உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியச் சராசரியைவிட தமிழ்நாடு இரண்டு மடங்கு உயர்ந்து நிற்கிறது. அதேவேளை, 6 வயது முதல் 17 வயது வரையுள்ள பள்ளி செல்லாப் பழங்குடிக் குழந்தைகளின் விகிதம் 15.9 என்கிறது சமீபத்திய தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு.
இந்தப் புள்ளிவிவரங்கள் இல்லாமலேயே பழங்குடிகள் கல்வி பெறுவதில் உள்ள தடைகள் பலரும் அறிந்ததே. தமிழகப் பழங்குடி மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிலும் 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டு மக்கள்தொகையில் சுமார் ஒரு சதவீதம் பழங்குடி மக்கள் என்ற மிகப் பழைய கணக்கீட்டின் அடிப்படையில், இந்த ஒதுக்கீடு அமலில் உள்ளது. பழங்குடி மக்கள் மாநிலம் முழுவதும் பரவலாக வாழ்ந்துவருகிறவர்கள் அல்லர். மலையும் மலைசார்ந்த இடங்களில் வாழ்ந்துவருகின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு கிடைத்த ஒருசிலர், நகரங்கள் அல்லது சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர். ஏழு மாவட்டங்களில், 0.1%-க்கும் கீழே இம்மக்களின் மக்கள்தொகைப் பரவல் உள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் சில மாவட்டங்களில் 1,000 பழங்குடிகள்கூட இல்லை.
உதாரணமாக, கரூர் (575), சிவகங்கை (790) - 0.2% மக்கள் மூன்று மாவட்டங்களில் வாழ்கின்றனர். 0.3% இரண்டு மாவட்டங்களில், 0.04% மூன்று மாவட்டங்களில், 0.5%, 0.6%, 0.7%, 0.8% தலா ஒரு மாவட்டம், 1.0 முதல் 1.9% வரை 6 மாவட்டங்களில் வசிக்கின்றனர். பழங்குடிகள் செறிவாக வசிக்கும் மாவட்டங்கள் எனில், தருமபுரி (4.2%), நீலகிரி (4.5%), திருவண்ணாமலை (3.7%), சேலம் (3.4%), விழுப்புரம் (2.2%), வேலூர் (1.9%) ஆகியவையே. சற்றேறக்குறைய இடஒதுக்கீடு அளவிற்கே பழங்குடிகளின் பரவல் உள்ள மாவட்டங்கள் ஐந்து. 2% முதல் அதிகபட்சம் 4.5% மக்கள்தொகைப் பரவல் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 7.
ஏன் இந்தப் புள்ளிவிவரப் பரிசீலனை எனில், 575 பேர் வாழும் கரூர் மாவட்டத்தில் படிக்கும் பழங்குடி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு ஒரு சதவீதம். 4%-க்கு மேல் இருக்கும் தருமபுரி, நீலகிரி போன்ற மாவட்டங்களுக்கும் அதே ஒரு சதவீத ஒதுக்கீடுதான்.
பழங்குடிகள் அதிகமாக வாழும் மாவட்டங்களில், மாணவர் சேர்க்கை ஒதுக்கீட்டு அளவிற்கு மேலாகவோ, அல்லது இடம் கிடைக்கவில்லை என்பதற்காக வேறு மாவட்டத்திற்கோ பெருவாரியான பழங்குடிகள் செல்ல மாட்டார்கள். அப்படிச் செல்ல வழியற்றவர்கள், வசதியற்றவர்களும்கூட.
ஒரு மாவட்டத்தில் பழங்குடி மாணவர்கள் சேர இடமில்லை. மற்றொரு மாவட்டத்தில் சேர ஆளில்லை. உயர் கல்வியை நோக்கி வரும் ஒரு சில பழங்குடி மாணவர்களின் பரிதாப நிலை இது. இதற்கு எளிய மாற்று இருக்கிறது. பழங்குடி மக்களின் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு போலன்றி, உயர் கல்விச் சேர்க்கை இடஒதுக்கீட்டை மாவட்டம் அல்லது மண்டல வாரியாக மறுபங்கீடு செய்ய வேண்டும்.
பழங்குடி மாணவர்கள் மிகமிகக் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் வரும் விண்ணப்பங்களைச் சிறப்பு ஒதுக்கீடாகக் கருதி கற்க வாய்ப்பு அளிக்க வேண்டும். 0.1% முதல் 0.4% வரை பழங்குடி மக்கள் உள்ள 15 மாவட்டங்களுக்கான இடங்களை, 2% முதல் அதிகபட்சம் 4.5% உள்ள 7 மாவட்டங்களுக்குப் பகிர்ந்து அளித்தால் பழங்குடிகளின் உயர் கல்வி வாய்ப்பு பாதிக்காது. அரசும் கூடுதலாக இடஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவையில்லை.
பழங்குடி மாணவர்களுக்கு ஒரு சதவீதமே என்பதால், அதனை ஒதுக்கீடு செய்யும் முறையிலும் பழங்குடி மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். ஒரேயொரு சதவீதம் என்பதால், 50 அல்லது அதற்கு மேல் மாணவர் சேர்க்கை உள்ள இடங்களுக்கு மட்டுமே இந்த ஒரு சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எனவே கலை, சமூக அறிவியல், கணிதப் பாடங்களில் மட்டுமே பழங்குடி மாணவர்கள் சேர இயலும். அறிவியல் சார்ந்த பாடங்கள் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பு இதனால் மறுக்கப்படுகிறது.
பட்டப்படிப்பு முடித்து, உயர் கல்விக்குப் பிறகான வேலைவாய்ப்பை நாடும் நிலை வரும்போது, கலை, சமூக அறிவியல் பாடங்களில் போட்டி அதிகமாக இருப்பதாலும் அறிவியல் சார்ந்த வேலைவாய்ப்புகளிலும் பழங்குடி மாணவர்கள் பங்கு பெற முடியாமலே போகிறது.
அவர்களுக்கான வேலைவாய்ப்பு இடஒதுக்கீடுகள் நிரந்தரமாக நிரப்பப்படாமல் இருக்கும் அவலம் நேர்கிறது. இந்த அநீதியைக் களைந்து 50 இடங்களுக்குக் கீழே உள்ள பாடப் பிரிவுகளிலும் பழங்குடி மாணவர்கள் சேர்ந்து பயன்பெறத் தக்க வகையில் மாற்றியமைக்க வேண்டும்.
ஒரு கல்லூரியில், 50 இடங்களுக்குக் குறைவாக உள்ள பாடப்பிரிவு இடங்கள் அனைத்தையும் கணக்கிட்டு, அதற்கு ஒரு சதவீத இடங்களைப் பழங்குடி மாணவர் விண்ணப்பங்களின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம். அதே மாவட்ட/ மண்டல வாரி மறுபங்கீட்டு முறையைப் பின்பற்றலாம்.
இல்லையேல், சொல்லொணாத் துயரோடு பள்ளிக் கல்வி முடித்து வரும் பழங்குடி மாணவர்களின் வாழ்வும் அரசின் ஒதுக்கீடும் பொருளற்றுப் போய்விடும். இப்போது உள்ள இடஒதுக்கீடு உரிய முறையில் அனைவருக்கும் பயன்பட அதனை மாவட்டம்/ மண்டலம் சார்ந்து மறுபங்கீடு செய்ய வேண்டும்.
அறிவியல் சார்ந்த பாடங்களில் அறிவியல்பூர்வமான ஒதுக்கீட்டு அணுகுமுறையின் மூலம் அறிவியல் பாடங்களைக் கற்கப் பழங்குடி மாணவர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும். இவை இரண்டுமே இப்போது அவசியத் தேவை.
பழங்குடி மக்களின் வாழிடம் சார்ந்த பிரச்சினையைப் போலவே, இடஒதுக்கீட்டுச் சிக்கல், உள்ஒதுக்கீட்டுப் பிரிவினரான பட்டியல் இனத்தவரில் அருந்ததியர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லிம் உள்ஒதுக்கீடு ஆகியவற்றிலும் உள்ளது. இதனையும் அரசு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
- நா.மணி, பொருளியல் துறைத் தலைவர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி. தொடர்புக்கு: tnsfnmani@gmail.com.
- வே.சிவசங்கர், இணைப் பேராசிரியர்,
பொருளியல் துறை, பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: sivasankarjh@gmail.com
Scheduled Tribe students’ higher education: Need for redistribution of reserved seats
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago