மாணவர்களுக்கு இலக்கியத்தைக் கொண்டுசெல்லும்போது மிகுந்த கவனம் தேவை.
கல்வியின் ஒரு நோக்கம் நம்மை நாமே பார்த்துக்கொள்ள உதவுவது. நம் உள்ளத்துக்குள் ஒளியைப் பாய்ச்சி ஒளிந்திருக்கும் இடங்களை நமக்கே காட்டுவது. இந்த ஒளி நாம் அமுக்கி வைக்கவோ மறந்துவிடவோ விரும்புவன வற்றையும் மேலெழுப்பி நம்மை நாமே விமர்சனம் செய்துகொள்ள உதவும்; நாம் நம் விருப்புவெறுப்புகளோடு, வாழும் சமூகத்தையும் விமர்சனத்துக்கு உட்பட வைக்கும். இலக்கியம் படிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இலக்கியம் பாடத்திட்டத்தில் சேரும்போது இரண்டின் நோக்கமும் இணைகின்றன. பாடத்திட்டத்தில் சேர்க்கும் இலக்கியப் படைப்பு பாரதியின் பாடல்களாக இருந்தாலும் புதுமைப்பித்தனின் கதைகளாக இருந்தாலும் இந்த நோக்கத்தை நிறைவேற்றப் பயன் படுவதற்காகவும் சேர்க்கப்படுகின்றன.
ஆனாலும், நடைமுறையில் பாடத்திட்டம் ஆதிக்க சக்திகளுக்குக் கண்ணாடி காட்டுவதாக, அவற்றை விமர்சிப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. பாடங்களின் தேர்வு, ஆதிக்கச் சித்தாந்தங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைவது. வன்முறையின் மூலம் ஏ.கே. ராமனுஜனின் ராமாயணம் பற்றிய கட்டுரையை டெல்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியதற்குக் காரணம் அது இந்து மதத்தைப் பற்றிய ஒரு ஆதிக்கச் சித்தாந்தத்துக்கு மாறாக இருந்ததுதான். சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டால், அது பாடத்தேர்வில் மாற்றம் கொண்டுவரலாம். ஆணாதிக்கம் இயல்பானது என்னும் உணர்வைத் தரும் பாடங்கள் கல்விமுறையில் இடம்பெறுவது இன்று குறைந்துவருகிறது. சாதி ஆதிக்கத்துக்கும் இது பொருந்தும்.
காலத்தின் கண்ணாடி
இலக்கியம், அது எழுதப்பட்ட காலத்தின் கண்ணாடி. அதைப் படிப்பது அதன் காலத்தோடு முடிவது அல்ல; நல்ல இலக்கியம் எந்தக் காலத்திலும் படிக்கும் ஒன்று. அது நம்மையும் நம் சமூகத்தையும் நாமே நமக்குள் விமர்சிக்க வைக்கும் ஒன்று. இலக்கியம் நமது முந்தைய தலைமுறையினர் இப்படியும் யோசித்தார்களா, நடந்தார்களா என்று நம்மைக் கேட்க வைக்கும். இந்தக் கேள்வி சாதகமாகவும் பாதகமாகவும் கேட்கப்படலாம். பாதகமாக இருக்கும்போது அந்த இலக்கியத்தைப் படிக்க வேண்டாம் என்று சொல்வது கண்ணாடியை மறைத்துவைத்துவிடுவது போன்றது.
மறைத்துவைக்கும் செயலை ஆதிக்கக்காரர் களும் செய்கிறார்கள்; ஆதிக்கத்தால் பாதிக்கப் பட்டவர்களும் செய்கிறார்கள். காரணங்கள்தான் வேறு. பாதிக்கப்பட்டவர்கள் ஆதிக்கம்பெறும் பாதையில் செல்லலாம்; பழையதை மறப்பதும் மறுப்பதும் இதைச் செய்வதற்குத் துணைசெய்யலாம். தங்கள் பாதிப்புகளைப் பகிரங்கப்படுத்துவதைத் தன்மானக் குறைவாக அவர்கள் கருதலாம். அவற்றை மற்றவர்கள் முன்னிலையில் வாசிப்பது மனக்கூச்சத்தைத் தரும் என்று தவிர்க்க விரும்பலாம். இலக்கியம் தனிவாசிப்புக்கு மட்டுமல்ல; பொதுவாசிப்புக்கும் உரியது. வகுப்பறை பொதுவாசிப்பு இடங்களில் ஒன்று. தலித் மக்களைக் கொடுமைப்படுத்தியதை எழுதிய இலக்கியம் பொதுவாசிப்பில் இடம்பெறக் கூடாது என்பது பெண்களின் தாழ்நிலைப்பற்றி எழுதப்பட்ட இலக்கியத்துக்கும் பொருந்தும். பொதுவாசிப்பில் ஏற்படும் இதுபோன்ற இக்கட்டுகள் உருவாகக் கூடாது என்றால் யாரும் யதார்த்த இலக்கியமே எழுதக் கூடாது என்று சொல்ல வேண்டிவரும். ஒரு இலக்கியப் படைப்பைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கும்முன் அதைப் பற்றி எந்த விவாதமும் தமிழ்நாட்டில் இருப்பதில்லை. மூடிய அறைக்குள் முடிவு எடுக்கப்படுகிறது. வரும் என்று அஞ்சும் வன்முறையைத் தடுக்கும் நோக்கத்திலேயே பெரும்பாலான சமயங்களில் முடிவு எடுக்கப்படுகிறது. எடுக்கப்படும் முடிவு ஏற்படுத்தும் கல்வி, கலாச்சார விளைவுகள் பற்றிய எந்தச் சிந்தனையும் முடிவு எடுப்பதில் இடம்பெறுவதில்லை. வன்முறை இல்லாத இடத்தில், அரசியல் ஆதாயம் கவனம் பெறுகிறது. கல்வியில் இலக்கியம் அரசியல் பிரச்சினை அல்ல; அது ஒரு கலாச்சாரப் பிரச்சினை; நம்முடைய இன்றைய சமூகத்தின் தன்மையைப் படம்பிடித்துக் காட்டும் பிரச்சினை.
அமெரிக்க முன்னுதாரணம்
அமெரிக்க சமூகத்தைக் கேலிக் குரலோடு திறந்து காட்டிய சிறந்த எழுத்தாளர் என்று பெயர் பெற்ற மார்க் ட்வெயின் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதிய ‘ஹக்கில்பெரி ஃபின்னின் சாகசங்கள்’ என்ற நாவல் அமெரிக்க மாணவர்கள் படிக்க வேண்டிய இலக்கியப் பட்டியலில் இடம்பெற்ற ஒன்று. வெள்ளையினப் பையனுக்கும் கருப்பினப் பையனுக்கும் இடையிலான உறவைச் சொல்லும் இந்த நாவலில் அமெரிக்காவின் தென்பகுதியில் கருப்பினத்தவரை வெள்ளையினத்தவர் இழிவாகப் பேசுவதும் நடத்துவதும் கருதுவதும் நாவல் முழுவதும் வருகிறது. கருப்பினத்தவர்கள், நீக்ரோக்கள் - மனித இனத்துக்குக் கீழான அடிமைகள் என்ற பொருளில் வழங்கிய நிக்கர்ஸ் (niggers) - என்று சுட்டப்படுகிறார்கள். இன்று இந்தச் சொல்லை உச்சரிக்கக்கூட விரும்பாமல் என்–வேர்டு (N-word) என்பார்கள்.
