மீன்பிடி மானியம்: சத்தமின்றி ஒரு சாதனை!

By செய்திப்பிரிவு

உலகெங்கும் உணவுத் தொழிலின் பெயரால் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது நாம் அறிந்ததே. இந்தச் சூழல் தொடர்ந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் கடலில் மீன்களே இல்லாத நிலை உருவாகலாம்.

உலகின் 760 கோடி மக்களுக்கான உணவுச் சந்தையில், பெருவணிக நிறுவனங்களின் நுழைவு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிப்போன நிலையில், ஆழ்கடலில் வரைமுறையற்ற அவர்களது செயல்பாடுகளால் கடல்வளம் பாழ்பட்டிருக்கிறது. கடலில் வணிகக் கப்பல்களால் நடத்தப்படும் பெரும் வேட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, உலக வர்த்தக நிறுவனம் (டபிள்யூடிஓ) பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துவருகிறது. அவற்றில் முக்கியமானது, மீன்பிடித் தொழிலுக்கான மானிய விலக்கம்.

1982-ல் உலக நாடுகளுடன் செய்துகொண்ட கடல் எல்லை ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்தியாவுக்கு 2.02 பில்லியன் சதுர கி.மீ. பிரத்யேகப் பொருளாதார மண்டலக் கடல் பகுதி கிடைத்தது. இந்தியக் கடல் மண்டலப் பகுதியில் எந்தக் காலத்தில் எந்த வகையான மீன்களைப் பிடிக்க வேண்டும், எந்த வகையான கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பனவற்றை ஐ.நா-வின் உணவு - வேளாண்மை அமைப்பு (எஃப்ஏஓ) தீர்மானிக்கிறது. இந்த அமைப்பு வலியுறுத்திய, பொறுப்பார்ந்த மீன்பிடித்தலுக்கான சர்வதேச நடத்தை விதிகளை இந்தியா ஏற்றுக்கொண்டது.

இந்திய தீபகற்பத்தில் பாரம்பரிய மீனவர்களே கடலோரம் எங்கும் வாழ்கிறார்கள். தொழில்முறை - வணிக மீனவர்களின் எண்ணிக்கை சொற்பமே. பாரம்பரிய மீனவர்கள் கடலைத் தாயாய், கடற்கரையைத் தாய்மடியாய்ப் பேணிப் பாதுகாப்பவர்கள். அப்படியான பழங்குடி மீனவர்களின் செயல்பாடுகளைக் களநிலவரம் தெரியாத உலக வர்த்தக நிறுவனத்தின் முன்னெடுப்புகள் பாதித்துவிடக் கூடாது.

முன்னேறிய நாடுகளின் அதீத மீன்பிடித்தலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீன்பிடித்தலும் ஒன்றெனக் கருதிவிட முடியாது. உலக வர்த்தக நிறுவனத்தின் மானிய விலக்கம் போன்ற முன்னெடுப்புகள் சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாத அதீத மீன்பிடித்தலில் ஈடுபட்டிருக்கும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கும் முன்னேறிய நாடுகளைக் குறிவைத்தாலும், உறுப்பினர் என்ற காரணத்துக்காகவே பாரம்பரிய மீனவர் வாழும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் பாதிப்படைந்துவிடக் கூடாது.

இந்தியாவில் சில வணிக மீனவர்களின் செயல்பாடுகள் வரம்பு மீறிச் சென்றாலும், உலக அளவில் அவர்களின் செயல்பாடுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இழுவைமடிப் பயன்பாடு பாக் நீரிணை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கடல்வளம் பாழ்படக் காரணமாய் இருந்தாலும் சீனா, ஜப்பான், தைவான், கொரியா, ஐரோப்பா போல அதீத வணிக மீன்பிடித்தல் நமது கடலோரங்களில் இல்லை. பெரிய, சக்திவாய்ந்த படகுகளை வைத்திருந்தாலும், நமது மீனவர்கள் கடல் கடந்து, கண்டங்கள் தாண்டி மீன்பிடிக்கச் செல்வதில்லை.

கடந்த பல பத்தாண்டுகளாக மத்திய அரசில் முக்கியத்துவம் பெறாத மீன்வளத் துறை, தற்போது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தற்போதைய மத்திய அரசு, கள நிலவரத்துக்குக் காதுகொடுக்கிறது என்பது சமீபத்தில் ஜெனீவாவில் நடந்து முடிந்த உலக வர்த்தக நிறுவனக் கூட்டத்தில் தெளிவாகியுள்ளது. மீனவர்களின் உரிமையை மத்திய வர்த்தக அமைச்சர் – அதிகாரிகள் நிலைநாட்டியுள்ளனர்.

மானிய விலக்கம் என்பது இந்தியாவின் பாரம்பரிய மீனவர்களுக்கோ, அவர்களின் தொழில்முறைக்கோ பொருந்தாது என்று வாதிட்டிருக்கிறார்கள். வணிக வேட்கையோடு கடலைச் சூறையாடும் மற்ற நாட்டு மீனவர்களைப் போல் எங்கள் பாரம்பரிய மீனவர்களைக் கருதக் கூடாது என ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாகவே, அண்மையில் முன்வைக்கப்பட்ட மீன்வள மசோதா கரைக்கடலும், அண்மைக்கடலும் இணைந்த 12 கடல் மைல்களுக்கு உட்பட்ட பகுதியில் தொழில் செய்யுங்கள், படகுகளைப் பதிவுசெய்யுங்கள் என வலியுறுத்துகிறது. அதற்காக மீன்பிடிக் கப்பல்களையும், பாரம்பரிய மீனவர்களின் படகுகளையும் ஒரே நிலையில் வைத்து அணுக முடியாது.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 112 உலக நாடுகளின் மீனவ மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் வாழும் பாரம்பரிய மீனவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில், மத்திய அரசில் மீன்வளத் துறைக்காக கேபினட் அந்தஸ்தில் அமைச்சகம் அமைத்து, அக்கறையான செயல்பாடுகளும் தொடர்ந்தால், நம் நாட்டின் கடலோரப் பொருளாதாரம் உச்சத்தைத் தொடக்கூடும்.

- ஆர்.என். ஜோ டி குருஸ், ‘கொற்கை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

To Read this in English: Withdrawal of fishery subsidy: A silent achievement!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்