சூரிய மண்டலத்துக்கு அப்பால், அண்டவெளியில் பூமி மாதிரியான கிரகம் எங்கேனும் உள்ளதா என்று விஞ்ஞானிகள் தேடி வருகிறார்கள்.
இந்தத் தேடல் ஒருபுறம் இருக்க, நமது அண்டை வீடு என்று சொல்லத்தக்க செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலைமைகளை மாற்றி, அதை மனிதர்கள் வாழத்தக்க கிரகமாக ஆக்கினால் என்ன? இது ஒன்றும் புதிய யோசனை அல்ல. இது குறித்து கடந்த காலத்தில் பல்வேறு நிபுணர்களும் பல யோசனைகளைக் கூறியுள்ளனர்.
செவ்வாய் கிரகம் எந்தெந்த வகைகளில் பூமி மாதிரி இல்லை என்று நாம் முதலில் கவனித்தால், எவ்வித மாற்றங்கள் தேவை என்று புரிந்துகொள்ள முடியும்.
ஆக்ஸிஜன் குறைவு
செவ்வாய் கிரகம் அளவில் சிறியது. அது விஷயத்தில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. செவ்வாய் வடிவில் சிறியது என்பதால், அதன் ஈர்ப்புச் சக்தி குறைவு. எனவே, அது தொடர்ந்து காற்று மண்டலத்தை இழந்துவருகிறது. ஆகவேதான் செவ்வாயின் காற்று மண்டலம் அடர்த்தி குறைந்ததாக உள்ளது.
எனினும், செவ்வாயின் காற்று மண்டலத்தைச் சற்று அடர்த்தி கொண்டதாக மாற்ற முடியும். செவ்வாயின் காற்று மண்டலம் பெரிதும் கார்பன் டை ஆக்சைடு வாயுவினால் ஆனது. ஆக்ஸிஜன் வாயு அற்ப அளவுக்கே உள்ளது. ஆனால், உயிர் வாழ்க்கைக்கு ஆக்ஸிஜன் அவசியம். செவ்வாயின் காற்று மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவையும் அதிகரிக்க முடியும்.
எப்படிச் சூடேற்றலாம்?
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இல்லை. ஆனால், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் செவ்வாயின் நிலப் பரப்பில் பெரிய ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடயங்கள் இன்னும் காணப்படுகின்றன. இதிலிருந்து கடந்த காலத்தில் செவ்வாயில் தண்ணீர் திரவ வடிவில் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. எனவே, அக்கால கட்டத்தில் செவ்வாயில் காற்று மண்டலம் அடர்த்தியாக இருந்ததாக ஊகிக்கலாம். காற்று மண்டலம் அடர்த்தியாக இருந்தால்தான் தண்ணீர் திரவ வடிவில் இருக்க முடியும்.
இப்போது செவ்வாயின் வட, மற்றும் தென் துருவப் பகுதிகளில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் இருக்கிறது. செவ்வாயை மாற்றி அமைப்பதானால் முதலில் அங்கு காற்று மண்டல அடர்த்தியை அதிகரிக்க வேண்டும். இது எளிதான வேலை அல்ல. ஆனாலும் நீண்ட கால அளவில் சாத்தியமே. செவ்வாயின் தென் பகுதியில் கார்பன் டை ஆக்சைடு வாயு உறைந்த ஐஸ் கட்டிபோல உள்ளது. இதை வாயுவாக மாற்றினால், செவ்வாயின் காற்று மண்டலத்தின் அடர்த்தி ஓரளவுக்கு அதிகரிக்கும். கார்பன் டை ஆக்சைடு வாயுவுக்கு ஒரு குணம் உண்டு. அது செவ்வாய் பெறும் வெப்பம் ஒரேயடியாக அண்டவெளிக்குப் போய்விடாதபடி தடுக்கும். வேறு சில வாயுக்களுக்கும் இத்தன்மை உண்டு. இந்த வகை வாயுக்களுக்குப் பசுமைக்குடில் வாயுக்கள் என்று பெயர். பூமியிலிருந்து இந்த வகை வாயுக்களைக் குப்பிகளில் அடைத்து பூமியிலிருந்து ராக்கெட் மூலம் செவ்வாய்க்கு அனுப்பலாம். இது நடைமுறையில் சாத்தியமா என்று ஆராய வேண்டியுள்ளது.
செவ்வாயின் காற்று மண்டலத்தின் மேற்புறத்தில் இவ்வகை வாயுக்களின் சேர்மானம் அதிகரித்தால், செவ்வாயின் நிலப்பரப்பில் இப்போது நிலவும் கடும் குளிர் இராது. செவ்வாயின் வெப்பம் உயரும்போது, துருவப் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் உறைந்த நிலையில் உள்ள ஐஸ் கட்டிகள் உருகி நீராக ஓட ஆரம்பிக்கும்.
செவ்வாயில் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் பாசிகள் வளரும்படி செய்யலாம். இவை ஆக்ஸிஜனை வெளிவிடும். இதன் மூலம் செவ்வாயின் காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவையும் அதிகரிக்கலாம். இது நடைமுறையில் சாத்தியமே என்று கண்டறியப்பட்டுள்ளது.
சூரியனிடமிருந்து பெறும் வெப்பத்தை செவ்வாய் கிரகம் நன்கு இருத்திக் கொள்ளும்படி செய்தாலும், செவ்வாயில் வெப்பத்தை அதிகரிக்கலாம். செவ்வாய் கிரகத்தின் மேற்புறத்தில் கருப்பான பொருளைப் பரப்பினால் இது சாத்தியம். கருப்பு நிறமானது வெப்பத்தை நன்கு ஈர்த்துக்கொள்ளக்கூடியதாகும்.
தண்ணீர் உருவாக்கலாம்
பூமியின் காற்று மண்டலத்தில் நைட்ரஜன் வாயு நிறையவே உள்ளது. நமது காற்று மண்டலத்தில் நைட்ரஜன் 78% உள்ளது. செவ்வாயில் இந்த வாயு மிக அற்ப அளவில்தான் உள்ளது. பூமியிலிருந்து இந்த வாயுக்களை செவ்வாய்க்கு சிலிண்டர்கள் மூலம் அனுப்பலாம். விண்வெளியில் உலவும் அஸ்டிராய்டுகள் எனப்படும் ‘பறக்கும் பாறைகளில்’ இந்த வாயு அமோனியா வடிவில் உள்ளது. சிறிய சைஸ் அஸ்டிராய்டுகளைக் கட்டி இழுத்துக் கொண்டு போய், செவ்வாயில் மோதும்படி செய்தால் அந்த வகையிலும் செவ்வாயின் காற்று மண்டல அடர்த்தியை அதிகரிக்க முடியும்.
அஸ்டிராய்டுகளை இப்படிக் கயிறு கட்டி இழுத்துச் செல்ல இயலுமா என்று கேட்கலாம். இதுவரை இம்மாதிரியான முயற்சி மேற்கொள்ளப்பட்டது கிடையாது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியமே.
நாஸா இப்போது ஓரையன் என்னும் விண்கலத்தை உருவாக்கி வருகிறது. 2020-களில் ஓரையன் விண்கலத்தில் ஏறிச் செல்லும் அமெரிக்க விஞ்ஞானிகள், தகுந்த அளவு கொண்ட அஸ்டிராய்டு ஒன்றைக் கைப்பற்றி, அதைக் கயிறு கட்டி இழுத்து வந்து சந்திரனைச் சுற்றும்படி செய்வதற்குத் திட்டம் உள்ளது. இது சாத்தியமாவதாக வைத்துக்கொண்டால், எதிர்காலத்தில் இதே போல அஸ்டிராய்டுகளை இழுத்து வந்து செவ்வாயில் மோதும்படி செய்யலாம்.
செவ்வாயின் காற்று மண்டலத்தை அடர்த்தி கொண்டதாக மாற்ற முடியுமானால், பின்னர் இயற்கையும் கைகொடுக்கும். காற்று மண்டலம் அடர்த்தி அதிகரித்தால் செவ்வாயில் நீர் ஓடும்படி செய்ய முடியும். அப்போது செவ்வாயில் உள்ள உறைந்த பனிக்கட்டிகள் நீராக மாற வழி பிறக்கும். இவ்விதம் தோன்றும் மொத்த தண்ணீரானது செவ்வாயின் மேற் பரப்பில் 11 மீட்டர் ஆழத்துக்குப் பரவி நிற்கும் அள வுக்கு இருக்கும் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
யார் பொறுப்பு?
செவ்வாய் கிரக நிலைமைகளைப் பெரிய அளவில் மாற்றுவதற்கு அமெரிக்காவுக்கு அல்லது ரஷ்யாவுக்கு யார் அதிகாரம் அளித்தார்கள்? இவ்விதம் மாற்றுவது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. உள்ளபடி சந்திரன் மீதும் மற்றும் செவ்வாய், வெள்ளி முதலான கிரகங்கள் மீதும் இஷ்டப்படி யாரும் கைவைக்கக்கூடாது என்று உலக அளவில் 1979-ல் சர்வதேச அளவில் தடை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அது 1984-ல் அமலுக்கு வந்தது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சில ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகியவை அந்த உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. இந்தியா கையெழுத்திட்டுள்ளது. ஆனால், அதை அங்கீகரிக்கவில்லை. இந்த நாடுகள் அனைத்துமே பிற கிரகங்களுக்கு விண்கலங்களைச் செலுத்தும் திறன் படைத்தவை.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள் செவ்வாயில் ஏதோ செய்யப் போக, அதன் ஒரு விளைவாக இதுவரை அறியப்படாத கிருமிகள் விண்கலங்கள் மூலம் செவ்வாயிலிருந்து பூமிக்குப் பரவினால் என்ன ஆவது.? நியாயமான கேள்வி. இத்தகைய கேள்விகளுக்கான பதில்களையும் விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
- என்.ராமதுரை, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago