திமுக, அதிமுக ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும்! - அன்புமணி பேட்டி

By சமஸ்

ந்தத் தேர்தலில் வெல்பவர் யாராகவேனும் இருக்கலாம்; போக்குகளை உருவாக்குவதில் முன்னிலையில் இருந்தவர் அன்புமணி. தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் விவசாயத்துக்கு இந்த முறை அளித்திருக்கும் முக்கியத்துவத்திலும், வெற்றுக் கவர்ச்சி இலவச அறிவிப்புகளைப் பெருமளவில் தவிர்த்ததிலும் இந்த விஷயங்களைத் தொடர்ந்து பேசிவரும் பாமகவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இத்தனை அணிகள் இம்முறை துணிச்சலாகக் களம் இறங்குவதற்கு முன்னோடியாக, முதலில் தனியாகத் தேர்தல் களத்திலும் அன்புமணியே இறங்கினார். தமிழகத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் நிர்வாகரீதியில் அணுகும் திறன் அன்புமணியின் பேச்சில் வெளிப்பட்டது. எதிர்காலத் தமிழக அரசியலில் எல்லோருக்குமே அவர் ஒரு சவாலாக இருப்பார் என்பதையும் அவருடைய வியூகங்கள் உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டைச் சுற்றி வந்திருக்கிறீர்கள். மக்களிடம் தேர்தல் மனநிலை எப்படி இருக்கிறது?

ஒரு வருஷமாக மக்களைத் தொடர்ந்து சந்திக்கிறேன். மக்கள் ஆளுங்கட்சியின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

கோபத்துக்கான காரணமாக எதைச் சொல்கிறார்கள்?

எல்லா ஊர்களிலும் அவர்கள் சொல்வது, “எங்களுக்கு ஒரு மண்ணும் வேண்டாம்; இந்த மதுக்கடையை மூடுங்கள்” என்பதே. வேலையில்லாத் திண்டாட்டமும் சரியான வருமானம் கிடைக்காததும் மக்களை அலைக்கழிக்கிறது. முதியவர்கள் அரசு கொடுக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை; போதவில்லை என்கிறார்கள். இளைஞர்கள் திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஒழிய வேண்டும் என்கிறார்கள்.

அரை நூற்றாண்டாக திமுக அல்லது அதிமுக என்றே தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்…

அந்தக் காலமெல்லாம் மலையேறப்போகிறது. என் கட்சி அணுகுமுறைகளை விஞ்ஞானரீதியாகக் கையாள்கிறேன். அப்படி ஒரு கருத்தாய்வு நடத்தினோம். தமிழ்நாட்டில் 82% பேர் இந்த இரண்டு கட்சிகளும் போக வேண்டும் என்ற நினைப்பில் இருப்பதை அந்த ஆய்வு சொன்னது. “எங்கே போனாலும் பணம் கேட்கிறார்கள்; ஊழல்” என்று மக்கள் புலம்புகிறார்கள். இரு கட்சிகள் மீதான கோபத்தை இந்த அதிமுக அரசின் ஊழல்களும் நிர்வாகச் சீர்கேடுகளும் பெரும் ஆத்திரமாக மாற்றியிருக்கின்றன. மக்கள் இன்னமும் திமுகவையும் மன்னிக்கவில்லை. நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து, திமுகவின் குறுநில மன்னர்களான மாவட்டச் செயலாளர்களின் அட்டூழியம் இதையெல்லாம் மக்கள் இன்னும் மறக்கவில்லை. நடப்பு சட்டசபை செயல்படாத சட்டசபை என்று மக்கள் நினைக்கிறார்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அது முற்றிலும் உண்மை என்றே நினைக்கிறேன். ஒரு மாநிலத்தின் மக்களுடைய பிரதான வேலைக்காரர் முதலமைச்சர். அதுதான் அந்தப் பதவிக்கான வரையறை. ஆனால், இங்கே தெய்வம்! உலகத்திலேயே வீட்டை விட்டு வெளியே வருவதையே ஒரு விழாபோல, ஆளுங்கட்சியினர் கொண்டாடும் முதல்வர் உள்ள மாநிலம் இன்றைக்குத் தமிழ்நாடு. மக்களால் சந்திக்க முடியாதவர்; மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாதவர்; பணியில் இருக்கும் அதிகாரிகளை அல்ல; ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்துக்கொண்டு நிர்வகிக்கும் ஒரு முதல்வர். சொல்லிக்கொண்டே போகலாம். பெரிய கொடுமை என்னவென்றால், இப்படிப்பட்டவரைச் சிறந்த நிர்வாகி என்று ஜல்லியடிக்க ஒரு கூட்டமே இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, “கருணாநிதி கஜானாவைக் காலியாக்கிவிட்டார்” என்று அவர் கஜானாவைக் காட்டியபோது, தமிழ்நாட்டின் கடன் ரூ. 1.01 லட்சம் கோடி. இன்றைக்கு ரூ. 2.47 லட்சம் கோடி. கருணாநிதி விட்டுச்சென்ற கடனாவது, சுதந்திரம் அடைந்த காலகட்டத்திலிருந்து நீண்ட கடன். இந்தம்மா தன் ஆட்சிக் காலகட்டத்தில் மட்டும் அதைக் காட்டிலும் அதிகமான கடனை ஏற்றியிருக்கிறார். இந்தப் பணத்தையெல்லாம் என்ன பண்ணினார்? இந்த ஐந்து வருஷங்களில் எதாவது தமிழ்நாட்டுக்குப் புதிதாக வந்திருக்கிறது? இதுதான் நிர்வாகமா?

எங்கும் இல்லாத கலாச்சாரமாக சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் 185 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் கீழ் 700 திட்டங்களை அறிவித்தார். இவை அத்தனையையும் நிறைவேற்ற ரூ.1.49 லட்சம் கோடி தேவை. ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ. 7,500 கோடி. இது எத்தனை பெரிய ஏமாற்று வேலை!

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஒரு அரசியல் வேடிக்கை! எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது எவ்வளவு சக்திமிக்க பதவியாக மற்ற மாநிலங்களில் இருக்கிறது? எத்தனை போராட்டங்கள் சட்டசபையில் நடக்கின்றன? இவரோ சட்டமன்றமே போக மாட்டார். எங்கேயாவது வழிமறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், “நான் ரெண்டு மாசமா பேப்பரே படிக்கலை” என்கிறார்.

இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படி உருப்படும் இந்த மாநிலம்?

அதிருப்தியில் இருக்கும் மக்கள், சகாயம் போன்ற ஒரு அரசு அதிகாரியை அரசியலுக்கு அழைத்தாலும் ஏற்கெனவே களத்திலுள்ள ஏனைய கட்சிகளை ஏன் நம்பிக்கையான மாற்றாகப் பார்க்கவில்லை? உங்களிடம் ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது என்பதால்தானே?

இல்லை. மக்கள் மாற்றைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். ஊடகங்களே மறைக்கின்றன. அரை நூற்றாண்டு என்பது ஒரு பெரிய காலகட்டம். இரு கட்சிகளும் மட்டுமே மாற்றி மாற்றி ஆட்சி அமைத்ததில், எப்படி இரு தரப்பு அரசு அதிகாரிகள், இரு தரப்புத் தொழிலதிபர்கள் வளர்ந்திருக்கிறார்களோ அப்படி ஊடகங்களும் இரு தரப்பு ஊடகங்களாக வளர்ந்திருக்கின்றன. மக்கள் இன்றைக்கு அன்புமணி வேண்டும் என்கிறார்கள்.

ஊழல் தொடர்பாக நீங்கள் பேசுகிறீர்கள். உங்கள் மீதும் ஊழல் வழக்கு இருக்கிறது…

அது அர்த்தமே இல்லாத ஒரு வழக்கு. நீதிமன்றத்தில் என் மீது தவறில்லை என்பதை நிரூபிப்பேன். நீதிமன்றத்தாலேயே குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களையும் என்னையும் ஒரே தட்டில் வைக்காதீர்கள்.

மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக - தமாகா கூட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மக்களவைத் தேர்தலில் நான் தருமபுரியில் மட்டும் வாங்கிய ஓட்டுகள் 4.7 லட்சம். தமிழ்நாட்டில் தாம் நின்ற 18 தொகுதிகளிலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து வாங்கிய ஓட்டுகள் 4.4 லட்சம். இப்படியானவர்களெல்லாம் சேர்ந்து அமைக்கும் அணி ஒரு மாற்றா? ஒரு மனிதர் ஒரே நேரத்தில் காங்கிரஸோடு பேசுகிறார். காங்கிரஸின் எதிரிகள் கம்யூனிஸ்ட்டுகளோடு பேசுகிறார். கம்யூனிஸ்ட்டுகளின் எதிரி பாஜகவோடு பேசுகிறார். எல்லாம் கூட்டணி பேரம். இவர்களுக்கெல்லாம் என்ன கொள்கை இருக்க முடியும்? இப்படிப்பட்டவரை மாற்று என்று நிறுத்துகிற கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கையை எப்படி அளவிட முடியும்? தலைவர் என்பதற்கு ஒரு தலைமைப் பண்பு வேண்டும். நாலு பேர் பின்பற்றுகிற மாதிரி அந்த ஆளுமை இருக்க வேண்டும். விஜயகாந்துக்கும் இதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா?

நீங்கள் சொல்வதுபோல, இரு பெரிய கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு தரப்பை மக்கள் பார்க்கிறார்கள் என்றாலும்கூட அந்த இடத்தில், செயல்படாதவர் என்று நீங்கள் சொல்லும் விஜயகாந்துக்கே மக்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள். ஏன் பாமகவையோ உங்களையோ அந்த இடத்துக்குக் கொண்டுபோகவில்லை என்பதை யோசித்திருக்கிறீர்களா?

பத்து வருஷங்களுக்கு முன் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோதே மக்களிடம் மாற்று வேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது. விஜயகாந்த் அப்போது தனித்து நின்றார். மக்கள் அவரை மாற்றாகப் பார்த்தார்கள். ஆரம்பக் காலத்திலேயே தனித்து நிற்கும் முடிவை நாங்கள் எடுத்திருந்தால், இன்றைக்கு அந்த இடத்தில் நாங்களே இருந்திருப்போம்.

அது மட்டும்தான் காரணமா? விஜயகாந்திடம் வெளிப்படும் அளவுக்கு உங்களிடம் மதச்சார்பின்மை, சாதிச்சார்பின்மை இல்லை என்பது ஒரு முக்கியமான காரணம் இல்லையா?

அதெல்லாம் வெளிவேஷம். உள்ளுக்குள் அவர்கள் கட்சி அப்படிப்பட்டதெல்லாம் இல்லை.

ஆனால், வெளியிலும்கூட அது உங்களிடம் தெரியவில்லையே?

எங்கள் கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் மனதில் பட்டதைப் பேசிவிடுவோம். மற்ற கட்சிகள் எல்லாமே, உள்ளுக்குள் சாதி, மதம், இனம் எல்லா வெறித்தனத்தையும் வைத்திருக்கிறார்கள். ஆனால், வெளியில் நாடகம் ஆடுகிறார்கள். புரிந்துகொள்ளுங்கள். ஒரு காலகட்டத்தில் வன்னியர் சங்கத்திலிருந்து நாங்கள் தொடங்கியிருக்கலாம். ஒரு கால் நூற்றாண்டு நாங்கள் கடந்துவந்துவிட்டோம். இன்றைக்கு எல்லோருக்குமான ஒரு கட்சி இது.

பாமகவில் ஆரம்பக் காலகட்டங்களில் தலித்துகளுக்கு முக்கியமான பதவிகளை அளிக்கும் வழக்கம் இருந்தது - குறிப்பாகத் தென் மாவட்டங்களில். நீங்கள் அரசியலுக்கு வந்த பிறகும்கூட சாதிக்கு அப்பாற்பட்ட அரசியலை நிறையப் பேசினீர்கள். ஆனால், மீண்டும் நீங்கள் தொடங்கிய இடத்துக்கு சீக்கிரமே திரும்பிவிட்டீர்கள். ஏன் இப்படியானது?

ஆரம்பம் முதலே தலித்துகளை எங்கள் பயணத்தில் கூடவேதான் வைத்திருக்கிறோம். முருகவேல்ராஜன், ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் என்று இங்கு நாங்கள் வளர்த்தவர்கள் வரலாறே உண்டு. நாங்கள் எல்லோருக்குமான பாதையில்தான் போனோம்; போகிறோம். எங்கள் வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள்தான் சாதிக் கட்சி என்று முத்திரைக் குத்தி எங்களை ஒழிக்கப்பார்க்கிறார்கள்.

உங்கள் அணுகுமுறையில் எந்த மாற்றமும் நடக்கவேயில்லை என்கிறீர்களா?

இடையில் சில கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், பல குற்றச்சாட்டுகள் அவதூறுகள்.

பாமகவுக்கு இளவரசன் மரணத்தில், தருமபுரி கலவரத்தில், சேஷசமுத்திரம் கலவரத்தில்…

இதோ பாருங்கள், இளவரசன் காதல் பிரச்சினையில் தற்கொலை செய்துகொண்டவர். இளவரசனையும் திவ்யாவையும் பிரித்து உத்தரவிட்டது நீதிமன்றம். இதில் எங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது? சேஷசமுத்திரம் கலவரத்துக்கு அடிப்படை இரு தனிநபர்களின் மோதல். அவர்கள் இருவருமே எங்கள் கட்சிக்காரர்கள் அல்ல...

நம் மனதுக்குத் தெரியும்… நிச்சயம் இவற்றுக்குப் பின் சாதி இருந்தது…

சாதி இருந்தது. பாமக இல்லை. பழி இது. சதி. உங்களுக்கு மரக்காணம் கலவரத்தை ஞாபகப்படுத்துகிறேன். அப்போதும் இப்படித்தான் பேசினார்கள். உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். கதறினோம். யாரும் கேட்கவில்லை. எங்கள் தரப்பில் 140 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்கள். கடைசியில் நீதிமன்றத் தீர்ப்பு நாங்கள் சொன்னதை உறுதிப்படுத்தியது. குற்றவாளிகளில் ஆறு பேர் விசிகவைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்களில் ஒருவருக்கு நிவாரணம் வேறு கொடுத்திருக்கிறது அரசு. இந்த ஊரில் நியாயம் எப்படியிருக்கிறது, பாருங்கள்! இதே தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாதியின் பெயரால் ஒரு நாளைக்கு நாலு சம்பவங்கள் நடக்கின்றன. அதுபற்றி இங்கே ஒருவரும் பேசுவதில்லை. ஏன் தெரியுமா? ஏனென்றால், அங்கு பாமகவைக் குற்றஞ்சாட்ட முடியாது!

இப்போது தேர்தல் சமயத்தில் அடக்கி வாசிக்கும் காடுவெட்டி குரு, மற்ற சமயங்களில் எப்படி வெறியூட்டும் வகையில் பேசுவார் என்பதையும் மக்கள் கவனிக்கவே செய்கிறார்கள். அப்படியென்றால், அவர் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்பதை நீங்கள்தானே தீர்மானிக்கிறீர்கள்? எப்போதும் அவரை அமைதியாக வைக்க உங்களால் முடியாதா?

நீங்கள் இப்படிக் குறிப்பிடும் குருதான் அரியலூர் மாவட்டத்தில் இரட்டை டம்ளர் முறையை ஒழித்தவர். உங்களுக்குத் தெரியுமா? பாமகவில் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் மாற்றம் வெறுமனே தேர்தல் நிமித்தமானது கிடையாது. இது ஒரு இயக்கத்தின் வளர்ச்சியின், மாற்றத்தின் தொடர்ச்சி.

சரி, நீங்கள் மாற்றம் தொடர்பாகப் பேசுகிறீர்கள். ஒவ்வொரு துறையிலும் உங்களுக்குத் தனிப் பார்வை இருக்கிறது. பாமகவுக்கு சாதி ஒழிப்பில் என்ன நிலைப்பாடு? சாதி ஒழிப்பு இல்லாமல் நம் சமூகத்தில் எந்த மாற்றமும் முழுமை பெறப்போவதில்லை. ஆனால், மாற்றம், மாற்றம் என்று பேசும் உங்களுடைய பிரதான இலக்குகளில் சாதி ஒழிப்புக்கு இடம் இல்லையே, ஏன்?

இந்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் முன்னுக்கு வந்தால் மட்டுமே, சமூக நீதி மலரும். எங்கள் கொள்கையும் அதுவே. ஏனையகட்சிகளைப் போல நாங்கள் பேச்சில் அதைக் காட்டவில்லை. செயலில் காட்டுகிறோம். முதன்முதலில் எங்களுக்கு மத்திய அரசில் அமைச்சர் பதவி கிடைத்தது நாங்கள் அதை தலித் ஏழுமலைக்குக் கொடுத்தோம். பிறகு, பொன்னுசாமிக்கு. இப்போதைய பாமக பொதுச் செயலர் வடிவேலு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இதெல்லாம் எந்தக் கட்சியில் நடந்திருக்கிறது சொல்லுங்கள்! மத்திய நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு கொண்டுவரும் முடிவைக் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இணைக்கவைத்தது நாங்கள். இன்றைக்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த 4,000 பிள்ளைகள் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள் என்றால், அதில் எனக்கும் பங்கு இருக்கிறது. நானும் எங்கள் கட்சியும் சமூக நீதிக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று என்னால் பட்டியல் போட முடியும்.

பல இடங்களில் தலித்துகளுக்கும், வன்னியர்களுக்கும் வாழ்க்கைச் சூழலில் பெரிய வேறுபாடுகள் இல்லை. இரு தரப்புகளுமே பெருமளவில் ஏழ்மையை எதிர்கொள்ளும் இரு பெரிய தரப்புகள். சமூக அமைதி இல்லையென்றால், இரு தரப்புகளுமே வளர்ச்சியை நோக்கி நகர முடியாது. இடையில் பாமகவும் விசிகவும் அரசியல்ரீதியாக சேர்ந்து செயல்பட்டபோது, இரு தரப்பினர் இடையே ஒரு அமைதியைப் பார்க்க முடிந்தது. ஒரு ஆரோக்கியமான மாற்றம் தெரிந்தது. இந்தச் சூழல் எதன் காரணமாக முடிவுக்கு வந்தது? விசிகவுடனான பாமகவின் கூட்டணி முடிவுக்கு வந்த உண்மையான பின்னணி என்ன?

அரசியலுக்காகச் சேர்ந்தோம். அரசியலுக்காகப் பிரிந்தோம். அவ்வளவுதான். வேறு ஒன்றும் இல்லை.

எப்படிப் பார்த்தாலும் உள்ளூர் அரசியலில் வன்னியர் சமூக வளர்ச்சியை முன்னிறுத்தியே நீங்கள் வளர்ந்தீர்கள். ஆனால், அந்தச் சமூகத்துக்கே நீங்கள் செய்தது என்ன என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதிமுக பண்ரூட்டி ராமச்சந்திரனை எங்கே வைத்திருந்தது, திமுக துரைமுருகனை எங்கே வைத்திருக்கிறது, பாமக ஏ.கே.மூர்த்தியை எங்கே வைத்திருக்கிறது? உங்கள் அப்பாவையும் உங்களையும் தாண்டி ஓரளவுக்கு மேல் யாரும் வளர முடியாது என்று கூறுகிறார்களே?

வன்னியர் சமூகத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியும். ஏ.கே.மூர்த்திக்கு என்ன குறைச்சல்? அவரை மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராகத்தானே வைத்திருக்கிறோம்? ஒரு புதிய அரசியல் படையையே உருவாக்கியவர் எங்கள் ஐயா. கட்சியிலும் ஆட்சியிலும் எந்தப் பதவியையும் வைத்துக்கொள்ளாத ஒரே தலைவர். இதுவரை 30 முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். கருணாநிதி மாதிரி மழுப்பலாக அல்ல; ஜெயலலிதா மாதிரி எதற்கும் வாய் திறக்காதவராக அல்ல; தமிழ்நாட்டில் எந்தப் பிரச்சினை என்றாலும் முதலில் குரல் கொடுப்பது அவர்தான். வெளிப்படையாகத் தன் மனதில் பட்டதைப் பேசுபவர். நிழல் நிதி அறிக்கையைத் தொடர்ந்து தாக்கல்செய்யும் மரபை இங்கு உருவாக்கியது அவர். ஒருகாலத்தில், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரின் பிணத்தைத் தோளில் ஏந்திச் சென்ற வரலாறும் அவருக்கு உண்டு. கட்சியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அவருடைய ஆளுமையிலிருந்து வந்தது.

உங்கள் அப்பா பதவிகளுக்கு அப்பாற்பட்ட பணியின் மூலமாகவே மாற்றத்தைப் பற்றிப் பேசினார். நீங்களோ நேர் எதிர்ப் பாதையில் பயணிக்கிறீர்கள். இந்த அணுகுமுறையை விளக்க முடியுமா?

இருவரின் பார்வைக்கும், கால மாற்றத்துக்கும் உள்ள வேறுபாடே காரணம். தொலைநோக்கும் அதிகாரமும் தனித்தனியே இருப்பதைவிடவும் சேர்ந்திருப்பதே நாம் நினைப்பதை விரைந்து செய்ய உதவும். என்னுடைய அரசியல் குரு என்னுடைய அப்பாதான். அணுகுமுறைகள் வேறாக இருக்கலாம்; நோக்கம் ஒன்றே.

சமூக நீதி தொடர்பாகப் பேசும்போது, இடஒதுக்கீடு நினைவுக்கு வருகிறது. இப்போது முன்னேறிய சமூகங்களும் இடஒதுக்கீடு கேட்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சமூகரீதியாக அழுத்தப்பட்ட சமூகங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு இடஒதுக்கீடு தேவை. அது சமூகரீதியிலான பிரதிநிதித்துவமாக இருந்தாலும், அது சரிதான்.

அதாவது, மக்கள்தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம்… 50% இடஒதுக்கீட்டு வரையறையைக் கடக்க வேண்டும் என்கிறீர்களா?

ஆமாம். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வெறும் 50%தான் இருக்கிறார்களா? இடஒதுக்கீட்டில் 50% தாண்டக் கூடாது என்று சட்டரீதியாக வரையறுத்துவிட்டால் அது நீதியாகிவிடுமா? இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

நிறைய நல்ல திட்டங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கின்றன. ஏழு வருஷங்கள் வேளாண்மைக்கு மாதிரி பட்ஜெட் சமர்பித்த அனுபவம் உங்கள் கட்சிக்கு உண்டு. தமிழகத்தில் விவசாயத்தைத் தூக்கி நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பொருளாதார மறுமலர்ச்சிக்கு என்னுடைய திட்டம் ‘ரிவர்ஸ் மைக்ரேஷன்’ கொண்டுவர வேண்டும் என்பது. அதாவது நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி மீண்டும் நம் ஆட்களை ஈர்ப்பது. பெரும்பான்மையினருக்கு வேலை அளிக்கும் விவசாயத்தைத் தூக்கி நிறுத்தாமல் அதைச் செய்ய முடியாது. முதல்வரானதும் விவசாயத்துக்கு மூன்று அமைச்சர்களை நியமிப்பேன். வேளாண் துறைக்கு, தோட்டக் கலைத் துறைக்கு. நீர் மேலாண்மைத் துறைக்கு. நீர் மேலாண்மைத் துறையில் மட்டும் ரூ. 50,000 கோடி ஒதுக்கீடு செய்வேன் ஐந்து வருடங்களுக்கு! தமிழ்நாட்டில் 20 நீர்ப்பாசனத் திட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்தினால் மாவட்டங்களை வளப்படுத்தலாம். உதாரணத்துக்கு அத்திக்கடவு திட்டம். காமராஜர் காலத்துத் திட்டம் இது. பக்தவச்சலம் அறிவித்தார். அவர் 1967 தேர்தலில் தோற்றுவிட்டார். அப்புறம் அண்ணா வந்தார். கருணாநிதி வந்தார். ஒன்றும் செய்யவில்லை. அதையெல்லாம் செய்வேன். மூன்று வேளாண் பல்கலைக்கழகங்ளைத் தொடங்குவேன். நெல்லை, தஞ்சாவூர், வேலூரில். இவற்றை உலக அளவில் விவசாயத்துக்கு முன்னோடியாக இருக்கும் இஸ்ரேலின் ஆராய்ச்சி மையங்களுடன் இணைக்கும் திட்டம் இருக்கிறது. அவர்கள்தான் குறைவான நீரில் விவசாயம் செய்பவர்கள். ஓராண்டுக்கு இஸ்ரேலின் மொத்த தண்ணீர் பயன்பாடு 32 டிஎம்சி. அதாவது, நமது பவானி சாகர் இருக்கிறதல்லவா, அவ்வளவுதான்! அதேபோல், நெதர்லாந்துடன் ஒரு கூட்டணி. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் கொண்டுவருவேன். ஈரோட்டில் மஞ்சள்; பொள்ளாச்சியில் தேங்காய்; தேனியில் கரும்பு; குமரியில் ரப்பர் என்று ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பகுதிக்கேற்ற பயிர்களுக்கான சிறப்பு வேளாண் மண்டலங்களை உருவாக்குவேன். குளிர்பதனக் கிடங்குகள் உருவாக்குவேன். விவசாயிகளுக்கான பயிற்சி மையங்களைக் கொண்டுவருவேன். இளைஞர்களுக்கான கூட்டுறவு அமைப்புகளை நிறுவுவேன். அந்த அமைப்புகள் மூலம் விளைப்பொருட்களை வாங்கி மதிப்புக் கூட்டுப் பொருளாக்கிச் சந்தைப்படுத்துவோம். ஒரு விவசாயி உருளைக்கிழங்கை விற்றால், அது கிலோ பத்து ரூபாய். சிப்ஸாக்கி விற்றால் ஐந்நூறு ரூபாய். இல்லையா? இதேபோல, பால், கடலுணவு ஒவ்வொன்றுக்கும் பல திட்டங்களை வைத்திருக்கிறேன். இதையெல்லாம் செய்ய தமிழ்நாட்டிலேயே வேளாண் நிபுணர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகிறார்கள். கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் அவர்கள் பார்க்கத்தான் முடியுமா; அவர்கள் இருவருக்கும் இப்படியான விஷயங்கள்தான் புரியுமா?

ஒரு மருத்துவராக தமிழகத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த இரண்டு ஒரு வரித் திட்டங்களைச் சொல்லுங்களேன்...

தமிழகத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.13.25 லட்சம் கோடியாக இருக்க வேண்டும். இன்றைக்கு ரூ.11 லட்சம் கோடியாக இருக்கிறது. ரூ.2.25 லட்சம் கோடி இழப்புக்கு காரணம் என்ன தெரியுமா? மது. அதனால்தான் மதுவிலக்குக்கே முதல் கையெழுத்து என்றேன். நம்முடைய உணவு நஞ்சாகிவிட்டது. இயற்கை வேளாண்மையை நோக்கி நாம் திரும்ப வேண்டும். இன்றைக்கு மத்தியப் பிரதேசத்தில் 29% வரை இயற்கை வேளாண் முறைக்கு மாறிவிட்டார்கள். தமிழ்நாட்டில் அதற்கான முயற்சிகள் விவசாயிகள் மத்தியில் இருந்தாலும், அரசாங்கம் அவர்களுக்கான உதவியாக இல்லை. நான் முதல்வரானதும் இதற்கு முன்னுரிமை கொடுப்பேன். சுகாதாரத்தை நல்ல குடிநீர், உணவிலிருந்தே தொடங்க வேண்டும். எனக்கு நிறையத் திட்டங்கள் இருக்கின்றன. ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் மக்களைக் கேட்கிறேன்.

எல்லாம் சரி, ஜெயலலிதாவை அகங்காரக்காரர் என்கிறீர்கள். உங்கள் பேச்சு முழுக்க இப்போதே ‘நான், என், என்னுடைய’ என்று இருக்கிறதே? பாமகவைவிட அன்புமணி பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகிறதே…

ஹா..ஹா.. இது ஒரு அரசியல் முழக்கம். அவ்வளவுதான். பாமக இல்லாவிட்டால் அன்புமணி ஏது? எனக்கு என்று ஒரு அணி அல்ல; படையையே வைத்திருக்கிறேன். ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்; என்ன செய்கிறேன் என்று!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்