே. அவர்தான் ‘கையா’ என்னும் கருதுகோளை அறிமுகப்படுத்திய அறிவியலாளர் ஜேம்ஸ் லவ்லாக். கையாவுக்கு எதிராக எத்தனையோ கேலிகள், எத்தனையோ எதிர்ப்புகள் எழுந்தன. அவ்வளவையும் புறந்தள்ளித் தன் ஆய்வை நிலைநிறுத்தினார் லவ்லாக். தெற்கு இங்கிலாந்திலுள்ள அவரது இல்லத்தில் தனது 103-வது வயதில், தன் பிறந்த நாளான ஜூலை 26 அன்றேக்கே இப்புவியிலிருந்து அவர் விடைபெற்றார். தன் குடும்ப உறுப்பினரைப் போலப் புவியிடத்து அன்பு செலுத்திய அவர்மீது, புவியும் தன் அன்பைச் செலுத்தி நிறைவாழ்வு வாழ அனுமதித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
சுற்றுச்சூழலியல் புரட்சி
இயற்பியல் ஆய்வாளராக நாசாவில் பணியாற்றியவர் லவ்லாக். வளிமண்டலத்தின் ஸ்டிராட்டோஸ்பியர் அடுக்கில் குளோரோபுளூரோ கார்பன்கள் இருப்பதைக் கண்டறிந்து எச்சரித்தவர் அவரே. அவையே ஓசோன் படலத்தின் மெலிவுக்குக் காரணம். மேலும் அவர் கண்டுபிடித்த Electron Capture Detector கருவிதான், சுற்றுச்சூழலில் மாபெரும் புரட்சி உருவாக அடிப்படைக் காரணமானது.
வேறொரு நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அக்கருவி, அண்டார்க்டிகாவின் பென்குயின் பறவையில் தொடங்கி, நம் தாய்மார்களின் தாய்ப்பால் வரை அனைத்து உயிரிகளின் மீதும் படிந்துள்ள பூச்சிக்கொல்லிகளின் எச்சத்தைக் கண்டறிய உதவியது. அந்தக் கண்டுபிடிப்பே ரேச்சல் கார்சன் ‘மௌன வசந்தம்’ நூலை எழுதுவதற்கு அடிப்படையானது. அந்நூலே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உலகெங்கும் பரப்பியது.
லவ்லாக் மட்டும் அக்கருவியைக் கண்டுபிடித்திருக்கவில்லை என்றால், உலகளாவிய சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வு பல்லாண்டுகள் பின்தங்கி தாமதமாகவே தொடங்கியிருக்கும். அதற்குள், நாம் நிறைய இழப்புகளை எதிர்கொண்டிருப்போம். அவ்வகையில், சுற்றுச்சூழலியல் ஆர்வலர்கள் அவருக்கு நிறையவே கடமைப்பட்டுள்ளனர்.
உயிரைத் தேடிய பயணம்
இயற்பியல் அறிவியலாளரான அவருக்குள் ஒருகட்டத்தில் புவிக்கோளின் உயிரியல் இயக்கம் குறித்துக் கேள்விகள் எழுந்தன. புவியிலுள்ள உயிர்கள், காற்று, கடல், நிலம் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை என்றும், அவை கூட்டாக ஒருங்கிணைந்து புவியை ஒழுங்குபடுத்திக் கொள்வதாகவும் அவர் உணர்ந்தார். அதற்கான விடையை அறிவியல் நூல்களில் தேட முயன்றார்.
அவற்றில், உயிரிகளின் புறம் - அகம் பற்றிய ஏராளமான தகவல்கள் குவிக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் வேதியியல், இயற்பியல், பொறியியல் என்பது போன்ற தனித்தனி பார்வைகளாக இருந்தன. உயிரின் முழுமையான இயல்பு குறித்து அது மௌனமே சாதித்தது.
அதில் எங்காவது உயிரைப் பற்றிய சுருக்கச் செறிவான ஒரு வரையறை கிடைக்குமா என்று தேடினால், அது சிறிதளவு மட்டுமே தென்பட்டது தனக்கு ஏமாற்றமளித்ததாக லவ்லாக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அறிவியலைத் தனித்தனித் துறைகளாகப் பிரித்தது பகுதியளவு காரணமாக இருக்கலாம் என்கிறார்.
எனவே, அறிவியலைத் துண்டுகளாகப் பார்க்கும் பார்வையிலிருந்து விலகி, அதை முழுமையான பார்வைக்கு உட்படுத்தினார். அப்போதுதான் புவிக்கோளம் என்பது ஓர் அஃறிணைப் பொருளல்ல. தன்னளவில் ‘புவி ஒரு தனித்த உயிரி’ என்பதை அறிந்தார்.
அந்த உயிர்த்தன்மைக்கு ‘கையா’ என்று பெயரிட்டார். “உயிர் உள்ளிட்ட புவியின் ஒட்டுமொத்தப் புறப்பரப்பும் தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக்கொள்ளும் ஒரு பொருளாக (Entity) இருப்பதால் இதை நான் ‘கையா’ என்று பொருள் கொள்கிறேன். கையா என்பது வேறொன்றுமல்ல, அது தன்னலத்தோடு செயல்படும் ஒரு மரபணுவைப் போல வாழ்கின்ற ஒரு கோளைப் பற்றிய கதை” என்றார்.
காலநிலையின் அடிப்படை
கையா என்பது கிரேக்கப் பெண் கடவுளின் பெயர். எனவே, அறிவியலாளர்கள் பலருக்கு அது நவீன மதநம்பிக்கைப் போலத் தோன்றியதில் வியப்பில்லை. அக்கருத்தாக்கம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை, ‘ஒரு கற்பனைக் கதை’ என்றும், ‘நவீன காலத்தின் முட்டாள்தனம்’ என்றும் சாடினர். மாறாக, சுற்றுச்சூழலியல் ஆர்வலர்களிடம் கையாவுக்கு பலத்த வரவேற்பிருந்தது.
ஆனாலும், லவ்லாக் தன் கருதுகோளை வலுப்படுத்தும் அறிவியல் சான்றுகளைத் தேடிக்கொண்டே இருந்தார். அவர் சார்ந்த அறிவியலாளர்களும் அத்தேடலைத் தொடர்ந்தனர். அதற்கேற்றவாறு புவி தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான (Self regulating earth) அறிவியல் சான்றுகள் தொடர்ந்து கிடைத்தன.
இறுதியில், 2001-ல் ஆம்ஸ்டர்டாம் நகரில் கூடிய ஆயிரம் அறிவியலாளர்கள், ‘நமது புவிக்கோளம் இயற்பியல், வேதியியல், உயிரியல் கூறுகளை உள்ளடக்கியிருப்பதுடன் தன்னைத் தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் ஒற்றை அமைவாகவும் உள்ளது’ என்று அறிவித்தனர்.
அதுவரை கேலிகளையும் பகடிகளையும் சந்தித்து வந்த லவ்லாக் அன்று கட்டாயம் மகிழ்ந்திருப்பார். அதே வேளை, சில அறிவியலாளர்கள் ‘கையா’ என்ற பெயருக்கு மாற்றாக ‘புவி ஒருங்கு அறிவியல்’ (Earth system science) அல்லது ‘புவி உடற்செயலியல்’ (Geophysiology) என்கிற பெயர்களை முன்மொழிந்தனர். எந்தப் பெயராக இருந்தாலும் அதுவரை நகையாடப்பட்ட லவ்லாக்கின் ‘கையா’தான் இன்று காலநிலை அறிவியலின் அடிப்படையாக விளங்குகிறது.
இளைப்பாறுங்கள்!
காலநிலை வல்லுநர் மிலன்கோவிச் கூறுவார்: “ஞாயிறைச் சுற்றும் புவியின் சுற்றுவட்டப் பாதையில் ஏற்பட்ட சிறு மாற்றங்களின் விளைவே அண்மைக் காலத்தின் பனி யுகம். புவியின் ஒரு அரைக் கோளத்தில் பெறப்படும் வெப்பத்தில் இரண்டு விழுக்காடு குறைந்தாலும் அது ஒரு பனி யுகத்தை உருவாக்கப் போதுமானது.”
இன்றைக்குக் காலநிலை மாற்ற நெருக்கடியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்குக் கையா குறித்த அறிவின் தேவை கூடிக்கொண்டே போகிறது. கையா குறித்து லவ்லாக் எட்டு நூல்களை எழுதியிருந்தும் அவற்றுள், ஒரேயொரு நூல் மட்டுமே (‘கையா உலகே ஓர் உயிர்’ - சா.சுரேஷ், பாரதி புத்தகாலயம்) இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது நமது போதாமையைக் காட்டுகிறது.
சுற்றுச்சூழலியலாளர்கள் லவ்லாக்கைக் கொண்டாடினாலும், அவருடைய கருத்துகள் சிலவற்றுடன் முரண்படவும் செய்கிறார்கள். எனினும், ‘கையா’ சூழலியல் பாதையின் கைகாட்டிகளுள் ஒன்றாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆகவே, உங்களுடைய கையாவில் நீங்கள் நிம்மதியாக இளைப்பாறலாம் லவ்லாக்!
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்,
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago