உயர் கல்விக் கனவு கைக்கு எட்டுமா?

By ஆயிஷா இரா.நடராசன்

ஒரு சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை உயர் கல்வியில் எட்டப்படும் வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. வளரும் நாடான இந்தியா, உயர் கல்வி சார்ந்த வளர்ச்சியில் எங்கே இருக்கிறது? அதற்கு முன்னர் உயர் கல்விக்கு முக்கியத்துவம் தரும் சில நாடுகளின் நிலையைப் பார்ப்போம்.

டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் போன்ற இந்தியாவைவிடச் சிறிய நாடுகள். இந்த நாடுகளில் உயர் கல்வி கற்பதற்கான கல்லூரி-பல்கலைக்கழகம் இரண்டிலுமே கல்விக் கட்டணம் கிடையாது. மக்கள்தொகையிலும் பொருளாதார நிலையிலும் நம்மை ஒத்த ஜெர்மனியில் உயர் கல்வி வரை எந்தக் கட்டணமும் இல்லை.

அமெரிக்காவின் நியூயார்க் கிராஸ்மன் மருத்துவக் கல்வியகத்தில் கடந்த ஆண்டு வித்தியாசமான ஒரு முயற்சி நடந்தது. தங்களது கல்வியகத்தின் முதுநிலை மருத்துவ (எம்.டி.) படிப்பிற்கான அனைத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், பொது நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் வசூலித்து, அந்தக் கல்வியகமே செலுத்திவிட்டது.

டென்மார்க்கில் கடந்த ஆண்டு முதல் ஐரோப்பியக் கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்து வந்து உயர்கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கட்டணம் நிர்ணயித்துச் சட்டம் இயற்றப்பட்டது.

இதேபோல அயல்நாடுகளிலிருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு மட்டும் பல்கலைக்கழகக் கட்டணத்தை நிர்ணயிக்க பின்லாந்து அரசு முயன்றபோது ‘கல்வி கற்கக் கட்டணமா, கூடவே கூடாது’ என்று பொது விவாதம் மூலம் மக்கள் அந்த முயற்சியைத் தோற்கடித்தனர். உடனடியாக பின்லாந்து அரசும் உத்தரவைத் திரும்பப் பெற்றது.

கட்டணமற்ற கல்வியும் மகிழ்ச்சித் தரவரிசையும்

மக்களுக்குக் கட்டணமின்றித் தரமான கல்வியை வழங்கும் பின்லாந்து, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மூன்று விஷயங்களில் நம்மைவிடப் பல மடங்கு உயர்ந்து நிற்கின்றன. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் அவைதான் முதல் ஆறு, ஏழு இடங்களை ஆண்டுதோறும் பிடிக்கின்றன (கடந்த ஆண்டு இந்தியா 129-வது இடத்தைப் பெற்றது).

உலக கல்வித் தரவரிசைப் பட்டியலிலும் கட்டணமற்ற கல்வி தரும் நாடுகளே முதல் 10 இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன (இந்தியா 132-வது இடத்தில் உள்ளது). அவர்களுடைய சமூகங்களில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அதிகபட்ச மாதச் சம்பளம் பெறுகிற அளவுக்கு பட்ஜெட்டில் போதிய தொகையைக் கல்வித் துறைக்கு அந்நாடுகள் ஒதுக்குகின்றன.

கட்டணக் கல்வியின் பின்விளைவுகள்

இந்தப் பின்னணியில் உயர் கல்வித் துறை சார்ந்து இந்திய அளவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது ஏமாற்றமே ஏற்படுகிறது. நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான தனிப் பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

பொறியியல் படிப்புக்கான குறைந்தபட்சக் கல்விக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திய, அகில இந்திய பொறியியல் கல்வி கவுன்சிலின் (AICTE) சமீபத்திய அறிவிப்பு அதிர்ச்சியைத் தருகிறது. ஒருவர் தொழிற்கல்விப் படிப்பை முடிக்கும் முன்பே வங்கிக் கடனாளி ஆகும் நிலை நிதர்சனமாக உள்ளது.

இந்தியக் கல்வித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு 2014-ல் 17 சதவீதமாக இருந்தது, தற்போது 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. பள்ளிக்குள் நுழையும் 100 மாணவர்களில் இந்திய அளவில் 19 பேர் மட்டுமே கல்லூரிக்குச் செல்கிறார்கள். தமிழகம் அதிகபட்சமாக 50 பேருக்கு மேல் கல்லூரிக்கு அனுப்புகிறது.

ஆனால், உயர்ந்துவிட்ட கல்விக் கட்டணத்துக்காகக் கடன் பெற்றும் நிலபுலனை விற்றும் பெறப்படும் கல்வியால், ‘போட்ட பணத்தை எப்படியாவது திரும்ப எடுத்துவிட வேண்டும்’ எனும் மனநிலையில் எதிர்கால வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பட்டதாரிகள் உருவாகிறார்கள்.

சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு, சமூக நலன் சார்ந்த உழைப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. இந்நிலையில், உயர் கல்விக்கும் சேர்த்து ஒரு மாற்று வழியைத் தமிழக அரசு நியமித்துள்ள மாநிலக் கல்விக் கொள்கைக் குழு வழங்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

- ஆயிஷா இரா. நடராசன், கல்வியாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

To Read this in English: Will higher education be accessible to all?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்