சொல்... பொருள்... தெளிவு | குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்…

By புவி

நிர்வாகத் தலைவர்: இந்திய அரசமைப்பின்படி, குடியரசுத் தலைவரே நிர்வாகத் துறையின் தலைவர். எனினும், நிர்வாகப் பொறுப்பு அமைச்சரவையால் மேற்கொள்ளப்படுகிறது.

முக்கிய நியமனங்கள்: இந்திய அரசமைப்பின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தேர்தல் ஆணையர்கள், தலைமைக் கணக்காயர் ஆகிய பதவி நியமனங்களை குடியரசுத் தலைவரே மேற்கொள்கிறார்.

ஆணையங்கள்: நிதி ஆணையம், அட்டவணை வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம், பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம், ஆட்சிமொழி ஆணையம் ஆகியவற்றை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு. மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலையும் அவரே நியமிக்கிறார்.

நாடாளுமன்றத்தின் அங்கம்: குடியரசுத் தலைவர், இந்திய நாடாளுமன்றத்தின் ஓர் அங்கம் ஆவார். நாடாளுமன்ற அவைகளைக் கூட்டவும் அவைகளின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரவும், மக்களவையைக் கலைக்கவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம்: மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்ற ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கவும் ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கவும் குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றுள்ளார். எந்தவொரு கட்சியும் அல்லது கூட்டணியும் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாதபோது, தன்விருப்புரிமையின் அடிப்படையில் யாரொருவரையும் ஆட்சிப் பொறுப்பேற்று பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்கும் அதிகாரத்தையும் அவர் பெற்றுள்ளார்.

நியமன உறுப்பினர்கள்: மாநிலங்களவையில் இலக்கியம், கலை, அறிவியல் துறைகளில் சிறந்தவர்களை உறுப்பினர்களாக நியமிக்க (12 பேர்) குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றுள்ளார்.

ஆட்சிக் கலைப்பு: மக்களவையில் பெரும்பான்மையை இழந்த ஓர் அமைச்சரவை பதவியிலிருந்து நீங்காதபட்சத்தில், அவர்களது ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றுள்ளார்.

சட்டமியற்றும் அதிகாரம்: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அவை சட்டத் தகுதியைப் பெறும்.

அவசரச் சட்டம்: நாடாளுமன்றம் கூடாதபோது, அவசரச் சட்டங்கள் இயற்றும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. இரண்டு அவைகளில் ஒன்று கூடாத நிலையிலும், இவ்வாறு அவசரச் சட்டத்தை அவர் நிறைவேற்றலாம். அவசரச் சட்டத்துக்கான தேவையானது தக்கதென குடியரசுத் தலைவர் திருப்தியுற்றால் போதுமானது. இது குறித்து விசாரிக்கும் அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்கு இல்லை.

பண மசோதா (Money Bill): குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பெயரிலேயே நாடாளுமன்றத்தில் பண மசோதாவைக் கொண்டுவர முடியும்.

மன்னிப்பு அதிகாரம்: அரசமைப்பின் கூறு 72, குற்றங்களை மன்னிக்கவும் மரண தண்டனை உட்பட எந்தவொரு தண்டனையைக் குறைக்கவும் நிறுத்திவைக்கவும் தள்ளிவைக்கவும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கிறது. இது விசாரணை நிலையிலோ தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகோ எந்த நிலையிலும் செயல்படுத்தத்தக்க அதிகாரம் ஆகும்.

நெருக்கடி நிலை அதிகாரம்: நாடு முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளிலோ, குறிப்பிட்ட ஒரு மாநிலத்திலோ நெருக்கடி நிலையை அறிவித்து, அடிப்படை உரிமைகளில் சிலவற்றை நிறுத்திவைக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.

நிதி நெருக்கடி: நாட்டின் நிதிநிலை மோசமாகும் பட்சத்தில், நிதிநிலை நெருக்கடியை அறிவிக்கவும் நீதிபதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் ஊதியத்தைக் குறைக்கவும் குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் பிரதிநிதி: நாடுகளுக்கு இடையிலான வெளியுறவு நடவடிக்கைகளில், இந்தியாவின் பிரதிநிதியாகக் குடியரசுத் தலைவரே செயல்படுகிறார். வெளிநாடுகளுக்கான இந்தியத் தூதர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் அவரே பெற்றுள்ளார்.

யூனியன் பிரதேசங்களின் நிர்வாகம்: தம்மால் நேரடியாக நியமிக்கப்பட்ட நிர்வாகத் தலைவர்களைக் கொண்டு யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவரிடமே உள்ளது.

பிற்பட்டோர் நலன்: சமூகத்தில் பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றைப் பட்டியலிடப்பட்ட பகுதிகளாக அறிவிக்கவும் அவற்றை நிர்வகிக்கவும் குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றுள்ளார்.

பதவிக் காலம்: குடியரசுத் தலைவரின் பதவிக் காலத்தை நாடாளுமன்றத்தால் மட்டுமே முடிவுக்குக் கொண்டுவர முடியும். அவர் அரசமைப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையோடு பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்க முடியும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்று ஆளும் அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஏற்பவே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும். அதே வேளையில், அரசமைப்பின்படி குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அவரின் வாயிலாகவே செயல்படுத்தப்பட வேண்டும்.

தொகுப்பு: புவி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்