*
ஒரு முறை மஜுலி தீவில் இருக்கும் ஸாத்ரா என்று அழைக்கப்படும் வைணவ மடாலயத்துக்குச் சென்றிருந்தேன். தீவு முழுவதும் பல ஸாத்ராக்கள். அவற்றில் மிகவும் புகழ்பெற்றது இது. வைணவக் குருவான சங்கர தேவராலேயே ஆரம்பிக்கப்பட்டது என்று சொன்னார்கள். ஸாத்ராவில் பல வடிவங்கள். எனக்கு மிகவும் பிடித்தது வெண்கலத்தால் செய்யப்பட்ட கருடனின் வடிவம். அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு துறவி விரைந்துவந்தார். அதைப் பார்த்து “பொக்கி பொக்கி’’ என்றார்.
பொக்கி என்றால்? கருடப் பொக்கியா, பொக்கி ராஜாவா என்று பலவகையாக யோசித்தேன். கருட பக்ஷி அல்லது பக்ஷிராஜா என்று புரிந்துவிட்டது. அது என் தந்தையின் பெயர். துறவிக்கு மிகவும் சந்தோஷம். ‘‘ஒரே பெயர்! மதராஸ்-மஜுலி’’ என்றும் சொல்லிச் சிரித்தார். இந்தியாவின் இழைகளில் ஒன்றுதான் இது. இதையே மற்றொரு வடிவில், அதே நாளில் மற்றொரு இடத்தில் பார்க்க முடிந்தது. உல்ஃபா தீவிரவாதிகளின் தூதுவர் ஒருவருடன் பேச வேண்டிய கட்டாயம். எங்கள் பொறியாளர் கடத்தப்பட்டிருந்தார். அவரை மீட்க வேண்டியிருந்தது. தூதுவர் தீயை உமிழ்ந்துகொண்டிருந்தார். “இந்தியா வேறு நாடு. இந்தியர்கள் துரோகிகள். எங்களுக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியக் கலாச்சாரம் எங்களுக்கு வேண்டாம்’’ என்று உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். உரத்த குரலில் பேச வேண்டிய கட்டாயம். பக்கத்து அறையில் அவரது மனைவி - இவருக்குச் சிறிதும் பயப்படாதவர் - பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். ரஹ்மான் இசை அமைத்த பாட்டு. பம்பாய் படத்தில் வருமே ‘கண்ணாளனே…’ அந்தப் பாட்டின் இந்தி வடிவம். தூதுவரிடம்
‘இது எந்தக் கலாச்சாரம்?' என்று கேட்க நினைத்தேன். எங்களது பொறியாளர் உயிரோடு திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்ததால் கேட்கவில்லை.
தீவிரவாதத்தின் பிடியில்
உல்ஃபாவின் வரலாற்றை முழுவதும் விளக்க இது இடமில்லை. ஆனால், உல்ஃபா ஆரம்பிக்கப்பட்டதற்கும் ஆயுதங்களைக் கையில் எடுத்ததற்கும் முக்கியமான காரணம் - அசாம் இந்தியக் காலனியாதிக்கத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது என்று நம்பியதுதான். அன்று அசாமில் ஆயுதம் எடுக்காத சிலரும் இதை நம்பினார்கள். வங்கிகளை அது கொள்ளை அடித்தபோதும் அசாமியப் பத்திரிகைகள் கொள்ளை களை எதிர்த்து எழுத முன்வரவில்லை அல்லது முன்வர முடியாத கட்டாயம். அசாம் கண பரிஷத் (மாணவர்களின் அமைப்பு) அரசு தீவிரவாதத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்தது. 1991-ல் மக்கள் காங்கிரஸைத் திரும்பத் தேர்ந்தெடுத்தனர். அன்று தொடங்கியது உல்ஃபாவின் வீழ்ச்சி. இன்று அதன் தலைவர், சில மக்கள் பிரிவினரைப் பழங்குடி மக்களாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கிறார். பிரிவினை வாதத்தை மக்கள் முற்றிலும் புறக்கணித்துவிட்டனர். இயக்கத்தின் பெருந்தலைவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள் அல்லது தலைமறைவாக இருக்கிறார்கள். ஆனால், இடைப்பட்ட காலத்தில் பல குண்டுகள் வெடித்தன. பல படுகொலைகள் நடந்தன.
எங்கே கொண்டுவிடும்?
உல்ஃபா இயக்கம் தொடங்கியபோது, அவர்களுடன் இருந்த போடோ குழுவினர் பின்னர் தங்களுக்கும் அசாமியருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லத் துவங்கினர். இவர்களும் படுகொலைகளில் ஈடுபட்டனர். கர்பி என்று சொல்லப்படும் மற்றொரு குழுவினரும் தாங்கள் தனி என்று சொல்லிக்கொண்டு அவர்களது இயக்கத்தை ஆரம்பித்தனர். இதனால் எந்தத் துறையும் தீவிரவாதிகளுக்குப் பணம் கொடுக்காமல் இயங்க முடியாத கட்டாயம் இருந்தது. ஒப்பந்ததாரர்கள் தனியாக 10 சதவீதம் ஒதுக்கி வைத்திருந்தனர். அரசு ஊழியர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை அழ வேண்டியிருந்தது. அதிகாரிகள் கடத்தப்பட்டு பெரிய பிணைத்தொகை கேட்கப்பட்டது. பணம் வராவிட்டால் அவர்கள் கொலைசெய்யப்பட்டனர். இவை வடகிழக்குப் பிரதேசம் முழுவதும் நிகழ்ந்தாலும் (சில இடங்களில் இன்றும் நிகழ்கின்றன) அசாமில் தீவிரமாக நிகழ்ந்தன. எனக்குத் தெரிந்து பல முக்கியமான திட்டங்கள் முடக்கப்பட்டன.
முன்னேற்றப் பாதையில் அசாம் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம், தமிழ்நாட்டின் மக்கள்தொகை 6.8 கோடி. மாநிலத்தின் மின்உற்பத்தித் திறன் 24,747 மெகாவாட்கள். அசாமின் மக்கள்தொகை 3.1 கோடி. மாநிலத்தின் மின்உற்பத்தித் திறன் 1,369 மெகாவாட்கள். தமிழகத்தைவிட மக்கள்தொகையில் பாதிக்குச் சற்றுக் குறைவு. மின்உற்பத்தியில் 1 : 20 பங்குக்குச் சிறிது அதிகம். வடகிழக்குப் பகுதியில் இருக்கும் நீர் மின்உற்பத்தியை வலுப்படுத்தினால் 40,000 மெகாவாட்கள் மின்சாரம் பெற முடியும்.
அசாமின் பாடங்கள்
தமிழ்நாட்டுக்கு அசாம் மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. பிரிந்து போகத் துடிப்பவர்களிடமிருந்து பிரிந்து போகத் துடிப்பவர்களும் கட்டாயம் இருப்பார்கள். தனித் தமிழ்நாடு கேட்டால், எங்களுக்குத் தனித் திருநெல் வேலி கொடு என்று கேட்பார்கள். அவர்களுக்குச் சரியாகப் பதில் சொல்லி மீள்வது கடினம்.
அசாம் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொடுக்கிறது. மக்களாட்சி எந்தத் தடைகளையும் தாண்டிச் செல்லக்கூடிய உறுதியை மக்களுக்கு அளிக்கிறது. தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோதும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களாட்சிக்காகவும் தேசிய ஒற்றுமைக்காகவும் பாடுபட்டவர்கள் மாநிலத்தின் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நாடு நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறது.
(தொடரும்)
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago