வந்துவிட்டது அனைவரும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்த அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கை! இறுதியாக வரும் அறிக்கை என்பதால் அஇஅதிமுகவுக்குச் சில ஆதாயங்கள் உண்டு. மற்ற அறிக்கைகளின் சிறப்பான விஷயங்களை மக்கள் விரும்புவார்கள் என்று கணித்தால் அப்படியே நகலெடுத்துவிடலாம். அதே நேரம் நீங்கள் முன்வைக்கும் சிலவற்றை வேறு யாரும் சுவீகரித்துக்கொள்ள முடியாது.
இரண்டையும் நம்மால் பார்க்க முடிகிறது. பாமக, திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாஜக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகளில் இருக்கும் சில பொதுவான விஷயங்கள் அப்படியே அச்சாக, அல்லது சில மாற்றங்களுடன் அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
‘படிப்படியாக’த்தான்
ஊழல் ஒழிப்புக்கு லோக் ஆயுக்தா அமைப்பு, பயிர்க்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, கிரானைட், தாது மணல் அகழ்வதை முறைப்படுத்துதல், விவசாய வளர்ச்சி, நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பை அதிகரித்தல் போன்றவற்றை நாம் அஇஅதிமுகவின் அறிக்கையிலும் பார்க்கிறோம்.
மதுவிலக்கைப் பொறுத்தமட்டில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தன் முடிவிலிருந்து மாறவில்லை. ‘படிப்படியாக’த்தான் மதுவிலக்கு. முதலில் நேரக் குறைப்பு, பிறகு பார்களை அகற்றுதல், பிறகு கடைகள் குறைப்பு. குடிகாரர்களுக்குச் சிகிச்சை. இறுதியாக மதுவிலக்கு. இதற்கான காலக்கெடு குறிப்பிடப்படவில்லை. மற்ற கட்சிகள் முதல் கையெழுத்தில் ஒரே நாளில் மதுவிலக்கு என்கிறார்கள், கவனிக்கவும்!
அடுத்து, திமுகவின் கனவைத் தவிடுபொடியாக்கவேண்டும் என்ற ஆவல். திமுக முன்வைத்த வாக்குறுதிகளில் ஒன்று பால் விலை குறைப்பு. இரண்டாவது மின் கட்டணக் குறைப்பு. மின் கட்டணப் படிநிலையை மாற்றாமல், இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு என்பதை மாதத்துக்கு ஒருமுறை என்று மாற்றினால், அனைத்து வீடுகளுக்கும் கட்டணம் குறையும். மக்கள் நலக் கூட்டணியும் இதே வாக்குறுதியை அளித்தது. அஇஅதிமுக இதற்கு மாற்றாக, ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்துவிட்டது.
மையப்புள்ளி!
பால் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் வரை குறைப்போம் என்றது திமுக. மக்கள் நலக் கூட்டணி பால் விலையைக் குறைப்பதாக மட்டும் சொன்னார்கள். அஇஅதிமுக அறிக்கை “மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகையில் வைட்டமின் ஏ, டி, இரும்புச் சத்து ஆகியவை செறிவூட்டப்பட்ட பால்” லிட்டருக்கு 25 ரூபாய் என்கிறது. கேட்கும் அனைவருக்கும் இந்த விலைக்குக் கிடைக்குமா என்ற தெளிவு இல்லை. அஇஅதிமுகவுக்கு இவையெல்லாம் பெரிய விஷயங்களே அல்ல. பிறர் சொல்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஆதாயமும் வராதபடிக்கு நாங்களும் சொல்கிறோம். அவ்வளவுதான்.
இலவசத் திட்டங்கள்தாம் அஇஅதிமுக அறிக்கையின் மையப்புள்ளி! முதல் இலவசம், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஒரு செல்பேசி. இது என்ன விலை, என்ன திறன்? சொல்லவில்லை. அடுத்தது, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பெற்றிருப்பவர்களுக்கு இலவச செட் டாப் பாக்ஸ். இலவச மடிகணினி கொடுப்பது நீடிக்கும். திமுக சொன்னதுபோல இணைய இணைப்பும் கூடுதலாக உண்டு.
பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகளும் இலவசங்களும் உள்ளன. தாலிக்குத் தங்கம் அரைப் பவுனிலிருந்து ஒரு பவுன். பேறுகால உதவித்தொகை 12,000த்திலிருந்து 18,000 ரூபாயாக உயர்வு. இதையெல்லாம்விட மிகப்பெரிய விஷயம், பெண்கள் ஸ்கூட்டர் வாங்கினால் சுமார் 25,000 ரூபாய் மானியம்!
பிற கட்சிகள்போலவே மீத்தேன் திட்டம், ஷேல் எரிவாயுத் திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதித்தலுக்கு எதிர்ப்பு. மரபணு மாற்றப் பயிர்களுக்குத் தடை. மீண்டும் ஜல்லிக்கட்டு. முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்தல், காவிரி நீரைக் கொண்டுவருதல் உள்ளிட்ட தமிழர் உணர்வுகளோடு விளையாடும் வாக்குறுதிகள். இவற்றில் பெரும்பாலானவை நீதிமன்றங்களிலும் பிற மாநிலங்கள் அல்லது மத்திய அரசின் கைகளில் உள்ளன என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு
ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை பெரிய இலக்கு. அதைச் செயல்படுத்தும் கட்டமைப்புகள் பற்றிய ஆழமான பார்வை இருப்பதாகத் தெரியவில்லை. அதேபோல உலகச் சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அளவுக்கு தமிழகம் முழுவதும் குடிநீர் வழங்குவதும் மிகப்பெரிய இலக்கு. இதுவும் எளிது அல்ல. எக்கச்சக்கமாகச் செலவு பிடிக்கும். இதற்கான நிதி எப்படி கிடைக்கும் என்ற தெளிவு இல்லை.
நாங்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறோம்; அதனை மேலும் மெருகேற்றப்போகிறோம் என்னும் பெருமித உணர்வு அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. ‘அம்மா’ பெயரால்தான் அனைத்துத் திட்டங்களும். இதுகுறித்த கூச்ச உணர்வு அவர்களிடம் இல்லை.
‘அம்மா’ பிராண்ட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புதான் 2016 தேர்தல் என்கிறது இந்தத் தேர்தல் அறிக்கை!
பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: badri@nhm.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
35 mins ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago