கவனிக்கத் தவறிய கார்டியன்

“ஆஸ்திரியாவின் இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்ட் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தை வைத்து, ஐரோப்பாவின் அரசியலில் உடனடியான முக்கிய விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் கருதிவிட முடியாது” என்று 100 ஆண்டுகளுக்கு முன்னர் மான்செஸ்டர் கார்டியன் இதழின் செய்தியாளர் எழுதினார். சரியாக 37 நாட்களில் ஜெர்மனி மீது போர் தொடுப்பதாக பிரிட்டன் அறிவித்தது. நான்கு ஆண்டுகளில் 1.6 கோடிக்கும் அதிகமானோரின் உயிரைப் பலிவாங்கிய முதலாம் உலகப் போரில் மூழ்கியது ஐரோப்பா.

கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு நடந்த அந்த பயங்கரமான நிகழ்வுகுறித்து, புகழ்பெற்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளரான சி.பி. ஸ்காட் ஆசிரியராக இருந்த 'தி கார்டியன்' இதழால் ஊகிக்க முடியவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், பெர்டினாண்ட் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள், 29 ஜூன், 1914-ல் எழுதப்பட்ட அந்த இதழின் தலையங்கம், பிரான்சிஸ் பெர்டினாண்டின் ஆளுமை மற்றும் அவரது படுகொலையால் ஆஸ்திரியா - ஹங்கேரிய அரசியலில் ஏற்படப்போகும் தாக்கம் ஆகியவற்றில் மட்டுமே அக்கறை காட்டியது.

“இந்தச் சம்பவத்துக்கான உள்நோக்கத்தைப் பற்றி நமக்குத் தெரியாது. இந்தச் சம்பவம் ஆஸ்திரியா-ஹங்கேரி பேரரசின் அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம்பற்றி ஊகிப்பது, தற்போதைய சூழலில் மோசமான செயலாகிவிடும்” என்று தொடர்கிறது அந்தத் தலையங்கம்.

சம்பவம் நடந்த பின்னர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் சரயேவோவிலிருந்தும் வியன்னாவிலிருந்தும் முக்கியமான செய்திகளைச் சேகரித்து அனுப்பினர். அந்தப் படுகொலையின் பின்னணி மற்றும் பெர்டினாண்டையும் அவரது மனைவியையும் பிரின்ஸிப் சுடுவதற்குச் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு படுகொலை முயற்சி உள்ளிட்ட தகவல்களை அவர்கள் அனுப்பினர். “ஆத்திரமடைந்த மக்கள், கொலையாளியை நையப்புடைத்தனர். பலர் கதறி அழுதனர்” என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.

இந்த விஷயத்தை மேம்போக்காக அணுகிய கார்டியன், ஐரோப்பிய அரசியலில் அந்த சம்பவத்தின் தாக்கம்குறித்துக் குறைவாக மதிப்பிட்டாலும், செர்பியாவுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையிலான பகை அதிகரித்ததைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. மேலும், தனது நட்பு நாடான செர்பியாவின் சார்பில் ஆஸ்திரியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்தது.

இன்னொரு விஷயம், போர் அறிவிக்கப்படும் வரை போரில் பிரிட்டன் தலையிடுவதை கார்டியன் எதிர்த்துவந்தது. ஆகஸ்ட் 1-ல் எழுதிய கட்டுரையில், கார்டியன் ஆசிரியர் சி.பி. ஸ்காட் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்த விஷயத்தில் பிரிட்டன் தலையிடுவது, நம் நாட்டின் ஏழை மக்களைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களைப் பராமரிக்கவும், அமைதியான வளர்ச்சியை அளிக்கவும் நாம் அளித்த வாக்குறுதிகளை மீறுவதாக அமையும்.”

எனினும், நான்கு நாட்களுக்குப் பின்னர், ஜெர்மனி மீது பிரிட்டன் போர் அறிவித்த பிறகு கார்டியன் எழுதியது. “எல்லா சர்ச்சைகளும் இத்துடன் முடிவுற்றுவிட்டன. நமது முன்னணி ஒற்றுமையுடன் உள்ளது.”

அதேசமயம், “கொஞ்சம் கூடுதல் அறிவு, கூடுதல் பொறுமை மற்றும் உறுதியான அரசியல் கொள்கை ஆகியவை நம்மைப் பேராபத்திலிருந்து காப்பாற்றியிருக்கும். மேலும், நாம் பெருமைப்பட்டுக்கொண்ட அத்தனை விஷயங்களையும் இந்தப் போரில் இழக்க நேரிடலாம். இந்தப் போரில் நமக்குக் கிடைக்கப்போவது எதுவுமில்லை’’ என்றும் கார்டியன் சரியாகவே சுட்டிக்காட்டியது.

நூறாண்டுகள் கடந்தும் தீராத கசப்பு!

ஆஸ்திரியாவின் இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்ட் கொல்லப்பட்ட சம்பவத்தின் நினைவு நாளை யொட்டி, போஸ்னியா தலைநகர் சரயேவோவில் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடந்தது. வியன்னா பில்ஹார்மோனிக் இசைக் குழுவினர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரிய அதிபர் ஹெய்ன்ஸ் பிஷர், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். எனினும், செர்பியப் பிரதமர் அலெக்சாண்டர் வூகிக், போஸ்னியன் செர்ப் அதிபர் மிலோராட் தோடிக் போன்ற தலைவர்கள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளனர்.

​நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடம் முதல் உலகப் போர் நினைவாகக் கட்டப்பட்டது. 1992 முதல் 1995 வரை நடந்த போஸ்னிய உள்நாட்டுப் போரின்போது போஸ்னியன் செர்ப் படைகளால் சேதப்படுத்தப்பட்ட இந்தக் கட்டிடம், சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டது. போஸ்னியாவில் வசிக்கும் முஸ்லிம்கள், செர்பியர்கள் ஆகியோருக்கிடையில் பிரிவினையை இந்தப் போர் விதைத்தது. நேட்டோ படையினரின் தலையீட்டுக்குப் பின்னரே, இந்தப் போர் முடிவுக்கு வந்தது.

அதேசமயம், ஆஸ்திரிய இளவரசர் ஆர்ச்டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்ட்டையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொன்ற செர்பிய தேசியவாதி கவ்ரிலோ பிரின்சிப்பின் இரண்டு மீட்டர் உயரமுள்ள வெண்கலச் சிலை சரயேவோ நகரின் கிழக்குப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான போஸ்னிய செர்பியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். “நாடு இன்றும் பிளவுபட்டுத்தான் உள்ளது” என்று போஸ்னியன் செர்ப் அதிபர் மிலோராட் தோடிக் கூறியுள்ளார். மேலும், பிரின்சிப் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் என்றும் ஆஸ்திரிய - ஹங்கேரியப் பேரரசு ஒரு ஆக்கிரமிப்பு சக்தி என்றும் அவர் தொடர்ந்து கூறிவருகிறார்.

சரயேவோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், செர்பியப் பிரதமர் அலெக்சாண்டர் வூகிக், போஸ்னியன் செர்பியத் தலைவர்கள் கலந்துகொள்ளாததற்கு, முதல் உலகப் போரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளை நடத்தும் ஜோசப் ஜிமெட் வருத்தம் தெரிவித்தார். “அவர்கள் எங்களுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது. ஐரோப்பாவின் போர் சின்னமாக சரயேவோ உள்ளது. இங்கு அமைதி மற்றும் நல்லிணக்கம்பற்றிப் பேசவே நாங்கள் வந்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் கடந்த காலத்தைப் பற்றிய தங்கள் மனோபாவத்தை மட்டுமல்ல, இப்பகுதியின் எதிர்காலம்பற்றிய தங்கள் எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்” என்று சரயேவோ மேயர் இவோ கோஸ்மிக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE