ஒரு புலியின் இறுதிப் பயணம்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஒரு புலியின் மரணமும், அதன் பிரேதப் பரிசோதனையும், இறுதிச் சடங்கும்...

காட்டில் புலியைக் காண்பது என்பது கானுயிர் ஆர்வலர்களின் பெரும் கனவு. ஆனால், அது அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலானது. 40 ஆண்டுகளாகக் காட்டில் சுற்றித்திரியும் ஒரு நண்பர் இன்னமும் புலியைப் பார்க்கவில்லை. அதே காட்டுக்கு முதன்முதலாகச் சென்ற இன்னொருவருக்கு நான்கு குட்டிகளுடன் ஒரு தாய்ப் புலி தரிசனம் கொடுத்திருக்கிறது. நானும் கடந்த 10 ஆண்டுகளாகப் புலியைத் தேடிக் காட்டில் அலைகிறேன், புலியைப் பார்க்க முடியவில்லை. இந்த முறை பார்க்கக் கிடைத்தது. ஆனால், இப்படி ஒரு கோலத்தில் புலியைப் பார்ப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. நான் பார்த்தபோது, ஏழு வயதான அந்த கம்பீரமான, அழகிய பெண் புலி இறந்துகிடந்தது!

கடந்த வாரம் தேசிய புலிகள் ஆணையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதிகாரபூர்வ சாட்சியமாக ஓசை காளிதாசன் அந்தப் புலியின் பிரேதப் பரிசோதனைக்காக தெங்குமரஹடாவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்றார். அவருடன் சாட்சியங்களில் ஒருவனாக நானும் சென்றேன்.

ஒருவாய்த் தண்ணீருக்காக…

பவானி சாகர் வரை பேருந்துப் பயணம். அங்கிருந்து மூன்று மணி நேரம் அடர்ந்த காடுகள் வழியாக தெங்குமரஹடாவுக்கு ஜீப் பயணம். ஒரு பகுதியில் மோயாறு கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. பரிசலில் அதைக் கடந்து தெங்குமரஹடா அடைந்தோம். அங்கிருந்து அடர்ந்த காட்டுக்குள் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைப்பயணம். கூகுல்துறை பள்ளம் என்கிற இடத்தில் நீரோடை ஒன்றில் இறந்துகிடந்தது அந்தப் புலி. வயிற்றில் காயம். காயத்தைக் கரு நண்டுகள் சுவைத்துக்கொண்டிருந்தன. புலியை உற்றுக் கவனித்த மருத்துவர் மனோகர், புலி இறந்து 24 மணி நேரம்கூட ஆகியிருக்காது என்றார். அந்தப் புலியின் அழகும் கம்பீரமும் சிறிதும் குறையாமல் இருக்க அதுகூட காரணமாக இருக்கலாம். அருகில் சென்று புலியின் முதுகையும் தாடையையும் வாஞ்சையுடன் நீவிவிட்டேன். ஒருவேளை உயிருடன் புலியைப் பார்க்கும் அதிர்ஷ்டம் வாய்த்தால்கூட இப்படித் தொட்டுப்பார்க்க முடியுமோ என்னவோ!

காயத்தைப் பரிசோதித்த டாக்டர், “காட்டு மாடு அல்லது காட்டுப் பன்றி அல்லது முள்ளம்பன்றியை வேட்டையாடும்போது ஏற்பட்ட காயமாக இருக்கலாம். அல்லது இறந்த பின்பு நண்டுகள் கடித்துக் காயம் ஏற்பட்டிருக்கலாம். ஒருவேளை மனிதனின் சட்டவிரோதச் செயல்களாலும் கொல்லப்பட்டிருக்கலாம். இதில் உயிருக்குப் போராடிய புலி தனது கடைசி வாய்த் தண்ணீருக்காக நீரோடையைத் தேடி வந்து உயிரை விட்டிருக்கிறது” என்றார்.

நான்கு கோரைப் பற்கள், 18 நகங்கள்…

சாட்சியங்களை அழைத்த மருத்துவர் புலியின் வாயைப் பிளந்து, நான்கு கோரைப் பற்களும் இருப்பதை உறுதி செய்தார். ரோமங்கள் சூழ்ந்த கால் விரல்களை விரித்து ஒவ்வொரு நகமாக எண்ணிக் காட்டினார். 18 நகங்கள் இருந்தன. “எல்லாம் சரியாக இருக்கிறது. எதுவும் திருட்டுப் போகவில்லை, நீங்களும் ஒருமுறை எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார் அவர். புலியின் கோரைப் பற்களும் நகங்களும் மட்டுமே வனப் பொருட்கள் கள்ளச்சந்தையில் பத்து லட்சம் ரூபாய் வரை போகும் என்பதால் இந்தச் சட்டச் சம்பிரதாயம்.

இன்ச் டேப் மூலம் புலி அளக்கப்பட்டது. 95 சென்டிமீட்டர் உயரமும் 154 சென்டிமீட்டர் நீளமும் இருந்தது அந்தப் புலி. எடை சுமார் 150 கிலோ இருக்கலாம். புலியின் கழுத்தின் அடிப்பகுதியிலிருந்து அடிவயிறு வரை மெல்லிய கத்தியால் அறுத்தார் மருத்துவர். இதயத்திலிருந்து பீய்ச்சியடித்தது ரத்தம். மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக இதயம், நுரையீரல், ஈரல், கல்லீரல் இவற்றிலிருந்து கொஞ்சம்கொஞ்சம் வெட்டி எடுக்கப்பட்டது. குடலில் இருந்த உணவுப் பாகங்கள் சோதிக்கப்பட்டன. காட்டு மாட்டின் தோல் பாகம் போன்று ஒன்று தட்டுப்பட்டதாகச் சொன்னார்கள் மருத்துவக் குழுவினர். முடிந்தது பிரேதப் பரிசோதனை. இறப்புக்கான இறுதிக் காரணம் மேலதிக மருத்துவப் பரிசோதனைக்குப் பின்பே தெரியவரும்.

‘கடைசியாப் பார்த்துக்கோங்க’

அதற்குள் பழங்குடிகள் சிலர் புலியின் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மரக்கட்டைகளை அடுக்கி வைத்து மலரும் தூவியிருந்தனர் அந்த மண்ணின் மைந்தர்கள். மரக்கட்டைகள் மீது கிடத்தப்பட்டது புலி. “கடைசியா முகம் பாக்குறவங்க எல்லாம் பார்த்துக்கோங்க. கடைசியா கண்ணு பார்க்கிறவங்க எல்லாம் பார்த்துக்கோங்க” என்று உரத்த குரலில் கூவினார்கள் அவர்கள். கலங்கிய கண்களுடன் அவர்களே நெருங்கிச் சென்று திறந்துகிடந்த அந்தப் புலியின் கண்களை சில நொடிகள் உற்றுநோக்கினார்கள். இதைப் பற்றி விசாரித்தபோது கண்ணை உற்றுநோக்கியதற்குக் காரணம் இருக்கிறது என்றார்கள். பின்பு, கட்டைகளால் புலியின் உடல் மறைக்கப்பட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டது புலி.

கானக தர்மமும் திருட்டும்…

உண்மையில் உயிரற்ற அந்தப் புலியின் உடலை அப்படியே விட்டுவிடுவதுதான் கானக தர்மம். அந்த உடலைப் பிணந்தின்னிக் கழுகுகள், கழுதைப் புலிகள், காட்டுப் பன்றிகள், நண்டுகள், மீன்கள், ஈக்கள், புழுக்கள் ஆகியவை சாப்பிட்டு காட்டின் ஆரோக்கியமான உணவுச் சங்கிலிக்கு வழிவகுக்கும். ஆனாலும், புலி எரிக்கப்பட்டது. ஒருவேளை அப்படியே விட்டிருந்தால் புலியின் நகங்களும் பற்களும் எலும்புகளும் மண்டையோடும் திருடப்பட்டிருக்கலாம். ஏனெனில், புலியைச் சுற்றி உலவும் மூடநம்பிக்கைகள் மிக அதிகம். குறிப்பாக, ஆண்மை அபிவிருத்தி மருந்து வகையறாக்கள். மனிதனின் பேராசையும் மூடநம்பிக்கையும் புலியின் பிணத்தைக்கூட விட்டுவைக்காது. அதனால்தான் எரிக்கப்பட்டது அந்தப் புலி!

கண்கள் உண்மை சொல்லுமா?

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்துப் பழங்குடிகள் சிலருடன் பேசினேன். அந்தப் புலி அநேகமாக விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார்கள் அவர்கள். புலியை எரிக்கும் முன்பு கடைசியாக அவர்கள் புலியின் கண்களை உற்றுநோக்கியதன் காரணம் இதுதானாம். இறப்பு எந்த வகையிலானது என்பதைக் கண்கள் காட்டிக்கொடுத்துவிடுமாம். இதுகுறித்து, மருத்துவர் மனோகரைத் தொடர்புகொண்டேன். விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தவர், இறுதித் தடயவியல் அறிக்கை மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பே அதை உறுதியாகவும் அதிகாரபூர்வமாகவும் சொல்ல முடியும் என்றார்.

பொதுவாக, புலிகள் ஒரு இரையை வேட்டையாடினால் அதைச் சாப்பிட்டுவிட்டு மீதமான இரையை மரத்தின் மீதோ புதருக்குள்ளோ பதுக்கி வைத்துவிடும். பின்பு, பசிக்கும்போது மீண்டும் வந்து சாப்பிடும். இதில் வேட்டையாடப்பட்ட இரை கால்நடையாக இருக்கும்பட்சத்தில் பாதிக் கப்பட்டவர்கள் அந்த இரையில் விஷம் வைத்திருக்கலாம். அல்லது சில சமூக விரோதிகள் புலியின் தோல், நகம், பற்களுக்காக ஆசைப்பட்டு, புலி வேட்டையாடிப் பதுக்கி வைத்துவிட்டுப்போன இரையில் விஷம் வைத்திருக்கலாம். ஒருவேளை, கால்நடைகளுக்காக அந்தப் புலி கொல்லப் பட்டிருந்தால் - அந்த வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளின் மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்குவது; புலியால் கொல்லப்படும் கால்நடைகளுக்கு உடனடி இழப்பீடு தருவது போன்ற பணிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் புலிகள் பலியாகாமல் இது தடுக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

மேலும்