பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் கல்லூரியில் என்ன பட்டப் படிப்பைத் தேர்வுசெய்யலாம் என்பது குறித்த உரையாடல் எதை நோக்கி நகர்கிறது என்பது முக்கியமானது. ‘கலை அறிவியல் பாடங்களைப் படித்தால் வேலை கிடைக்குமா? வளாக நேர்காணல் இந்தக் கல்லூரியில் நடக்கிறதா? படிக்கப்போகும் பாடத்துக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? எந்தெந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தரும்? எடுக்கப்போகும் பாடத்துக்கு அரசு என்ன வேலை இருக்கிறது? தகவல் தொழில்நுட்பம் - மென்பொருள் குறித்த பாடங்களைப் படித்தால் வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்பிருக்கிறதா?’ என்றுதான் பெரும்பாலும் பேசிக்கொள்வதைப் பார்க்க முடிகிறது.
பொருளாதாரம் படித்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் முன்னேறுவதற்குப் பங்களிக்கலாம் என்றோ சமூகவியலும் வரலாறும் படித்து, சமூக மாற்றத்துக்குப் பங்களிப்பு செய்யலாம் என்றோ யாரும் பரிந்துரைப்பதில்லை. மத்திய, மாநில அரசுகள் நடத்துகிற குடிமைப் பணிக்கான தேர்வுகளைத் தேர்ந்தெடுக்கத் தயாரா என்றும்கூடப் பெரும்பாலும் கேட்பதில்லை.
எல்லாம் வணிகமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் எந்தப் பாடம் படித்தாலும், எந்த வேலை செய்தாலும் அதன் மூலம் எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதைச் சுற்றியே மாணவர்கள், பெற்றோரின் எண்ணங்கள் வட்டமடிக்கின்றன.
ஒரு மாணவன் தன்னுடைய அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலமாக ஒரு இயந்திரம்போலச் செயல்படுகின்ற கருவியாகத் தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறான். அறிவை மட்டுமல்ல, மனத்தையும் பக்குவப்படுத்துவதுதான் நல்ல கல்வியாக இருக்க முடியும். கல்லூரிகளில் மாணவர்களுக்கு மனிதநேயத்தை மையப்படுத்திய, மனித மதிப்பீடுகளை வளர்க்கின்ற பாடங்களும் அவசியம் இடம்பெற வேண்டும்.
பொறியியல் படித்தாலும் கலை-அறிவியல் படித்தாலும் அவர்கள் பிறந்த மண்ணோடும் பண்பாட்டோடும் ஏதோ ஒரு வகையில் தொடர்புகொண்டு மாணவர்கள் படிக்கின்றபோது, சமூகம் குறித்து இன்னும் கூடுதலான புரிதலை அது ஏற்படுத்தும்.
கல்விக்கூடத்துக்கு வருகின்ற ஒவ்வொரு மாணவரும் தனிப்பட்ட திறமைகளோடும் ஆற்றலோடும்தான் வருகிறார்கள். அவற்றை ஒருமுகப்படுத்தி, மேலும் வளப்படுத்துவதுதான் சிறந்த கல்வி. ஆனால், நம்முடைய கல்வி முறை அதைச் சரியாகச் செய்கிறதா என்று தெரியவில்லை.
மாறாக, யாரோ தீர்மானித்த ஒரு கல்வி அமைப்புமுறையைப் பயன்படுத்தி, யாரோ தீர்மானித்த பாடத்திட்டத்தை நம்முடைய மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம். பலர் விரும்பியும், விரும்பாமலும் அந்தப் பாடத்தைப் படித்து, மதிப்பெண்கள் எடுத்து, அதோடு தம் கல்வியை முடித்துக்கொண்டுவிடுகிறார்கள். அவர்கள் பெற்ற கல்வி எந்த விதத்திலும் அவர்களிடத்தில் ஆரோக்கியமான பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு சூழலைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கல்வி அமைப்புமுறை எப்படி இருக்க வேண்டும் என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறுகின்றபோது, ‘கல்வி என்பது வெறும் புத்தகப் படிப்பு மட்டுமல்ல. அது ஒரு வேலைவாய்ப்புக்கான சான்றிதழ் மட்டுமல்ல.
மாறாக, ஒவ்வொருவரையும் முழு மனிதனாக மாற்றி, தன்னம்பிக்கையையும், சமூக அக்கறையையும், மனிதநேயத்தையும் வளர்ப்பதே உண்மையான கல்வி’ என்கிறார். ‘கல்வியின் தலையாய பணி, மாணவர்களைப் பிறருக்காக வாழ வைப்பதற்காகவும், பணியாற்றவும், இந்தச் சமூக மாற்றத்துக்கான கருவிகளாக உருவாக்குவதுமே’ என்று விவேகானந்தர் சொன்னார். அத்தகைய பணியைச் செய்கின்ற கல்விதான் சிறந்த கல்வி.
இப்படிப்பட்ட சிறந்த கல்வியை இன்றைய தலைமுறைக்குக் கொடுப்பதற்குப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசுகள் என்ன செய்ய வேண்டும்? பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகள் தங்களுடைய விருப்பப்படி படிக்க வேண்டும், தான் விரும்பிய புலத்தில் புலமை பெற வேண்டும், தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அவர்களிடம் கூறுவதும் வற்புறுத்துவதும் தவறானது.
அதற்கு மாறாகத் தங்களுடைய பிள்ளையின் திறமை என்ன? விருப்பம் என்ன? அவருடைய கனவும் ஆசையும் எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதை அறிந்து, அதற்கேற்ற வகையில் தங்களுக்கும் சமூகத்துக்கும் பயன்படுகின்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கான சுதந்திரத்தைப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் தர வேண்டும். ஆசிரியர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களிடம் உள்ள தனிப்பட்ட திறமைகள், ஆற்றல்கள், பொதிந்துகிடக்கிற நம்பிக்கைகள் ஆகியவற்றை வெளிக்கொணருகிற வகையிலே பாடங்களைக் கற்பிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் பார்வையில், அறிவியல், பொறியியல், மேலாண்மை, மருத்துவம் போன்ற படிப்புகளுக்குக் கொடுக்கின்ற அதே முக்கியத்துவத்தை மனிதநேயத்தையும் மனித மதிப்பீடுகளையும் வளர்க்கின்ற சமூகவியல், வரலாறு, பொருளாதாரம், மானுடவியல், மொழியியல், இலக்கியம், பண்பாடு போன்ற துறைகளுக்கும் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். அதுவே சீரான சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு வழிகோலும்.
- அ.இருதயராஜ், ‘மௌனம் கலைக்கும் ஜெய்பீம்’ நூலாசிரியர், தொடர்புக்கு: iruraj2020@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago