உற்பத்தித் திறனை உயர்த்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், சந்தை உள்கட்டமைப்பை உருவாக்கவும், சரிந்துவரும் மண் வளத்தைச் சீரமைக்கவும் விவசாயத் துறையில் சீர்திருத்தம் தேவை.
இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவில்லை என்றால், சில ஆண்டுகளுக்கு முன் இடஒதுக்கீடு கோரி நிலவுடமை வேளாண் சாதியினர் வீதியில் இறங்கிப் போராடியதைப் போல, கிராமப்புற இந்தியாவில் கொதித்துக்கொண்டிருக்கும் சமூக-பொருளாதார முரண்பாடுகள் கொதிநிலையை எட்டக்கூடும்.
சில பத்தாண்டுகளாகக் கிராமப்புற இந்தியா மாற்றமடைந்துவருகிறது. இந்த மாற்றம், விவசாயத்துக்கு வெளியேயும் விவசாயம் அல்லாத பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கியும் புதிய சவால்களை உருவாக்கியிருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம்கூடத் தொலைநோக்கில் இச்சூழலை மேம்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை.
வேளாண்மைக்கும் வேளாண் சாராத பொருளாதாரத்திற்கும் இடையே உற்பத்தித் திறனில் பெரிய வித்தியாசம் நிலவுவதும், அது தொடர்ந்து அதிகரித்துவருவதும்தான் அடிப்படைப் பிரச்சினை. இந்தியப் பொருளாதாரத்தின் மற்ற துறைகளுடன் ஒப்பிட்டாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டாலும் இந்திய விவசாயத் துறையின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது.
உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தில் கட்டமைப்பு சார்ந்த மாற்றத்தை விரைவுபடுத்தி தொழிலாளர்களை மற்ற துறைகளுக்கு மடைமாற்றாதவரை, விவசாயிகளின் நிலைமை தொடர்ந்து மோசமாகவே இருக்கும். 2018-19-ல் இந்தியாவில் விவசாயக் குடும்பம் ஒன்றின் சராசரி மாத வருமானம் ரூ. 10,218 என தேசியப் புள்ளிவிவர அலுவலகத்தின் (NSO) தரவுகள் கூறுகின்றன.
கிராமப்புற இந்தியாவில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தைவிட இது மிகவும் குறைவு. 54% கிராமப்புறக் குடும்பங்கள் விவசாயக் குடும்பங்கள். இந்தக் குடும்பங்களின் 40 % வருமானம் விவசாய வேலைகளுக்கான ஊதியத்திலிருந்து கிடைக்கிறது. விவசாயத்திற்கான மறைமுகச் செலவுகளைச் சேர்த்தால், விவசாயக் குடும்பங்களின் சராசரி வருமானத்தில் ஊதியத்தின் அளவு 49% வரை அதிகரிக்கும்.
பயிரிடுதல் மூலம் கிடைக்கும் வருமானத்தின் பங்கு 2013-ல் 48% ஆக இருந்ததிலிருந்து 2019-ல் 38% ஆகக் குறைந்துள்ளது. அதாவது, விவசாயக் குடும்பங்கள் பயிர் உற்பத்தியைவிடவும் கூலி வருமானத்தையே அதிகம் சார்ந்துள்ளன.
இது போதாதென்று, கிராமப்புற இந்தியக் குடும்பங்களில் 35% பேர் கடனில் உள்ளனர் என்றும், சுமார் 44% பேர் நிறுவனம் சாராத (முறைசாரா) வழிகள் மூலம், 25% வரை அதிக வட்டி வீதத்தில் கடன்களைப் பெறுகிறார்கள் என்றும் 2019-ல் வெளியான அகில இந்தியக் கடன் - முதலீட்டு ஆய்வின் தரவுகள் காட்டுகின்றன.
இத்தகைய போதாமைகளும் விவசாயத்தில் உள்ள தேக்கநிலையும் கிராம-நகர ஏற்றத்தாழ்வுகளை அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளன. விவசாயத் துறையின் மொத்தக் காரணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலமாகவோ அல்லது உள்ளீடுகளுக்கான உற்பத்தியை அல்லது தொழிலாளர் உற்பத்தித் திறனை, அல்லது இரண்டையும் சேர்த்து அதிகரிப்பதன் மூலமாகவோதான் தொழில் - சேவைத் துறைகளுக்கு இணையாக விவசாயத் துறை சமநிலையை எட்ட முடியும். ஆனால், இந்த இரண்டிலுமே விவசாயத் துறை தோல்வியடைந்துள்ளது.
நகர வாழ்க்கையின் மேம்பட்ட நிலை
விவசாயத்துக்கும் விவசாயம் அல்லாத துறைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளி 1990-களின் பிற்பகுதியிலிருந்து அதிகரித்துவருகிறது. விவசாயத்திலிருந்து ‘உபரி’ தொழிலாளர்களை ஈர்த்துக்கொள்வதில் தொழில்துறைக்கு உள்ள இயலாமையும் இந்த ஏற்றத்தாழ்வை மோசமாக்கியுள்ளது.
விவசாயத்துக்கு வெளியே, 1990-க்குப் பிந்தைய வளர்ச்சியில் சேவைத் துறையே முன்னணியில் இருக்கிறது. இன்று விவசாயத் துறைக்கும் தொழில் துறைக்கும் இடையே உள்ள தொடர்பு பலவீனமாகவே உள்ளது. விவசாயத்தில் லாபமும் உற்பத்தித் திறனும் குறைவது இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
மறுபுறம், வேளாண்மை அல்லாத சேவைத் துறையில் உள்ள வாய்ப்புகள் விவசாயத்தின் மீதான ஈர்ப்பை மேலும் குறைத்துவிட்டன. 1990-களிலிருந்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகுதியும் நகர்ப்புறத்துக்குச் சார்பாகவே இருந்துவருகிறது.
2017-18-க்கான கிராமப்புற -நகர்ப்புற ஏற்றத்தாழ்வு வீதம் 2.42ஆக உயர்ந்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) தரவுகள் கூறுகின்றன. அப்படியானால், ஒரு நகரவாசி கிராமவாசியைவிட 2.5 மடங்கு அதிகமாக நுகர முடியும்.
இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் 20-ம் நூற்றாண்டில் அமெரிக்க விவசாயத் துறை சென்ற பாதையைப் பின்பற்றுவதன் மூலம், இந்திய விவசாயத் துறையைத் தொழில்மயமாக்க (பெருநிறுவனமயமாக்க) முயல்கின்றனர்.
அமெரிக்காவில் பெரிய அளவிலான பண்ணைகள், பெரிய நிறுவனங்களின் உற்பத்திப் பெருக்கம், அதிகரித்த உள்ளீடுகள், சேவைகள் கொண்ட சந்தை ஊடுருவல், விவசாயம் அல்லாத துறைகளுடன் விவசாயச் சந்தைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை கொண்ட சூழ்நிலை விவசாயத் தொழில்மயமாக்கலுக்கு உதவின.
அத்தகைய சூழ்நிலை இந்தியாவில் இல்லை. அது மட்டுமல்ல, இந்திய நிதி நிலைமையை வைத்துப் பார்க்கும்போது, வேளாண் துறைக்கு அமெரிக்கா அளித்ததற்கு இணையான ஆதரவை இந்தியாவால் வழங்கவோ அல்லது அமெரிக்கா செய்ததைப் போல விவசாயத்திலிருந்து தொழிலாளர்களை உற்பத்தித் துறைக்கு மாற்றவோ முடியாது.
தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக அமெரிக்க வேளாண் துறையில் உள்ளதைப் போலப் பெரிய அளவிலான இயந்திரமயமாக்கலைப் பின்பற்றுவதற்கான வளங்கள் அல்லது திறன்கள் இந்தியாவிடம் இல்லை. உண்மையில், விவசாயத் துறையில் தேவைக்கும் அதிகமான தொழிலாளர்கள் இருப்பதால் இந்தியா பாதிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்க அனுபவம் இந்தியாவுக்குச் சரிப்பட்டுவராது.
ஒருங்கிணைந்த தொழில்துறை கொள்கை
அதே நேரம், தெற்குலகின் ‘மாற்றமடைந்துவரும்’ பொருளாதாரங்கள் இந்தியாவுடன் ஒப்பிடத்தகுந்தவை. இந்தியாவோடு ஒப்பிடுகையில் சீனா தன்னுடைய வேளாண் உற்பத்தித் திறனை அதிகரித்திருக்கிறது.
அதே சமயம் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் செலவை அதிகரித்ததுடன், உள்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்ததன் மூலம் இதர துறை வேலைகளுக்கு விவசாயிகள் மாற வகைசெய்திருக்கிறது.
விவசாயத் துறையிலிருந்து பிற துறைகளுக்கான மாற்றம் வெற்றிகரமாக நடந்தால், வேளாண் துறையிலும் இதர துறைகளிலும் அதிக உற்பத்தி, நகர்ப்புற மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்தல், தொழில் துறைகளில் முதலீடு செய்வதற்கு வேளாண் உபரி மூலதனத்தை வழங்குதல் ஆகிய விளைவுகள் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர் சி. பீட்டர் டிம்மர் வாதிடுகிறார்.
அத்தகைய மாற்றத்துக்காக கூடுதலாக சில நிபந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார். விவசாயத்துக்கும் தொழில் துறைக்கும் இடையேயான கட்டமைப்பு சார்ந்த உறவைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஒருங்கிணைந்த தொழில்துறைக் கொள்கை இருக்க வேண்டும் என்கிறார்.
அது நகர்ப்புற உள்கட்டமைப்பு, சமூக அளவிலான ஆதரவு (கல்வி, சுகாதாரத் துறைகளில் முதலீடு செய்யும் வகையில்) ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என்கிறார்.
மாறாக, இந்தியாவிலோ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாய உற்பத்தியின் பங்கு குறைந்தது; விவசாயத் துறையில் அதன் முதலீட்டின் அளவைத் தக்கவைக்க முடியவில்லை. பொதுச் சுகாதாரம், கல்வி சார்ந்த உள்கட்டமைப்பையும் போதிய அளவில் மேம்படுத்த முடியவில்லை. 1990-களிலிருந்து நீர்ப்பாசனம், ஆராய்ச்சி, கல்வி ஆகியவற்றில் பொது முதலீடு குறைந்துவருகிறது.
இந்நிலையில், கிராமப்புற அமைதியின்மையின் மற்றொரு வடிவத்தை நாம் காண்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. விவசாயத்தை அதிகமாகச் சார்ந்திருக்கும் சாதியினரான ஜாட்கள் (ஹரியாணா, பஞ்சாப்), மராத்தாக்கள் (மஹாராஷ்டிரம்), பட்டேல்கள் (குஜராத்) ஆகியோர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
நகர்ப்புறங்களில் நீண்ட காலமாக வசித்துவரும் உயர் சாதியினர், ஆதிக்கம் செலுத்திவரும் முறைசார் நவீனத் துறைகள், உயர் கல்வி, வேலைவாய்ப்புகளிலும் தங்கள் சாதியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றும் கோருகின்றனர்.
இந்தக் குழுக்களைப் போலவே, விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பலருக்கும் நவீன சேவைத் துறையால் வழிநடத்தப்படும் பொருளாதாரத்தில் பங்கேற்கும் திறன்களைப் பெறுவதற்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
விவசாயத்தில் ஒப்பீட்டளவில் வருமானம் குறைவாக இருப்பதுடன் இத்தகைய பிரச்சினைகளும் சேர்ந்துகொள்வது இவர்களுக்கு விரக்தியளிக்கிறது.
விவசாயத்தின் எதிர்காலம் இருண்டிருக்கிறது. நவீனப் பணிகள் சார்ந்த உலகமோ எட்டாக்கனியாகத் தோற்றமளிக்கிறது. தெற்குலகில் நமக்குக் கிடைக்கும் சான்றுகள் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் மனித மூலதனத்தை உருவாக்குவதன் மூலமும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் விவசாயத் துறையில் சிறந்த முறையில் மாற்றம் நடைபெறுகிறது என உணர்த்துகின்றன.
எனவே, தரமான கல்வியும் சுகாதாரமும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்னும் கோரிக்கை, இந்தியாவில் விவசாயச் சீர்திருத்தத்துக்குத் துணைபுரியும் அம்சமாக இருக்க முடியும் என்பது மட்டும் உறுதி.
| பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இந்திய உயராய்வு மையத்தால் வெளியிடப்பட்ட Stunted Structural Transformation in the Indian Economy கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது. |
- ஆ. கலையரசன், பிரவுன் பல்கலைக்கழகத்தின் சமகாலத் தெற்காசிய மையத்தின் ஆய்வாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் துணைப் பேராசிரியர். தொடர்புக்கு: kalaijnu@brown.edu
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago