அச்சுறுத்தும் உர நெருக்கடி: கையாள்வது எப்படி?

By அனந்து

உலகளவில் வேதியுரத் தட்டுப்பாடு தீவிரமடைந்துவருகிறது. இந்தத் தட்டுப்பாடு ரஷ்யா-உக்ரைன் போரால் மட்டும் விளைந்த ஒன்றல்ல, தற்காலிகமானதும் அல்ல. இன்னும் பல காலத்துக்கு நீடிக்கக்கூடிய, நம் அடிப்படைத் தேவையான உணவுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வளர்ந்துவரும் பூதம் இது.

பசுமைப் புரட்சியின்போது செயற்கை உரங்களின் பயன்பாட்டை இந்தியா பெரிய அளவில் ஊக்குவித்தது. வேதியுரம் இடப்படும் பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படும். இதனால் நீர்ப் பற்றாக்குறை மோசமடைந்தது. வேதியுரங்களின் பயன்பாட்டால், இயற்கை உரம்/எரு போன்றவற்றின் பயன்பாடும் சரிந்ததால் மண்ணில் கரிமக் கார்பன் குறைந்து, நுண்ணுயிரிகளும் குறைந்தன.

இந்தப் பின்னணியில் உலகில் உரத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமான யூரியா, 90 சதவீத பாஸ்பேட், 100 சதவீதம் பொட்டாஷ் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது. ஆக, பசுமை புரட்சியினால் நாம் உணவுத் துறையில் தற்சார்பை அடையவில்லை. வெளிநாடுகளில் இருந்து உணவாக இறக்குமதி செய்யாமல், உணவு உற்பத்திக்கான இடுபொருளாக இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.

மானியக் கொள்கை

சமீபத்திய உர நெருக்கடி காரணமாக விவசாயிகளுக்கான உர விலை பெரிய அளவில் மாறாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத்தை (NBS) உயர்த்திக்கொண்டே வந்தது. இதன் விளைவாக, மற்ற உரங்களைவிட யூரியாவின் விலை மலிவானது, யூரியா பயன்பாடு அதிகரித்தது.

இது மண் வளம், தாவர ஆரோக்கியம், மத்திய அரசின் நிதி ஆகியவற்றில் நெருக்கடியை ஏற்படுத்திவருகிறது. இதை உணர்த்தும் விதத்தில் இந்த ஆண்டுக்கான உர மானியத் தொகை ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் எச்சரித்தார். ஆனால், 2022-23 நிதியாண்டில் உரத்துக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ. 1.05 லட்சம் கோடி மட்டுமே.

நீண்ட கால நெருக்கடி

நமது நாட்டின் வேதியுரக் கையிருப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கவலைக்கிடமாக உள்ளது. உர மானியம் குறித்து குறுகிய கால முடிவுகளையே அரசு எடுத்துவருகிறது. அந்த முடிவுகளும்கூடப் போதுமான‌ முன்னறிவிப்பு இன்றி திடீரென அறிவிக்கப்படுகின்றன.

உரம் சார்ந்த ஒரு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம். ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்னதாகக் கடந்த குறுவைப் பருவத்திலேயே நாடு முழுவதும் இதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கரோனா, சீனாவின் ஏற்றுமதி தடுப்புச் சட்டம், பதுக்குதல், இயற்கை எரிவாயு விலையேற்றம், ரஷ்ய-உக்ரைன் போர் போன்ற பல காரணங்களால் உலக அளவில் உர விலை மூன்று மடங்கு அதிகரித்தது. வ

ரும் சம்பா பருவத்தில் உரம் இருப்பின்மையும், விலை உயர்வும் நம்மை பெரிதாக வாட்டும். உரத் தொழில் சார்ந்து அரசின் கொள்கை தெளிவில்லாமல் இருப்பதால் நிச்சயமற்ற தன்மை உள்ளது. உர மானியங்களின் அளவு குறித்த தெளிவு இல்லாததால், உர நிறுவனங்களால் உற்பத்தி, இறக்குமதி, சரக்கின் இருப்பு ஆகியவற்றுக்கான நீண்ட காலத் திட்டங்களை உருவாக்க முடியவில்லை.

ஆக இது குறுகிய கால நெருக்கடி அல்ல - குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேல் உர விலைகள் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

உரப் பிரச்சினை காரணமாக பெரு, பிரேசில், ஸ்பெயின், கிரீஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் விலைவாசி ஏற்றம் மக்களிடையே எதிர்ப்பை உருவாக்கியது. உலகளாவிய உரச் சந்தை போட்டித்தன்மை மிகுந்தது. உரத் தட்டுபாடு நிலவும் நேரத்தில் மத்திய அரசு மானியத்தை உயர்த்துவதால் மட்டுமே இந்தப் பிரச்சினையை சமாளிக்க முடியுமா என்பது தெரியவில்லை.

இயற்கை வேளாண்வழி

எவ்வளவு காலத்திற்கு இப்படிக் குறைந்த விலையில் வேதியுரத்தை வழங்க முடியும் என்பதில் தெளிவில்லை. இயற்கை சார்ந்த, நிலைத்த வேளாண் வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. நஞ்சில்லா உணவு மட்டுமில்லாமல், இறக்குமதி சாரா, இயற்கை சார்ந்த வேளாண் வழிமுறைகளுக்கான நேரமும்கூட.

நாட்டின் கொள்கைகளும், வேளாண் கல்லூரிகளும் இயற்கை வேளாண்மை சார்ந்த முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாய முறைகளுக்கு ஆதரவாக வாதிடத் தொடங்க வேண்டும்.

அந்த வகையில் இலங்கை தற்போது சந்தித்துள்ள நிலைமை, ஒரு நல்ல பாடம். தடாலடியாக வேதியுரங்களை நிறுத்துவதோ இயற்கை வேளாண்மைக்கு மாறுவதோ எளிதல்ல. சீரிய திட்டங்களும் தொலைநோக்கும் தேவை. முறையான முதலீடு, கொள்கை அடிப்படைகளுடன் படிப்படியாக மாற்றத்தைத் திட்டமிட வேண்டும்.

இப்போது என்ன செய்யலாம்?

மத்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவை:

# மானியங்கள் - அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான வேதியுரத்திற்கான கொள்கைகளை அறிவித்து, உர நிறுவனங்கள் திட்டமிட்டு செயல்பட உதவ வேண்டும்.

# இறக்குமதி - வெளியுறவு அமைச்சகம் எதிர்கால சூழ்நிலையைக் கையாள்வதற்கான திட்டத்தை (contingency) உருவாக்கி, வெளிநாடுகளிலிருந்து தேவையான உரத்தைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

# கள்ளச்சந்தையையும், விலையேற்றத்திற்காக பதுக்குதல் போன்றவற்றையும் தடுக்க வேண்டும்.

# உர மானியத்தை நிறுவனத்துக்குத் தராமல், நேரடியாக விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக அறிவிக்க வேண்டும்

# அரிசி, கோதுமை ஆகியவற்றைத் தாண்டி சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளையும் அரசின் கொள்முதலில் சேர்க்க வேண்டும். இதனால் நீர், உரத் தேவை, இறக்குமதி செய்யப்படும் உரம், தானியத்தின் தேவை ஆகியவை குறையும்.

# இயற்கை வேளாண்மைக்கான ஆய்வுகள், ஆலோசனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

# மரபார்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

தமிழக அரசு செய்ய வேண்டியவை:

# நுண்ணுரங்கள் தயாரிக்கும் மைக்ரோ கம்போஸ்டிங் மையங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதனால் நகரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்ற முடியும், விவசாயிகளுக்கு இடுபொருளும் கிடைக்கும்.

# மகளிர் சுயஉதவிக் குழுக்களை விவசாயி களுடன் இணைக்க வேண்டும்; சத்தீஸ்கரில் நடத்தப்படுவது போல், தரத்தில் கவனத்துடன் மண்புழு உரம் தயாரிக்க சுயஉதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

# விவசாயிகளுக்கு நேரடி மானியமாக பணத்தைக் கொடுத்து தங்கள் விருப்பப்படி இடுபொருள்களுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நேரடி பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்த வேண்டும்.

# இயற்கை வேளாண்மை/இடுபொருள் உற்பத்தி/உபயோக‌த் திறனை வளர்க்க மாவட்ட அளவிலான நிபுணர்களை உருவாக்க வேண்டும்

- அனந்து, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு தொடர்புக்கு: organicananthoo@gmail.com

To Read this in English: How to tackle looming fertilizer crisis

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்