எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் முதன்முறையாக நாகை மாவட்டம், சியாத்தமங்கை கிராமத்தில் 14 வீடுகளுக்குக் குழாய் வழியாகச் சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டம் ஜூன் 17இல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிலிண்டரைவிடக் குழாய் மூலம் எரிவாயு கிடைப்பது வசதியாக இருக்கிறது என்று பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். சிலிண்டர் மூலம் ரூ.1,000 செலவு என்றால், குழாய் மூலம் ரூ.800 – 850 மட்டுமே செலவாகும். ஓஎன்ஜிசியால் உற்பத்தி செய்யப்பட்டு, கெயில் இந்தியா நிறுவனம் - டாரென்ட் தனியார் நிறுவனம் ஆகியவற்றால் இந்த எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.

மத்திய அரசுக் கொள்கை முடிவின்படி, இயற்கை எரிவாயு உபயோகத்தில் தலையாயது, வீட்டுக்கு வீடு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வது. அடுத்த நிலையில் முக்கியத்துவம் பெறுவன: யூரியா உள்ளிட்ட உர உற்பத்தி; மாநிலப் பகிர்மானத்துக்கு உட்பட்ட மின்னுற்பத்தி; இரும்பு, பீங்கான், டைல்ஸ் முதலான உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் தேவை.

குழாய் விநியோகம்

வீட்டுக்கு வீடு தண்ணீர்க் குழாய்போல் எரிவாயு விநியோகம் செய்ய (CGD - City Gas Distribution) திட்டமிடப்பட்டு, முக்கிய நகரங்கள் - நகர்ப்புறத்தை ஒட்டிய ஊர்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை குழாய் அமைத்துவரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பணி கிட்டத்தட்ட முடிவுறும் நிலையில் உள்ளது.

அதில் இடையிடையே கிளைக் குழாய்கள் (Spur Lines) நாகப்பட்டினம் முதல் மதுரை வரை, தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரை, பெங்களூரு, கோலார், சித்தூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட நகரங்கள் பலவும் இணைக்கப்பட்டுள்ளன.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூர் முனையத்தில் அதை மீண்டும் வாயுவாக்கிக் குழாய் மூலம் அனுப்புவதே திட்டம். எங்கெல்லாம் இயற்கை எரிவாயுவை ஓஎன்ஜிசி நிறுவனம் உற்பத்தி செய்கிறதோ, அது ஆங்காங்கே குழாய் வலைப்பின்னலில் (Network) சேர்த்துக்கொள்ளப்படும்.

உதாரணமாக, தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்துக்கு நாளொன்றுக்குத் தேவைப்படும் 15 லட்சம் கனமீட்டர் இயற்கை எரிவாயுவில், 9 லட்சம் கனமீட்டர் ராமநாதபுரம் வாலாந்தரவை ஓஎன்ஜிசி எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் இருந்து அனுப்பப்படுகிறது..

அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் திருநகரி பகுதியில் ஓஎன்ஜிசியிடம் உற்பத்திக்குத் தயாராக இருக்கும் சுமார் மூன்று லட்சம் கனமீட்டர் இயற்கை எரிவாயு, மாதானம் பகுதியிலிருந்து இந்தக் குழாய் வலைப்பின்னலில் அனுப்பப்பட இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக நாட்டின் பல பகுதிகளையும் இணைக்கின்ற இறுதி வலைப்பின்னல் குழாய்கள் மூலம்தான் எல்லா தேவைகளுக்குமான எரிவாயு விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

எதிர்காலத்தில் ராமநாதபுரத்திலோ குத்தாலத்திலோ உற்பத்தியாகும் அதிகப்படி இயற்கை எரிவாயு திருவாரூரிலோ திருப்பரங்குன்றத்திலோ திருவள்ளூரிலோ இருக்கும் ஒரு தொழிற்சாலைக்குத் தேவைப்பட்டால், ஒப்பந்தம் மூலம் அனுப்புவது சாத்தியமாகிவிடும்.

இயற்கை எரிவாயு அவசியம்

அடுத்து வரும் சில காலத்துக்கு இயற்கை எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் இரண்டு காரணங்களால் தவிர்க்க இயலாத ஒன்றாகிவருகிறது. மிகப் பெரிய அளவில் காற்றுச் சக்தியோ, சூரிய சக்தியோ உபயோகத்துக்கு வரும் வரையில், இயற்கை எரிவாயுதான் மாசு குறைந்த மாற்று எரிபொருள். இயற்கை எரிவாயு அடிப்படையிலான எந்தத் தொழிலும் குறைந்த மாசுபாட்டையே வெளிப்படுத்தும்.

இரண்டாவது காரணம் விலை. உதாரணமாக, ஸ்பிக் நிறுவனம் யூரியா தயாரிப்பதற்கு நாஃப்தா எனப்படும் எரிபொருளை உபயோகித்துவந்தது. இப்போது ராமநாதபுரம் ஓஎன்ஜிசியிடம் இருந்து இயற்கை எரிவாயு பெற ஆரம்பித்த பிறகு, அந்நிறுவனத்தின் யூரியா உற்பத்திச் செலவு பெருமளவில் குறைந்திருக்கிறது.

நாஃப்தா உபயோகித்து வந்தபோது 15டாலர் செலவில் கிடைத்த பலன், இயற்கை எரிவாயுவின் தற்போதைய விலையான 1 எம்.எம்.பி.டி.யு. (Million Metric British Thermal Unit) 6.1 டாலருக்குக் கிடைக்கிறது. இதனால், அரசாங்கத்துக்கு மானியச் செலவு பெருமளவு மிச்சம். தினசரி 9 லட்சம் கனமீட்டர் எரிவாயு உபயோகத்தால் 50% மானியச் செலவு குறைந்திருக்கிறது.

ஸ்பிக் நிறுவனத்துக்குக் கூடுதல் ஆறு லட்சம் கனமீட்டர் எரிவாயுவை ஓஎன்ஜிசியே கூடுதலாக உற்பத்தி செய்தால், தற்போதைய விலையில் பெறலாம். இல்லாத பட்சத்தில் எண்ணூர் முனையத்தில் இறக்குமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவுக்குப் பல மடங்கு கூடுதல் விலை தர வேண்டிவரும். அரசாங்கத்துக்கு மானியச் செலவு அதிகரிக்கும் அல்லது விவசாயி கூடுதல் விலை கொடுத்து யூரியா வாங்க வேண்டியிருக்கும். எப்படியிருந்தாலும் மானியம் என்பதும் மக்களின் வரிப்பணம்தானே.

ஓஎன்ஜிசியின் பங்கு

இவை ஒருபுறம் இருக்க, சென்ற ஆண்டு அக்டோபர் வரை 1 எம்.எம்.பி.டி.யு.வுக்கு 1.79 டாலராக இருந்த இயற்கை எரிவாயுவின் விலை, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 6.1 டாலராக உயர்ந்துள்ளது. இது இந்த ஆண்டு அக்டோபர் முதல் இன்னும் விலை அதிகரிக்கச் சாத்தியம் அதிகம். இந்நிலையில், எரிவாயுவை உபயோகித்து மின்னுற்பத்தி செய்யும் புதிய நிலையங்களை அமைப்பது பொருளாதாரரீதியாகச் சாத்தியமற்றுப் போகும்.

அதே நேரம், ஏற்கெனவே நம்மிடம் உள்ள தமிழ்நாடு மின்னுற்பத்தி - பகிர்மானக் கழகத்துக்குச் சொந்தமான மன்னார்குடி திருமக்கோட்டை நிலையம், மயிலாடுதுறை குத்தாலம் நிலையம், ராமநாதபுரம் முதல் நிலை, இரண்டாம் நிலை நிலையங்கள் ஆகியவை தவிர, தனியார் நிலையங்களான லான்கோ, ஆர்கே, பயோனீர் போன்ற மின்னுற்பத்தி நிலையங்களையும் அவற்றின் முழு உற்பத்தித் திறனுடன் இயங்க வைக்க முயலலாம்.

இயற்கை எரிவாயு உற்பத்தித் தட்டுப்பாடு காரணமாக, இவை அனைத்தும் 50 முதல் 60 சதவீதத் திறனுடன்தான் இயங்குகின்றன. இவற்றுக்குத் தேவையான இயற்கை எரிவாயுவையும் ஓஎன்ஜிசி மூலம் உற்பத்திசெய்ய நடவடிக்கைகள் எடுத்தால் குறைந்த செலவில் மின்னுற்பத்தி சாத்தியம்.

இந்திய நிலப்பகுதியில் திரிபுராவுக்கு அடுத்தபடியாக தமிழகம்தான் அதிக இயற்கை எரிவாயு வளத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு சிறு ஒப்பீடு: நம்மிடம் இருக்கும் இயற்கை எரிவாயுவைத் துரப்பணம் செய்ய வேண்டியதன் தேவையை நியாயப்படுத்தும் தரவுகளின் அடிப்படையில் உள்நாட்டு இயற்கை எரிவாயு 1 எம்.எம்.பி.டி.யு.வின் விலை 6.1 டாலர் என்றால், இறக்குமதியாகும் இயற்கை எரிவாயுவின் செலவு சுமார் 30முதல் 50டாலர் வரை. எனவே, நாட்டின் எரிபொருள் தேவைக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பொருளாதார - சமூக மேம்பாட்டிலும் ஓஎன்ஜிசி போன்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது.

- பி.என்.மாறன், காவேரி அஸட் ஓஎன்ஜிசி-யில் குழுமப் பொது மேலாளர்.

தொடர்புக்கு: pnmaran23@gmail.com

To Read this in English: Need to augment cooking gas production

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

23 days ago

கருத்துப் பேழை

23 days ago

கருத்துப் பேழை

23 days ago

மேலும்