இன்று ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அல்லது கருப்பு அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு இந்த நாவலில் வரும் நீக்ரோ என்ற சொல் தன்மானத்துக்குச் சவால்விடும் சொல்; கருப்பர்கள் நாயினும் கீழாக நடத்தப்பட்ட வருணனைகள் கோபத்தை ஏற்படுத்துபவை. இதனால் கருப்பு, வெள்ளை மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வகுப்பறையில் இறுக்கம் கூடியது, சில வெள்ளை மாணவர்களிடம் ஏளன அல்லது உயர்வு உணர்ச்சியும் சில கருப்பு மாணவர்களிடம் வெறுப்பு அல்லது தன்னிரக்க உணர்ச்சியும் ஏற்பட்டது. இதனால் சில பெற்றோர்களும் கல்வியாளர்களும் நாவலைப் பாடத்திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்கள். பல ஆண்டுகள் விவாதம் நடந்தது. சில மாநிலங்கள் நாவலைக் கட்டாயமாகப் படிப்பதை நிறுத்தின; சில மாநிலங்களில் விருப்பப் பாடமாக இருந்தது. ஆனால், எல்லாக் கல்விநிலையங்களிலும் நூலகங்களில் இந்த நாவல் இருக்க வேண்டும். ஒரு நூல் வெளியீட்டாளர் நாவலில் 219 முறைவரும் நீக்ரோ என்ற சொல்லை எடுத்துவிட்டு அந்த இடத்தில் அடிமை என்று போட்டு ஒரு புதிய பதிப்பைக் கொண்டுவந்தார்; அதை எதிர்த்தவர்கள் பலர். இப்படிப் பலவிதமான விவாதங்கள் நிகழ்ந்தன; கல்விநிலையங்களில் பலவிதமான தீர்வுகளை நடைமுறைப்படுத்தினர். ஒரு பேராசிரியர் இந்தப் பிரச்சினைபற்றி ஒரு ஆய்வு நூல் எழுதினார்.
இந்த நாவலை மாணவர்கள் படிப்பதால் நிகழும் சாதகபாதகங்களைப் பற்றிய விவாதங்கள் பள்ளிகளிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் பல ஆண்டுகள் நடந்தன. யாரையும் புண்படுத்தாமல் இந்த நாவலை எப்படிக் கற்றுக்கொடுக்கலாம்; ஒரு இலக்கியத்தை எப்படி அணுக வேண்டும், நாவலின் மூலம் மாணவர்களுக்கு அமெரிக்க சமூகம் நடந்துவந்த பாதையை எப்படிக் காட்டலாம் என்று ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன; ஆசிரியர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இணையதளங்கள் அமைக்கப்பட்டன. ஆசிரியர்களுக்குக் கையேடுகள் வெளியிடப்பட்டன. இப்படி இலக்கியமும் போற்றப்பட்டது; மாணவர்களும் காப்பாற்றப்பட்டனர். பிரச்சினையானது அதிரடி முடிவெடுத்து அட்டத்தில் தூக்கிப்போடப்படவில்லை.
இவ்வளவும் ஹக்கில்பெரி நாவலைப் பள்ளி மாணவர்கள் படிப்பதுபற்றிதான். கல்லூரி மாணவர்கள் என்றால் அவர்களுக்கு இலக்கியத்தைப் பற்றி ஒரு மனப்பக்குவம் உண்டு, எப்படிப் படிப்பிக்க வேண்டும் என்று கல்லூரி ஆசிரியர்களுக்குத் தெரியும் என்ற நம்பிக்கையில் கல்வி நிர்வாகம் ஒரு இலக்கிய நூலைத் தடைசெய்வது பற்றி எண்ணிக்கூட பார்த்திருக்காது. நம் மனப்பக்குவத்தைப் பற்றி, கலாச்சார அஸ்திவாரம்பற்றி அறிவுக் கலாச்சாரம்பற்றி நாம் கண்ணாடி பிடித்துப் பார்க்க வேண்டும்.
இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தென்னாசிய மொழிகள், நாகரிகங்கள் துறையில் வருகைதரு பேராசிரியர் - தொடர்புக்கு: annamalai38@yahoo.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago