மாலிகி வெளியேறியாக வேண்டும்!

By செய்திப்பிரிவு

பெரும் தோல்வியொன்றுக்குப் பிறகு, வேறெந்த நாட்டுத் தலைவராக இருந் தாலும் பதவிவிலகிவிடுவார்; ஜப்பானில் முற்காலத்தில் சாமுராய்கள் தங்கள் கடமையில் வழுவினால், தற்கொலைச் சடங்கின் மூலம் உயிர்விடுவார்கள்.

இராக்கிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுவேன் என்று தன் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியவர் இப்போது தனது தவறுகளின் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக மறுபடியும் அமெரிக்க ராணுவத்தின் உதவியைக் கோரியிருக்கிறார். எங்கேயிருந்து எங்கே விழுந்திருக்கிறார் பாருங்கள்!

இராக்கின் அண்டை நாடான சிரியாவின் அதிபர் பஷார் அசாதைப் போலவே மாலிகியும் வார்த்தை ஜாலத்தில் தேர்ந்தவராக இருக்கிறார். இந்த உள்நாட்டுப் போருக்கு உள்நாட்டு விஷயங்கள் எதுவும் காரணமில்லை. இவை எல்லாவற்றுக்கும் காரணம், பயங்கரவாதமும் தேசத் துரோகமும் வெளிநாட்டுச் சதியும்தான் என்றெல்லாம் அளந்திருக்கிறார்.

மாலிகியின் அரசு நாட்டைப் படுபாதாளத்துக்குக் கொண்டுசெல்கிறது என்பதை வெள்ளை மாளிகை அறிந்தே இருக்கிறது. அமெரிக்காவுடன் நட்பு கொண்டிருக்கும் அரபு நாடுகள் இதுகுறித்து முன்பே எச்சரித்திருக்கின்றன. எல்லாம் திடீரென்று வெடிக்கும்வரை அமெரிக்கா காத்திருந்ததுபோல்தான் தெரிகிறது. எதுவாக இருந்தாலும், இராக் விவகாரத்தில் ஈரானின் பங்கு மிகவும் முக்கியமானது. சன்னி-ஷியா மக்களின் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஈரான் பேசிக்கொண்டிருப்பதைச் செயலிலும் காட்ட வேண்டிய தருணம் இது. மாலிகி வெளியேற்றப்படவில்லை என்றாலும், இராக்கின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றாலும் இராக் எப்போது வேண்டு மானாலும் வெடிக்கக்கூடிய வெடிகுண்டுபோல் ஆகிவிடும்; இதுவரை உலகம் பார்த்ததெல்லாம் ஒன்றுமில்லை, இனிமேல் வரப்போவதுதான் பேராபத்து என்பதுதான் அதற்கு அர்த்தம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE