கருப்பை எப்போது பெண்ணின் உரிமையாகும்?

By பிருந்தா சீனிவாசன்

அமெரிக்க உச்ச நீதிமன்றம், பெண்களின் கருக்கலைப்பு உரிமையை உறுதிசெய்த முந்தைய தீர்ப்பைச் சில வாரங்களுக்கு முன் ரத்துசெய்தது. கருக்கலைப்பை அனுமதிப்பது குறித்து அந்தந்த மாகாணங்கள் முடிவுசெய்துகொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது.

இதனால் குடியரசுக் கட்சி ஆளும் பெரும்பாலான மாகாணங்களில் கருக்கலைப்பு தடை செய்யப்படுவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. கருக்கலைப்புக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டதுமே, தங்கள் உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து அமெரிக்கப் பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

இந்தியாவில் தகுதியான மருத்துவக் காரணங்களுக்காக 24 வாரம் வரையிலான கருவைக் கலைக்கச் சட்டத்தில் வழியுண்டு. அதை வைத்து கருக்கலைப்புச் சட்டத்தில் அமெரிக்காவைவிட நாம் ஒருபடி மேலே இருக்கிறோம் என்கிற பெருமிதக் குரல்களையும் இங்கே கேட்க முடிகிறது. சட்டம் இருப்பதாலேயே பெண்களுக்கான உரிமைகள் எல்லாம் கிடைத்துவிடுகின்றனவா?

உரிமையில்லாத சட்டம்

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடைச் சட்டம், சொத்துரிமை, விவாகரத்து, ஜீவனாம்சம் என்று எத்தனையோ இந்தியச் சட்டங்கள் இருக்கிறபோதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்த தரவுகள் பெரும் அயர்ச்சியையே ஏற்படுத்துகின்றன. கருக்கலைப்புச் சட்டமும் கிட்டத்தட்ட இதே வகையில்தான் இங்கே அணுகப்படுகிறது.

பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் மூழ்கியிருக்கும் இந்தியக் குடும்பங்களில் மருத்துவக் காரணங்கள் தவிர, வேறு எதற்கும் ஒரு பெண் கருக்கலைப்பு குறித்து வாய் திறக்கவே முடியாது. கருப்பை என்னவோ பெண்ணின் உடலில் இருந்தாலும், அதன் மீது அவளுக்கு எந்த உரிமையும் கிடையாது.

எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிடவும் குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுக்கவும் பெரும்பாலான பெண்களால் யோசிக்கக்கூட முடியாது. ‘வேண்டாத கர்ப்பம்’ அல்லது ‘விருப்பமற்ற கர்ப்பம்’ என்பது போன்ற சொற்களே குடும்பக் கலாச்சாரத்துக்கு எதிரானவையாக நம் சமூகத்தில் கருதப்படுகின்றன.

பெண்மையின் பரிபூரணமெல்லாம் தாய்மையில் மட்டுமே அடங்கியிருக்கிறது என்னும் மரபார்ந்த நம்பிக்கை அதற்கு வலுசேர்க்கிறது.

முதல் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே கருத்தரிப்பது, இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு குழந்தை வேண்டாம் என்று நினைத்திருந்த நிலையில் கருத்தரிப்பது, குழந்தைகள் வளர்ந்த பிறகு இனி குழந்தையே பிறக்காது என்கிற அசட்டுத் துணிச்சலில் இருக்கிறபோது கருத்தரிப்பது போன்றவை நம் நாட்டில் சாதாரணமாகவே நடக்கின்றன.

இதுபோன்ற கருத்தரிப்புகள் எந்த வகையில் அடங்கும்? பெண்ணின் பார்வையில் முதல் இரண்டும் ‘வேண்டாத கர்ப்பம்’ என்றால், மூன்றாவது ‘அவமானச் சின்னம்’ ஆக்கப்பட்டுவிடுகிறது. இவை அனைத்திலுமே பெண்தான் குற்றவாளியாக்கப்படுகிறாள்.

கருத்தடை குறித்த தெளிவிலும் விழிப்புணர்விலும் நாம் பெரிதும் பின்தங்கியே இருக்கிறோம். பெண்களுக்கான கருத்தடைச் சாதனங்களைவிட, ஆண்களுக்கான கருத்தடை சாதனங்களைக் கையாள்வதுதான் எளிது.

ஆனால், பெரும்பாலான ஆண்கள் கருத்தடைச் சாதனங்களை ஏற்க மறுப்பதால், அதுவும் பெண்கள் தலையிலேயே விழுகிறது. மேற்சொன்ன காரணங்களைத் தவிர, இன்னொரு காரணத்துக்காகவும் கருக்கலைப்பு செய்யப்படுகிறது.

பெண் குழந்தை வேண்டாம் என்பதற்காகச் செய்யப்படும் கருக்கலைப்புக்கு மட்டும் குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். ஆனால், அதிலோ பெண்ணின் சம்மதம் பேருக்காகக்கூடக் கேட்கப்படுவதில்லை.

இது ஒருபக்கம் என்றால், எதிர்பாராத கர்ப்பத்துக்குக் காரணமாக இருக்கும் ஆண்கள், அதற்குப் பிந்தைய செயல்பாடுகளில் மனைவிக்கு ஆதரவாக இருப்பதில்லை. மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்துகொள்வது அவமானம் என்று கருதும் பெண்கள், தாங்களாகவே முறையற்ற கருக்கலைப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

இதில் எளிய முயற்சிகள் தொடங்கி மூலிகைத்தழை குடிப்பது, எதையாவது அரைத்துச் சாப்பிடுவது என்று உயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான செயல்களில் இறங்கிவிடுகிறார்கள். அப்படியும் கரு கலையவில்லை என்றால், சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்பு மையங்களை அணுகுவார்கள்.

அவை அந்தப் பெண்ணைப் பாதிப்பதோடு வயிற்றில் வளரும் சிசுவையும் பாதிக்கும். குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்து, கைவைத்தியத்தைக் கடைப்பிடித்துக் குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதும் உண்டு. குடும்ப அமைப்புக்குள்ளேயே இப்படி என்றால் தனிப் பெண்கள், கணவனை இழந்தோர், மணமாகாத பெண்கள் போன்றோரின் கருக்கலைப்புச் சிக்கலுக்கு நாம் என்ன தீர்வு வைத்திருக்கிறோம்?

கொல்லும் குற்றவுணர்வு

அமெரிக்காவில் கருக்கலைப்பு மையங்களை எரித்தும் மூடச்சொல்லியும் போராடியவர்கள் வைத்திருந்த பதாகைகளில் ‘அம்மா என்னைக் கொல்லாதே!’ என்று எழுதியிருந்தது. உலகம் முழுவதும் பெரும்பாலோரின் மனநிலை ஒரே மாதிரிதான் இருக்கிறது.

இதில் இந்தியப் பெண்களைப் பற்றித் தனியாகச் சொல்லத் தேவையில்லை. கருக்கலைப்பு செய்வதால், ஒரு குழந்தையைக் கொன்ற பழியும் பெண் மீது விழுந்துவிடுகிறது. அந்தக் குற்றவுணர்வு வாழ்நாள் முழுவதும் அவர்களை வதைக்கும்.

முறையற்ற கருக்கலைப்பு

நம் நாட்டில் ஆண்டுக்கு எட்டு லட்சம் பெண்கள் முறையற்ற கருக்கலைப்பில் ஈடுபடுகிறார்கள் என்கிற புள்ளிவிவரம் இதைத்தான் உணர்த்துகிறது. இவர்களில் பெரும்பாலோர் உயிரிழக்கின்றனர். “ஆபத்தான முறையில் கருக்கலைப்பில் ஈடுபட்டுக் கருப்பை கிழிந்து, சேதமடைந்த நிலையில்கூடப் பெண்கள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள்” என்கிறார் பொன்னேரி அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் அனு ரத்னா.

“எட்டு வாரம் வரையிலான கருவைக் கலைக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழியுண்டு. கருவுற்ற பெண்ணின் ஒப்புதல் மட்டுமே போதுமானது. 8 வாரங்களுக்கு மேல் அரசு மருத்துவமனைகளை நாடலாம்.

12 வாரத்துக்கு மேற்பட்ட கருவைக் கலைக்கிறபோது, பாலினத்தைத் தெரிந்துகொண்டு அப்படிச் செய்யக்கூடும் என்பதால் அதற்கு மகப்பேறு மருத்துவரின் ஒப்புதல் தேவை” என்கிறார் அவர்.

ஐ.நா.வின் மக்கள் நிதியம் 2022-ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் 2007 முதல் 2011 வரை நடைபெற்ற கருக்கலைப்புகளில் 67 சதவீதம் முறையற்றவை அல்லது சட்ட விரோதமானவை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஏன் இதுபோன்ற கருக்கலைப்பு முறைகளில் ஈடுபடுகிறார்கள்? கிராமப்புறங்களில் போதுமான மருத்துவமனைகள்/மருத்துவர்கள் இல்லாதது, அப்படியே இருந்தாலும் அவர்களின் மோசமான அணுகுமுறை, நாலு பேருக்குத் தெரிந்தால் அவமானம் என்கிற கற்பிதம், சமூக அழுத்தம் ஆகியவைதான் இதற்கு முக்கியக் காரணங்கள். அரசு மருத்துவமனைகளிலேயே கருத்தடை மாத்திரைகள், சாதனங்கள் கிடைக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினாலே தேவையற்ற கர்ப்பத்தைக் கூடுமானவரை தடுக்கலாம். ஆனால், இது போன்ற நிலையில் ஆணின் முடிவுதான் இறுதியானதாக இருப்பதால், பெரும்பாலான பெண்கள் அடங்கிப்போகத்தான் வேண்டியிருக்கிறது.

கருக்கலைப்பு என்பது ஆணைப் பொறுத்தவரை ஏதோ ஒரு சிகிச்சை போல, பெண்ணுக்கோ அது பெரும்வாதை. உடலும் மனமும் ஒருசேரப் பாதிக்கப்படுகிற பெருங்கொடுமை. சட்டம் இருக்கிறது என்பதற்காகவே பெண்ணின் உடலைச் சிதைப்பது நியாயம்தானா?

- பிருந்தா சீனிவாசன், தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

To Read this in English: When will womb become woman’s right?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்