ஜிஎஸ்டி - ஐந்தாண்டுகள் உற்றதும் கற்றதும்

By புவி

இந்தியா முழுவதும் மறைமுக வரிகளில் சமச்சீரான அளவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நீண்ட காலக் கோரிக்கை. மாநிலங்களுக்கு இடையே வெவ்வேறான வரிவிகிதங்கள் பின்பற்றப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.

அந்தக் கோரிக்கையானது, சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டு ஐந்தாண்டுகள் முடிந்துவிட்டன. உற்பத்தி அடிப்படையிலான வரிவிதிப்பு என்ற பழைய முறையிலிருந்து நுகர்வு அடிப்படையிலான வரிவிதிப்பை நோக்கி ஒரு பெரும் மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, விலைப் பட்டியல்களை இணையம்வழி கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் சிறு குறு தொழிலதிபர்களைக் கடுமையாகப் பாதித்தன.

குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும், தவறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் அவர்களை மனக் கலக்கத்துக்கு ஆளாக்கின. என்றாலும், அடுத்த சில மாதங்களுக்குள் இந்தச் சிக்கல்கள் களையப்பட்டு, ஜிஎஸ்டி கணக்குகளைச் சமர்ப்பிக்கும் முறைகள் எளிதாக்கப்பட்டன.

ஆனால், தொடக்கத்தில் ஏற்பட்ட தொழில் சுணக்கத்திலிருந்து சிறு குறு தொழிலதிபர்கள் மீண்டு வருவதற்கு மேலும் சில மாதங்கள் தேவைப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிப் பரிவர்த்தனைகளில் நிலவிய சுணக்கத்திலிருந்து மீண்டுவந்த சிறு குறு தொழிலதிபர்கள் ஜிஎஸ்டியின் காரணமாக மீண்டும் ஒரு சவாலை எதிர்கொண்டனர்.

அதிகரித்துவரும் வரி வசூல்

அறிமுகப்படுத்தி ஐந்தாண்டுகள் ஆன போதிலும் கடந்த சில மாதங்களாகத்தான் ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வசூலாகிறது. வரி தொடர்பான அனைத்துத் தகவல்களும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் வரி ஏய்ப்புகளுக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களின் வாயிலாக, மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் ஓரளவு இணக்கமான சூழலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியின் ஐந்தாண்டுப் பயணத்தில் கிடைத்திருக்கும் வெற்றிகள் இவை.

நிறைவேறாத நோக்கங்களும் உண்டு. பெட்ரோல், டீசல், மதுபானங்கள், மின்சாரம் ஆகியவற்றையும் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் விரும்பினாலும் அவற்றை விட்டுக்கொடுக்க மாநில அரசுகள் தயாராக இல்லை. தற்போதைக்கு மாநில அரசுகளுக்கு அதிக வருவாயைப் பெற்றுத்தருபவையாக பெட்ரோல், டீசலும் மதுபானங்களுமே உள்ளன.

பெரும்பாலான சரக்குகளிலும் சேவைகளிலும் பெட்ரோல், டீசலின் பயன்பாடு தவிர்க்க இயலாததாக இருக்கும் நிலையில், அவற்றுக்காகச் செலுத்தப்பட்ட வரியையும் இறுதி விலையில் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது தொழில் துறையினரின் கோரிக்கை.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதால் மாநில அரசுகளுக்கு வரிவருவாய் இழப்பு ஏற்படாதவகையில் சிறப்புத் தீர்வை ஒன்றை விதிக்கலாம் என்ற கருத்துகளும் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், அத்தகைய சிறப்புத் தீர்வையும் தற்காலிகமாகத்தான் இருக்க முடியும்.

மாதாந்திர இலக்கு

அடுத்து, மாதாந்திர ஜிஎஸ்டி வசூலை ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கான திட்டம் உள்ளது. அதற்காக 18% வரியடுக்கில் இன்னும் கூடுதலான சரக்கு மற்றும் சேவைகள் சேர்க்கப்படலாம். தற்போது 18% வரியடுக்கில் உள்ள சரக்கு மற்றும் சேவைகளிலிருந்தே 46% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான தீர்வையையும் விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது தொழில் துறையினரின் வேண்டுகோள். ஆனால், ஜிஎஸ்டி இழப்பீட்டுக்காகப் பெறப்பட்ட கடன்களுக்காகத் தீர்வையைத் தொடர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

ஐந்து வரியடுக்குகளில் வசூலிக்கப்பட்டுவரும் ஜிஎஸ்டியை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாகக் குறைக்கலாம் என்ற யோசனையும்கூட முன்வைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு, செயல்வடிவம் பெறுவதிலும் தாமதமாகிறது.

கூட்டுறவுக் கூட்டாட்சியே ஜிஎஸ்டி வரிவிதிப்பின் ஆதாரப் புள்ளி என்று வர்ணிக்கப்பட்டாலும், ஐந்தாண்டு கால அனுபவம் அதை நம்பமுடியாமல் செய்துவிட்டது. ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தாமதிக்காமல் வழங்குமாறு மாநிலங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததே கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய அரசியல் விவாதமாக விளங்கியது.

மே 2022 வரையிலான அனைத்து இழப்பீடுகளும் வழங்கப்பட்டுவிட்டன என்றாலும் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வருவாய் வாய்ப்புகள் எதுவுமில்லாமல் மாநிலங்கள் தத்தளித்தபோது ஜிஎஸ்டி இழப்பீடு உடனடியாகக் கைகொடுக்கவில்லை என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மாநிலங்களுக்குத் தாமதமின்றி ஜிஎஸ்டி இழப்பீடுகளைக் கொடுக்க முடியாததற்கு, பெருந்தொற்றுக் காலத்தில் வரிவசூல் குறைந்ததைக் காரணம்காட்டி, மத்திய அரசு தனது பொறுப்புகளிலிருந்து தப்பிக்க இயலாது.

வரிவசூலை அதிகரிப்பதற்காக வரியடுக்குகளைக் குறைக்கவும் எளிமைப்படுத்தவும் தொடக்கத்திலிருந்தே விவாதிக்கப்பட்டுவந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் இன்னமும்கூட வேகம் காட்டப்படவில்லை.

அதைக் காட்டிலும் முக்கியமானது 2019 மக்களவைத் தேர்தலையொட்டி ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள். பெரும்பாலான சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் வரிவிகிதம் குறைக்கப்பட்டதும் மிகச் சில சரக்கு, சேவைகளுக்கு மட்டுமே வரிவிகிதம் உயர்த்தப்பட்டதும் தேர்தலை மனதில்கொண்டே எடுக்கப்பட்ட முடிவுகள் என்ற விமர்சனமும் உண்டு.

அண்மையில் நடந்த கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி இழப்பீட்டைக் குறைந்தபட்சம் இரண்டிலிருந்து ஐந்தாண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்று 12 மாநிலங்கள் கோரியுள்ளன. இழப்பீடு கோருவதற்கான முக்கியக் காரணம், கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளிலிருந்து மாநிலங்களால் மீண்டுவர முடியவில்லை என்பதுதான்.

பெருந்தொற்றுக் காலத்தில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்காக மத்திய அரசு வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தீர்வையை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ள முடியும் எனில், இன்னும் பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து முழுமையாக விடுபட முடியாமல் தவிக்கும் மாநிலங்களுக்கு இழப்பீட்டைத் தொடர்வதும் நியாயம்தான். ஆனால், இது குறித்து மத்திய அரசு இதுவரையில் வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்காமல் தவிர்க்கிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் பெரும்பான்மை முடிவை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், மாநிலங்களின் கருத்தொருமிப்புடன் முடிவுகள் எடுக்கப்படும்போது மட்டுமே இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வுகளை அளிக்க முடியும்.

கருத்தொருமிப்புடன் கூடிய முடிவை எடுக்க முடியவில்லையெனில், மறைமுக வரிவிதிப்பில் கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவம் வெற்றிபெறவில்லை என்று அர்த்தமாகிவிடக்கூடிய அபாயமும் காத்திருக்கிறது.

To Read this in English: Five years of GST: What’s happened and what’s learnt

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

26 days ago

மேலும்