குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்
அதிபர் ஒபாமா கலந்துகொண்ட வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் இரவு விருந்து நிகழ்ச்சியின் காணொளியை ஏனைய அனைவரையும் போலவே நானும் பார்த்தேன். அதில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்னாள் அவைத் தலைவர் ஜான் பேனரைப் பேச அழைத்த ஒபாமா, அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் தான் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டார். நிஜமான பேனரும், நிஜமான ஒபாமாவும் ‘ஒயிட் ஹவுஸ்’ திரையரங்கில் நெருங்கிய தோழர்களைப் போல் நடித்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கடைசியாக, தனக்கு ஒரு ‘கிராண்ட் பார்கெய்ன்’ கிடைத்ததாக பேனர் சொன்னார். வேறொன்றுமில்லை. செவி தாஹோ கார் தொடர்பான பேரம்தான் அது. பொருளாதாரம் தொடர்பாக ஒரு காலத்தில் இருவரும் நடத்திய விவாதம் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது!
‘மீட் தி பிரெஸ்’ நிகழ்ச்சித் தொகுப்பாளர் சக் டோடுடன் அமர்ந்து அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சியைப் பற்றி நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே அவர் சொன்னார்: “நாடே எதிர்பார்த்திருந்த தருணத்தில் இந்தச் சகோதரப் பாசம் எங்கே போயிற்று?”
அமெரிக்காவின் இழப்பு
அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட காட்சி, அமெரிக்க மக்களின் மன உணர்வுகளைத் தூண்டியிருக்கும். இரு கட்சிகளுக்கும் இடையே இடைவிடாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் சண்டையின் காரணமாக, விவாகரத்தால் நிரந்தரமாகப் பிரிந்துவிட்ட பெற்றோரின் குழந்தைகளைப் போல் உணர்கிறார்கள் அமெரிக்கர்கள். கடினமான பணிகளை இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து செய்வதைப் பார்க்க மக்கள் தவம் கிடக்கிறார்கள். நடிப்பு என்றே வைத்துக்கொண்டாலும், ஒபாமாவும் பேனரும் உரையாடிக்கொண்ட காட்சியைப் பார்த்தபோது அமெரிக்கா இழந்தது என்ன என்பதை உணர முடிந்தது.
டொனால்டு டிரம்ப் இதுவரை அடைந்துவரும் வெற்றிகளுக்குத் தூண்டுதலாக இருப்பது, அமெரிக்காவின் அரசியல் முடங்கிப்போய்க் கிடப்பதாகப் பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதுவதுதான் என்றே நினைக்கிறேன். அரசியல் முடங்கிக் கிடப்பதாகப் பரவலாக உருவாகியிருக்கும் கருத்துடன், மணலைத் திரித்துக் கயிறாக்கக்கூட டிரம்பால் முடியும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது. இந்த முடக்கத்துக்கு வேறு யாரும் காரணமல்ல, குடியரசுக் கட்சியைத் தவிர. குடியரசுக் கட்சி, சந்தை அடிப்படையிலான மாற்றுத் திட்டங்கள் பற்றிச் சிந்திப்பதையே நிறுத்திவிட்டது. அந்த வெற்றிடத்துக்குள்ளே செல்லரிக்கும் பூச்சியைப் போல் பிரவேசித்துவிட்டார் டிரம்ப்.
சமீபத்தில் ஒரு புதிய புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறேன். அமெரிக்காவில் 2007-ல் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் அப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். அந்த ஆண்டில்தான், ஆப்பிள் நிறுவனம் ஐபோனைக் கொண்டுவந்து, ஸ்மார்ட்போன்/ஆப்ஸ் புரட்சியைத் தொடங்கிவைத்தது. 2006-ன் கடைசியில் ஃபேஸ்புக் இணைய உலகில் எல்லோருக்குமான கதவைத் திறந்துவிட்டது. ஒரு ராக்கெட்டின் வேகத்துக்கு வளர்ந்தது. 2007-ல் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை கூகுள் கொண்டுவந்தது. அதே ஆண்டில், பிக் டேட்டா புரட்சிக்கு உதவும் விதமாக ‘ஹடூப்’ கட்டமைப்பு மென்பொருள் அறிமுகமானது. 2007-ல் ட்விட்டர் தனி நிறுவனமானது. மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் கிண்டில் எனும் கருவியை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
சுருக்கமாகச் சொன்னால், ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் பல முக்கிய விஷயங்கள் நிகழ்ந்தன. அனைத்து விஷயங்களும் டிஜிட்டல் மயமாகின. பணி, தொழில் வர்த்தகம், நிதி, கல்வி என்று பொருளாதாரம் முழுவதும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. பல விஷயங்கள் ஒரே சமயத்தில் படுவேகமாக இயங்கத் தொடங்கின. வெற்றிக்கான நமது (அமெரிக்கா) சமன்பாடுகளையும், புதிய யுகத்துக்கான மாற்றங்களையும் அதிகரிக்க வேண்டிய தேவை இருந்த காலகட்டத்தில் சொல்லிவைத்ததுபோல் இவையெல்லாம் நிகழ்ந்தேறின. ஒவ்வொரு தொழிலாளிக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, சாலை, விமான நிலையம், ரயில்வே, அலைவரிசை தொழில்நுட்பம், உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் திறமைசாலிகளை வரவேற்கும் வகையில் குடியேற்றக் கொள்கையில் மேம்பாடு, அறிவியலின் எல்லைகளை விரிக்கும் வகையில் அரசு நிதியில் மேலும் அதிக ஆராய்ச்சிகள், அடுத்த தலைமுறைக்கான
‘ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களுக்கான முன்னெடுப்பு என்று பல விஷயங்கள் அக்காலகட்டத்தில் நிகழ்ந்தன.
தவறான யோசனைகள்
அதற்கு மாறாக, 2008-ல், பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. இதன் மூலம் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிரித்தது, பொருளாதாரத்தில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. இந்த நிலையை மாற்ற மாற்றுச் சிந்தனை, மாற்று வியூகங்கள் தேவை என்று அவை உணர்த்தின. இந்தக் களேபரத்தில் மக்கள் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிலர் சில யோசனைகளை முன்வைத்தனர். வெளிநாட்டினரின் குடியேற்றத்தைத் தடுப்பது, சீனாவுடனான வர்த்தகத்தை முறித்துக்கொள்வது, பெரிய வங்கிகளை ஒழித்துக்கட்டுவது போன்ற அந்த யோசனைகளால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள். முட்டாள்தனம்!
ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவத்தின் மூலம்தான் அமெரிக்கா ஒரு வலுவான தேசமாக உருவெடுத்தது. வர்த்தகத்தின் மூலம்தான் அமெரிக்கா செழிப்படைந்தது. குடியேற்றங்களின் காரணமாகத்தான் அமெரிக்கா சக்தி மிக்கதும் திறன் மிக்கதுமான நாடானது. சமூகப் பாதுகாப்பு, ஒபாமா கேர் போன்ற காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவற்றால்தான் பல நன்மைகள் விளைந்தன. இவற்றின் மூலம் பலனடைந்தவர்களே அதிகம். நாம் அடைந்திருக்கும் நம்பிக்கைகளை இழக்கும் தருணம் அல்ல இது. நீங்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவராக இருந்து இவை அனைத்தையும் ஏற்காதவராக இருந்தால், நீங்கள் தவறான நபர். நீங்கள் தோற்றுத்தான் போவீர்கள் என்றே நான் நம்புகிறேன்.
மாற்றத்தின் தேவை
அதேசமயம், மேற்சொன்ன விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்பவராக நீங்கள் இருந்தாலும், நீங்கள் சரியான ஆளல்ல என்பேன் நான். ஒவ்வொரு விஷயமும் மாற்றியமைக்கப்பட வேண்டியது. சீனாவுடனான தடையற்ற வர்த்தகம் நாம் நினைத்ததைவிட அதிகமான மக்களைப் பாதித்திருக்கிறது. இதில் சந்தேகமில்லை. குறைந்த திறன் கொண்ட சட்டவிரோதக் குடியேறிகளால் நமது மதிப்பீடுகளையும் தாண்டி அமெரிக்கத் தொழிலாளர்களைப் பாதித்திருக்கிறது. இதிலும் சந்தேகமில்லை. (அதேசமயம், அதிகத் திறமைவாய்ந்த குடியேறிகள், நமது பொருளாதாரத்தைப் பெரிய அளவில் மேம்படுத்துவார்கள்.) சமூகப் பாதுகாப்பு, ஒபாமா கேர் போன்றவை நீடித்திருக்க வேண்டுமானால் அவற்றின் குறைகள் களையப்பட வேண்டும். இதிலும் சந்தேகமில்லை.
இந்தச் சவால்கள் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டுமென்றால், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அது நடக்க வேண்டுமென்றால், குடியரசுக் கட்சியின் இப்போதைய வடிவம் அழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நல்ல சிந்தனை கொண்ட மத்திய - வலதுசாரிக் கட்சியாக அது உருவெடுக்கும். ஒருவேளை, டிரம்ப் செய்திருப்பது இதைத்தான் என்றால், அவர் செய்திருப்பது ஒரு ‘கடவுளின் பணி’தான். அதேபோல், ஜனநாயகக் கட்சியும் ஒரு மத்திய - இடதுசாரிக் கட்சியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அக்கட்சியைத் தீவிர இடதுசாரிக் கட்சி எனும் அளவுக்கு பெர்னி சாண்டர்ஸ் கொண்டுசெல்ல அனுமதிக்கக் கூடாது. இந்த இரண்டும் நடந்துவிட்டால், படு விநோதமான இந்தத் தேர்தலின் மூலம் ஏதேனும் நன்மை விளையக்கூடும்!
‘தி நியூயார்க் டைம்ஸ்’
தமிழில்: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago