சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, உயர் நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் அனுப்பினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், அன்றைய தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழைக் கூடுதல் வழக்காடு மொழியாகக் கொண்டுவர ஆதரவு தெரிவித்தார்கள். மத்திய சட்ட அமைச்சகத்துக்குத் தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்களும் தமிழைக் கூடுதல் வழக்காடு மொழியாகக் கொண்டுவருவதற்கு ஆதரவு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறிவதற்காக அனுப்பிவைத்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் முதுநிலை நீதிபதிகள் குழு, இதனை ஆராய்ந்து அடிப்படைக் கட்டமைப்பு வசதியிருந்தால் இதைப் பற்றிப் பரிசீலிக்கலாம் என்றது.
இதன் தொடர்ச்சியாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எவையெவை என்பது குறித்த விவரங்கள் பெறப்பட்டன.
ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள அனைத்து இந்தியச் சட்டங்களும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதுபோல், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
இதனை நிறைவேற்றுவதற்காக 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2018-ல் அன்றைய மாநில அரசு, மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தை உருவாக்கியது. இந்த ஆணையத்தின் வழியாகக் கடந்த 3 ஆண்டுகளாக ‘இந்திய அரசமைப்பு’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, அதிகாரபூர்வமாக வெளியானது. மற்ற சட்டங்கள் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்ப்பதற்கான பணிகள் நடந்துவருகின்றன.
கணினியில் தமிழ் பயன்படுத்துவதற்கான மென்பொருள், அதைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி போன்றவற்றை நீதிமன்ற ஊழியர்களுக்கும் நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் எளிதில் கிடைப்பதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டும். பயிற்சி முகாம் நடத்திட வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளில் தாங்களாகவே தமிழ் மென்பொருளைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்யும் முறையைப் பலரும் சொந்த முயற்சியால் பெற்றுவருகிறார்கள். ஆனால், இதற்கான எந்தத் திட்டமும் அமலாக்கப்படவில்லை, பயிற்சியும் வழங்கப்படவில்லை.
சட்ட நூல்களும் சட்ட இதழ்களும் தமிழில் வெளிவருவதை உறுதிசெய்ய வேண்டும். நிதியுதவி அளிக்கப்பட வேண்டும். பொது நூலகங்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்களின் நூலகங்கள், நீதிமன்ற நூலகங்கள் அனைத்திலும் தமிழ்ச் சட்ட நூல்களையும் இதழ்களையும் வாங்கி அனைவரும் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
தமிழில் சட்டப் புத்தகங்கள் வெளியிடவும் சந்தைப்படுத்தவும் நூலகங்களுக்குக் கொண்டுசெல்லவும் சென்னை உயர் நீதிமன்றமோ, தமிழகச் சட்டத் துறையோ, தமிழ் வளர்ச்சித் துறையோ, வழக்கறிஞர்கள் பெருமன்றமோ எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை.
சென்னை உயர் நீதிமன்றம் ‘தீர்ப்புத் திரட்டு’ என்னும் தலைப்பிலான நூல்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிட்டுவருகிறது. இந்த இதழ் பொதுவெளியிலோ, பொது நூலகங்களிலோ, நீதிமன்ற நூலகங்களிலோ எளிதில் கிடைப்பதில்லை. எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.
தனியார் இதழான ‘சட்டக்கதிர்’ மாத இதழ் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. 2017-ல் சட்டக்கதிர் பொது நூலகத்தில் 4,000 இதழ்கள் வாங்கப்பட்டிருந்த சூழலில் திடீரென 400 ஆகக் குறைக்கப்பட்டது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 5 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.
அதன் இடைக்கால உத்தரவாக 2,577 பொது, கிளை நூலகங்களுக்கு ‘சட்டக்கதிர்’ இதழை வாங்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதையும் தமிழ்நாடு அரசு, பொது நூலகத் துறை இன்றுவரை நிறைவேற்றவில்லை.
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை மூலமாக வாங்கிக்கொண்டிருந்த சட்ட நூல்களை, வாங்குவதை நிறுத்திவிட்டது மட்டுமல்லாமல், புதிதாக வாங்கப்படுகிற பட்டியலில் சட்டம் குறித்த எந்த ஒரு நூலோ இதழோ சேர்க்கப்படவில்லை. இதற்கான தேர்வுக் குழுவில் சட்ட அறிஞர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,200 கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், அதில் பணியாற்றும் நீதிபதிகள், நூலகங்களுக்குத் தமிழ்ச் சட்ட நூல்களை வாங்கி விநியோகிக்க உயர் நீதிமன்றத்துக்கு இதுநாள் வரையில் மாநில அரசும் மத்திய அரசும் உரிய நிதியுதவி அளிக்கவில்லை. இதனால், கீழமை நீதிமன்றங்களுக்குத் தமிழ்ச் சட்ட நூல்கள், இதழ்கள் வாங்குவது தடையாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி நிதி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி நிதி போன்றவற்றின் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி தமிழ்ச் சட்ட நூல்கள், தமிழ்ச் சட்ட இதழ்கள் வாங்குவதற்கு விதிகள் இன்றுவரை தடையாக உள்ளன.
சட்ட நூல்கள் வாங்குவதற்காகத் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்குத் தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் மானியமாகத் தந்தது. இதில் வாங்குவதற்கான பட்டியலில் தமிழ்ச் சட்ட நூல்களும், தமிழ்ச் சட்ட இதழ்களும் சேர்க்கப்படவில்லை. இதனால் 170 வழக்கறிஞர் சங்கங்களுக்கு அனுப்பப்பட்ட நூல்களில் தமிழ்ச் சட்ட நூல்களோ, தமிழ்ச் சட்ட இதழ்களோ இடம்பெறவில்லை.
2013-ல் தமிழை வழக்காடு மொழியாக ஆக்குவது குறித்து ‘சட்டக்கதிர்’ நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய அந்நாள் மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தீர்ப்புகளின் கடைசிப் பத்தியை மட்டும் தமிழில் வெளியிடலாம் என்ற ஆலோசனையை வழங்கினார்.
அந்தந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலங்களின் மொழிகளை வழக்காடு மொழியாகக் கொண்டுவரும் முயற்சிக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து ஊக்கமளித்துவருகிறார். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்காக சென்னை வந்தபோது, வழக்காடு மொழியாகத் தமிழ் வர வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதிபதி விஜயா கே.தகில்ரமணியும் பெருமுயற்சி எடுத்தார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் மாநில மொழிகள் வழக்காடு மொழிகளாக ஆக்கப்படுவதற்குத் தொடர் ஆதரவு கொடுத்துவருகிறார்.
கடந்த மே மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய இந்தியத் தலைமை நீதிபதி ரமணா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டுவருவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். அதே மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் சென்னை உயர் நீதிமன்ற மொழியாகத் தமிழைக் கொண்டுவர அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் என்றார்.
இவ்வளவு வரலாற்றுப் பின்னணியும் தொடர் நடவடிக்கைகளும் முயற்சியும் இருந்தும்கூட தமிழ் வழக்காடு மொழியாக வரவில்லை என்பதுதான் வேதனை!
- வி.ஆர்.எஸ்.சம்பத், ‘சட்டக்கதிர்’ இதழின் ஆசிரியர் தொடர்புக்கு: sattakadir1992@yahoo.co.in
To Read this in English: When will Tamil reign as official language in High Court?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago