புறநகர் ரயிலில் அடிக்கடி அந்த கருப்பு-வெள்ளை வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்க்கும்போதெல்லாம் மனது பொறாமையால் துடிக்கும். நம்முடைய ஜாதகம், இப்படி வேலைக்குப் போய் இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் வீடு திரும்ப வேண்டியிருக்கிறதே, படிக்கிற காலத்தில் ஒழுங்காகப் படித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதே என்று. அப்படி என்னதான் அந்த விளம்பரத்தில் என்கிறீர்களா? அது சொல்லும் வேலையைப் பற்றி எவனுக்கு அக்கறை? அந்த வாசகம்தான் ஊகு முள்ளாய் நெஞ்சில் குத்துகிறது. ‘வீட்டிலிருந்தே சம்பாதிக்கலா(மா)ம்’, ‘படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்’ என்பதைப் போல. வீட்டிலிருந்தே வேலை என்பது புதுமையல்ல. காலம் காலமாக நம் நாட்டில் ஏராளமானோர் வீட்டிலிருந்துதான் வேலை செய்கிறார்கள்.
‘ஹோம் வொர்க்’
தங்க - வெள்ளி நகை செய்வோர், ஜோதிடம் பார்ப்போர், பில்லி - சூனியம் வைப்போர் அல்லது திருப்பி வைப்போர், தீப்பெட்டி, பீடிக்கு லேபிள் ஒட்டுவோர், புத்தக பைண்டிங் செய்வோர், சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுவோர், பட்டா பட்டி ஜட்டி தைப்போர், போண்டா - மூசுருண்டை போன்றவற்றைச் சுட்டு (துப்பாக்கியால் அல்ல) வீட்டு வாசலில் கயிற்றுக்கட்டிலில் போட்டு விற்போர், இட்லி - தோசை மாவு தயாரிப்போர் என்று பலதரப்பட்டோர் இப்படித்தான் சம்பாதிக்கின்றனர். இப்போது பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு வாங்கித்தருவோர்கூட வீட்டிலிருந்தேதான் சம்பாதிக்கின்றனர். அவ்வளவு ஏன், எம்.எல்.ஏ. பதவிக்குப் போட்டியிட சீட் வாங்கித் தருவோர்கூட வீட்டிலிருந்தேதான் சம்பாதிக்கின்றனர்.
‘அலுவலகத்துக்குப் போய் வேலை பார்ப்பதில் என்ன இடர்?’ என்று நீங்கள் இலக்கணச் சுத்தமாகக் கேட்கலாம். இரவு திரும்பும்போது இருட்டிலிருந்து கொண்டு திடீரென ‘லொள்’என்று குரைத்தும், ஓசையே எழுப்பாமல் பின்னால் வந்து கெண்டைக்காலுக்கு 5 சென்டி மீட்டர் கீழே உள்ள சதை மீது காதல்கொண்டு கவ்வியும் குலை நடுங்க வைக்கும் நாய்தான் அந்த இடர்.. பேரிடர்! ஆனால், இதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் பிரச்சினையாக நினைப்பதே இல்லை. காரணம், வட்டாட்சியர் முதல் சதுராட்சியர் வரையில் அனைவரும் அரசு வாகனத்திலோ சொந்த வாகனத்திலோ நேரத்துக்கு வீடு போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள்.
‘வள்’ளல் பெருந்தொகை
தெரு நாய்கள் கடிப்பதால் இறப்பவர்கள் உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 55,000 பேர். அதில் 20,000 பேர் இந்தியர்கள். சென்னை மாநகரில் மட்டும் தினந்தோறும் நாய்க்கடி படுவோர் 50 முதல் 70 வரை. உயிரிழப்பவர்களில் 60% பேர் 15 வயதுக்கும் குறைவானவர்கள். நாயால் கடிபடுவோரில் 70% ஆண்கள். தமிழ்நாட்டில் உள்ள நாய்களின் எண்ணிக்கை 2015-ல் 15,47,238. (டேய்... யார்றாவன், புள்ளிவிவரத்தையெல்லாம் கொட்றவன்?) ஒரு லட்சம் மக்களுக்கு 4,238 நாய்கள் இருக்கின்றனவாம். இது என்ன விகிதாச்சாரமோ தெரியவில்லை! குறைந்தால் நாய்க்கு சீமந்தம் செய்துவைத்து எண்ணிக்கையைக் கூட்டுவார்கள் போலிருக்கிறது! நாய் மட்டுமல்ல குதிரை, குரங்கு, ஒட்டகம் போன்றவையும் கடிக்கக்கூடியவையே. ஆனால், கடிபடுவோரில் 95% நாயால்தான் கடிக்கப்படுகிறார்கள்.
ஃபாஸ்ட் ஃபுட் கடைகள், கறிக்கடைகள், டாஸ்மாக் பார் ஆகியவற்றின் அருகில் தேர்தல் சமயத்தில் மட்டுமல்லாமல், முடிவு தெரிந்த பிறகும்கூட கூட்டணியாகவோ, ஓரிரண்டாகத் தனித்தோ தெரு நாய்கள் சுற்றுகின்றன. இரவு நேரங்களில் குப்பைத் தொட்டிகளைச் சாய்க்க முடிந்தால், சாய்த்துக் கொட்டியோ, அல்லது தாவி ஏறியோ, அல்லது பக்கவாட்டில் சிந்திக்கிடப்பதையோ தேடித் தின்கின்றன. நம்முடைய கவலை அது எப்படிச் சாப்பிடுகிறது என்பது பற்றியல்ல, சாப்பிடக் கிடைக்காதபோது நம்மை ஏன் குறிவைக்கிறது என்பதைப் பற்றித்தான்.
பைரவ ‘பயங்கரம்’
நாய்த் தொல்லை குறித்து மக்கள் குரல் கொடுக்கும்போதெல்லாம், அவற்றைப் பிடித்து குடும்பக் கட்டுப்பாட்டுச் சிகிச்சை அளிப்பதாகக் கூறுகிறார்கள். மனிதர்களுக்கே இவர்கள் செய்யும் சிகிச்சையால் மீண்டும் கர்ப்பம் ஏற்படுகிறது. நாய்களுக்கு அக்கறையோடு செய்கிறார்களா என்கிற சந்தேகம், பெருகிக்கொண்டே போகும் நாய்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது இன்னும் அதிகமாகிறது. நாய்களைக் கொல்ல வேண்டாம், மேனகா காந்தி சண்டைக்கு வருவார்; எல்லா நாய்களையும் பிடித்து ஏதாவது ஒரு காப்புக் காட்டில் கொண்டுபோய் விட்டால் என்ன? (உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் விட்டால்கூட மேனகா சந்தோஷப்படுவார்).
2 வீலர், 4 வீலர்களை லோனில் வாங்கிவிட்டு, தவணை கட்டாமல் இருந்தால் ஃபைனான்ஸ் நிறுவனத்தார் மறைந்திருந்து மடக்குவதைப் போல, இரவு நேரங்களில் டூ வீலர்களையும் கார்களையும் இந்த நாய்கள் குரைத்துக்கொண்டே கொலை வெறியுடன் விரட்டும்போது, நாயால் கடிபடுவதைவிட, விழுந்து அடிபட்டு கை, கால் எலும்புகளை முறித்துக்கொள்வோர் அநேகம். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் மாநகராட்சி மன்றங்களிலோ, சட்டப் பேரவையிலோ, நாடாளுமன்றத்திலோ ஒரு ‘யாயும்’ விவாதிப்பதே கிடையாது.
அபயம் அபயம் என்று..
சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மையோர், பட்டியல் இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாயால் கடிபடுவோரும் கிட்டத்தட்ட இதே வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்தான். எனவே, மேல்தட்டைச் சேர்ந்த ‘பிராணி நேசர்கள்’தெரு நாய்களுக்குப் பரிந்து பேசுகிறார்கள்.
கடந்த நாயிற்றுக்கிழமை சாரி - ஞாயிற்றுக்கிழமை இரவு, மனைவி கோபிப்பாரே என்ற அச்சத்தில் சூழலை மறந்து சென்றபோது ‘நில்’ என்று மனைவியே 120 டெசிபல் சத்தத்தில் அழைப்பதைக் கேட்டு, ரத்தம் உறைந்து அப்படியே சிலையாக நின்றேன். அருகில் வந்தவர்தான் அது ‘நில்’ அல்ல ‘லொள்’ என்று வேறுபாட்டை விளக்கி, வேகமாக அங்கிருந்து நகர உதவினார். அந்த நேரம் எனக்கு லேசான மாரடைப்பு முதல் கனமான மூக்கடைப்பு வரை பலதரப்பட்ட கோளாறுகளும் ஏற்பட்டு, வீட்டு வாசல் கதவைத் தட்டினேன். ‘யாரது?’ என்று (தெரிந்துகொண்டே) 100 டெசிபலில் மனைவி கேட்டபோது, ‘நாய்(ந்)தான்’ என்றே மதுரைக்காரரைப் போலப் பதில் அளித்து உள்ளே சென்றேன். 134 இடங்களோடு ‘சேஃபாக’ வீடு திரும்பிய ‘அம்மா’வாக நிம்மதியடைந்தது என் உள்ளம். தமிழகம் முழுக்க என்னைப் போலவே பதைபதைப்போடு அன்றாடம் வீடு திரும்பும் நெஞ்சங்கள் எத்தனை ஆயிரமோ? ‘அம்மா’ கவனிங்கம்மா ப்ளீஸ்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago