“ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நிகழாத அற்புதங்களெல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்கின்றன” என்று காமராஜர் ஆட்சியை தந்தை பெரியார் மனமுவந்து பாராட்டியிருந்தார். அதற்குக் காரணம், மக்கள் நலனை மட்டுமே நோக்கமாகக்கொண்டிருந்த காமராஜருடைய ஆட்சி முறைதான்.
சென்னை மாகாண முதலமைச்சராக 1954இல் தேர்வுபெற்றபோது, 17 பேர் கொண்ட அமைச்சரவை எண்ணிக்கையை 8 ஆகக் குறைத்து, திறமையானவர்களைச் சேர்த்துக்கொண்டார்.
முதலமைச்சர் பதவிக்குத் தன்னுடன் போட்டியிட்ட சி.சுப்ரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் தமது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்.
சமூகநீதி அடிப்படையில் பி.பரமேஸ்வரன், உழைப்பாளர் கட்சியின் சார்பாக 19 உறுப்பினர்களைப் பெற்றிருந்த எஸ்.எஸ்.ராமசாமியை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டதன் மூலம், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக காமராஜர் அமைச்சரவை இருந்தது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த பி.பரமேஸ்வரனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமித்தது தலைகீழ் மாற்றமாகக் கருதப்பட்டது.
எதிலும் மக்கள் நலன்
1955இல் கடும் புயலாலும், பெருமழையாலும் ராமநாதபுரம், கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, நிவாரணப் பணிக்காக மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காமராஜர். பெருவெள்ளத்தில் மார்பளவு நீரில் சாரக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்கி, ஒரு கால்வாயைக் கடந்து மறுகரைக்கு முதலமைச்சர் காமராஜர் சென்ற காட்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.
இது குறித்து ‘திராவிட நாடு’ இதழில் எதிர்க்கட்சித் தலைவரான அண்ணா, “மக்களின் கண்ணீரைத் துடைக்க எமது முதலமைச்சர் விரைந்து சென்றுள்ளார்.
கோட்டையிலே உட்கார்ந்துகொண்டு உத்தரவுபோடும் முதலமைச்சர் அல்ல இவர், ஆண்டவன் கோபத்தாலே நேரிட்ட சோதனை என்று பேசிடும் பூசாரியும் அல்ல” என்று மனமுவந்து பாராட்டி எழுதிய அரசியல் நாகரிகம் அன்றைக்கு இருந்தது. மற்றொரு முறை காமராஜர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, அப்பள உற்பத்தியாளர்கள் அவரைச் சந்தித்து, அப்பளத்துக்கு 6 சதவீத விற்பனை வரி விதிக்கப்படுவதாகவும், மற்ற உணவுப் பொருட்களுக்கு 2 சதவீதமே விற்பனை வரி என்றும் முறையிட்டனர்.
இது குறித்து அமைச்சரிடம் காமராஜர் விசாரித்தபோது, பார்சல் செய்து விற்கப்படுவதால் அப்பளத்துக்கு 6 சதவீத வரி விதிக்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.
இதைக் கேட்ட காமராஜர், அப்பளத்துக்கான விற்பனை வரியைக் குறைக்கும்படி கூறியதோடு, “இயந்திரகதியில் அமைச்சர்கள் இயங்கக் கூடாது” எனக் கடிந்துகொண்டார். காமராஜரைத் தந்திரமான பேச்சுகளால், முகஸ்துதியால் ஏமாற்ற முடியாது. எந்தத் தந்திரத்தையும் எளிதாகப் புரிந்துகொள்கிற ஆற்றல் அவருக்கு நிறைய இருந்தது.
ஒருநாள் அவரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர், கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்க ரூபாய் 20 லட்சம் தருவதாகவும், மீதி ரூபாய் 80 லட்சத்தை அரசு கொடுத்தால் ரூபாய் 1 கோடியில் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கலாம் என்கிற திட்டத்தை முன்வைத்தார். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆதரவாக இருந்தார்.
இதைக் கண்டு கோபமடைந்த காமராஜர், “ரூ.80 லட்சம் அரசு பணம் கொடுக்கும்போது, மீதி ரூ.20 லட்சத்தையும் சேர்த்து ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கலாமே? தனியாரை மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதித்தால், அவர்கள் அதைத் தொழிலாக்கி லாபம் சம்பாதிக்கவே பயன்படுத்துவார்கள்” என்றார்.
மக்கள் நலன் சார்ந்த மருத்துவத் துறையில் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்பதில் அன்றைக்கே உறுதியாக இருந்தவர் காமராஜர். இந்த யோசனையின் அடிப்படையில், தஞ்சாவூர் ஜில்லா போர்டு ரயில்வே செஸ் வரியாகச் சேமித்த ரூபாய் 1 கோடி இருப்பதை அறிந்து, அதைப் பயன்படுத்தி தஞ்சையில் மருத்துவக் கல்லூரி அமைக்க காமராஜர் நடவடிக்கை எடுத்தார். அப்படித்தான் தஞ்சை மருத்துவக் கல்லூரி உருவானது.
அண்டை மாநிலப் பிரச்சினைகள்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இன்றைக்கு ‘மகா நவரத்னா’ என்று அழைக்கப்படுகிற பெரும் லாபத்தைத் தரக்கூடிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த நிறுவனம் அமைவதற்குக் காரணமாக இருந்தவர் காமராஜர்.
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்குத் தேவையான கனரக இயந்திரங்கள் சோவியத் நாட்டிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தன. அதை நெய்வேலிக்கு எடுத்துச்செல்ல நெடுஞ்சாலைகள் அகலமின்றியும் சில பாலங்கள் பலவீனமாகவும் இருப்பதால் எடுத்துச்செல்ல முடியாது என அதிகாரிகள் நிராகரித்தனர்.
இதையறிந்த காமராஜர், மத்திய அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டினார். அதில், “நமது அதிகாரிகள் திறமையானவர்கள். எப்படியாவது எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, முடியாது என்று கூறக் கூடாது” என்று காமராஜர் அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.
அதற்குப் பிறகு, நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, பாலங்களைப் பலப்படுத்தி கனரக இயந்திரங்கள் நெய்வேலிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதன்மூலம் வெளி மாநிலத்துக்குச் செல்லவிருந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தமிழகத்திலேயே தக்கவைத்தவர் காமராஜர்.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதில் பல்வேறு எல்லைப் பிரச்சினைகள் உருவாகின. சென்னை மாநகரத்துக்குச் சொந்தம் கொண்டாடி, ஆந்திர அரசியல் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இந்தப் பிரச்சினையின் பின்னணியில் காமராஜர் செய்த உத்தி குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டுக்கே சென்னை சொந்தம் என்று சென்னை மாநகராட்சித் தேர்தலில் பிரச்சாரம் செய்ய ‘தமிழ்நாடு எல்லைக் கமிட்டி’ என்ற பெயரில் தனி அமைப்பை காமராஜர் ஏற்படுத்தினார். அதில் முத்துரங்கன், எம்.பக்தவத்சலம் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். தமிழ்நாடு எல்லை கமிட்டி சார்பில், காங்கிரஸ் கட்சியினர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு பெரிய வெற்றியைப் பெற்றார்கள்.
இதன்மூலம், சென்னை நகரம் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்பதை நிலைநாட்ட, காமராஜர் எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் பலன் தந்தன. இதனையொட்டி சென்னை தமிழ்நாட்டோடு இணைந்தது. காமராஜர் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தமிழ்நாட்டுக்கும், கேரளம், ஆந்திரத்துக்கும் இடையே எல்லைப் பிரச்சினைகள் தோன்றின.
சில பகுதிகள் எந்த மாநிலத்தில் சேர்வது என்கிற சர்ச்சைகள் எழுந்தன. முதலமைச்சர் காமராஜரும், ஆந்திர முதலமைச்சராக இருந்த சஞ்சீவ ரெட்டியும் திருப்பதியில் சந்தித்துப் பேசினார்கள்.
இரண்டு மாநில சட்டசபைகளிலும் எதிர்ப்பின்றி ஒரே நாளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது. “காமராஜர் சொன்னதை நான் கேட்டேன். நான் சொன்னதை அவர் ஒப்புக்கொண்டார்” என்று சஞ்சீவ ரெட்டி கூறினார். அண்டை மாநில முதலமைச்சர்களோடு இருந்த நல்லுறவின் காரணமாக எல்லைப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டது.
முதல் சட்டத் திருத்த மூலவர்
காமராஜர் ஆட்சியில் எண்ணற்ற நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய பிரதமர் நேரு 1961இல் இதைத் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் 25 லட்சம் ஏக்கர் புஞ்சை நிலங்கள் நீர்ப்பாசனம் பெற்று விவசாய நிலங்களாக மாறின.
இதற்காக 15 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. அன்றைய கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளில் நீர்ப்பாசன வசதி பெற்ற விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேற முழு ஒத்துழைப்பை கேரள மாநில முதலமைச்சர் பட்டம் ஏ.தாணு காமராஜருக்கு வழங்கினார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததும், நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டுக் கொள்கைக்குச் சோதனை ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இடஒதுக்கீடு ஆணையை ரத்துசெய்திருந்தன.
இப்பிரச்சினையின் தீவிரத்தைப் பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்த காமராஜர் ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று அழைக்கப்பட்டார். இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்குச் சட்டப் பாதுகாப்பு கிடைத்தது.
சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் எந்த வளர்ச்சியையும் காணாத கிராமங்களில் முதல் முறையாகச் சாலைகளும், மின் இணைப்புகளும், கல்விக்கூடங்களும், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முறையும் வந்தது என்றால், அதற்கு காமராஜரின் ஆட்சிதான் காரணம். அவரது அணுகுமுறை, வளர்ச்சியையும் மக்கள் நலனையுமே நோக்கமாகக் கொண்டது.
- ஆ.கோபண்ணா, ‘தேசிய முரசு’ ஆசிரியர்
தொடர்புக்கு: desiyamurasu@gmail.com
ஜூலை 15: காமராஜர் 120ஆவது பிறந்த ஆண்டு தொடக்கம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago