மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME), ஊரக நலப் பணிகள் - மருத்துவச் சேவை இயக்குநரகம் (DMS), பொது சுகாதாரம் - நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகம் (DPH) என்ற மூன்று பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, தமிழக சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் இவ்வாறு மூன்று இயக்குநரகங்களும் ஒரே குடையின்கீழ், தனித்துவத்துடன் இயங்கிவருகின்றன.
இன்னும் பல மாநிலங்களில் கிராமங்களில் அரசு மருத்துவர் இருப்பை உறுதிசெய்வதே சவாலாக இருக்கும் நிலையில், தொடர்ந்து கிராமப்புற சுகாதாரச் சேவையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ அரசு மருத்துவர்கள் பங்களிப்பை வழங்கிவருகிறார்கள்.
இன்று தமிழகத்தில்தான் கிட்டத்தட்ட அனைத்து சிறப்பு மருத்துவர்களும், உயர் சிறப்பு மருத்துவர்களும் அரசு மருத்துவமனைகளில் உள்ளனர். இருப்பினும் இன்னமும் பல துறைகளில் சிறப்பு மருத்துவர்களின் சேவையை மக்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.
உதாரணமாக, ரத்த வங்கிகளில் பணி வாய்ப்பும் பதவி உயர்வும், MD Immunology and Blood Transfusion medicine படிப்பை முடித்தவர்களுக்கு மட்டுமே தரப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் அந்தப் படிப்பு படிக்காத, தகுதியற்றவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், தமிழகத்தில் கிட்டத்தட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் அவர்களுக்குத் தொடர்பில்லாத வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உடலியல் மருத்துவம் - மறுவாழ்வுத் துறையில், அதற்கான எம்.டி. படிப்பு படித்தவர்கள் இருந்தும், அந்தத் துறைக்குச் சம்பந்தமே இல்லாத, தகுதியற்றவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால், நோயாளிகளுக்குக் குறிப்பிட்ட சிறப்பு மருத்துவர்களின் சேவை கிடைக்காமல் போகிறது. இன்னொருபுறம், மருத்துவர்கள் தங்கள் துறையில் பணிபுரியும் வாய்ப்பு மறுக்கப்படுவது மட்டுமன்றி, பதவி உயர்வுக்கான பணியனுபவத்தையும் இழக்கிறார்கள்.
பொதுவாக, அரசுப் பணியில் ஒருவர் எதிர்பார்ப்பது உரிய ஊதியமும் குறித்த காலத்தில் பதவி உயர்வும்தான். ஆனால், இந்த இரண்டுமே தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு மறுக்கப்பட்டுவருகின்றன.
உதாரணமாக, உயர் சிறப்பு மருத்துவர்களுக்குத் தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளின்படி DM அல்லது Mch படிப்பு முடித்து இரண்டு வருடங்களில் இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு தரப்பட வேண்டும். ஆனால், இங்கு ஏராளமான உயர் சிறப்பு மருத்துவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொடர்ந்து உதவிப் பேராசியராகவே பணிபுரிந்துவருகிறார்கள்.
பொதுவாகவே, தமிழகத்தில் பதவி உயர்வுக் கலந்தாய்வை முறையாக அந்தந்த வருடத்துக்குள் நடத்தாமல் காலம் தாழ்த்தி நடத்துவதால், கிட்டத்தட்ட அனைத்து மருத்துவர்களுமே பாதிக்கப்படுகின்றனர். பல் மருத்துவர்களுக்குக் கடந்த ஏழு ஆண்டுகளாக MRB மூலம் பணி நியமனம் நடைபெறவில்லை.
ஏழு ஆண்டுகளாகப் பதவி உயர்வுக் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே 17 இணைப் பேராசிரியர்கள், மூன்று பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கும் அரசு, ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே இருக்கும் நிலையில், புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்காததால் பல் மருத்துவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது மட்டுமன்றி மக்களும் உரிய சேவை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.
கர்நாடகத்தில் கரோனா முதல் அலையின்போது அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கும் முன்னரே, அவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது.
இதனால் அங்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றிவந்த மருத்துவர்களில் பெரும்பாலோர், அவற்றைத் துறந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பணியில் சேர்ந்ததைக் கேள்விப்பட்டோம். மத்திய அரசில் பணிபுரியும் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு 13 வருடங்களிலும், சிறப்பு மருத்துவர்களுக்கு 6 வருடங்களிலும், உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு 3 வருடங்களிலும் ஊதியப்பட்டை நான்கு கிடைக்கிறது.
ஆனால், தமிழக அரசு மருத்துவர்களுக்கு 20 வருடங்கள் பணி நிறைவு செய்த பிறகுதான் ஊதியப்பட்டை நான்கு தரப்படுகிறது. இதனால், மற்ற மாநிலங்களில் உள்ள எம்பிபிஎஸ் மருத்துவர்களைவிட மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாய் குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு, உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது.
எவ்வளவோ போராடியும் இன்னமும் தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்படவில்லை. அதுவும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தையோ மற்ற மாநிலங்களுக்கு இணையான ஊதியத்தையோ தமிழக மருத்துவர்கள் கேட்கவில்லை. 2009-ல் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அளித்த அரசாணை 354-ன்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டும் என்றுதான் கேட்கிறோம்.
முந்தைய ஆட்சியில் 2019-ல் போராடிய 118 அரசு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், 2020 பிப்ரவரி 28-ம் தேதியன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில், தண்டனையை ரத்துசெய்ததோடு, அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும் சென்னை - மதுரை உயர் நீதிமன்றங்கள் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசை வலியுறுத்தின. அரசு மருத்துவர்களின் ஊதியம் நீதிமன்றக் குமாஸ்தாவின் ஊதியத்தைவிடக் குறைவாக இருப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஊதியக் கோரிக்கைக்காக, அரசு மருத்துவர் ஒருவர் உயிரையே ஈந்துள்ளார். மேலும், ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றிட மூன்று தடவை சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இப்போது ஊதியப்பட்டை நான்கு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று மேட்டூர் டாக்டர் லட்சுமி நரசிம்மனின் நினைவிடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
சமூக நீதி காக்கும் தமிழக முதல்வர், இந்தச் சமூகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க அர்ப்பணிப்போடு பணிபுரிந்துவரும் அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கையை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.
- எஸ்.பெருமாள் பிள்ளை, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவர்
தொடர்புக்கு: sppillai26@yahoo.in
To Read this in English: Why does govt ignore specialty doctors?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago