எப்படி ஊடுருவுகின்றன அதிமுக, திமுக?

By த.நீதிராஜன்

தமிழகத்தில் மாற்று முழக்கத்தோடு வந்த எல்லாக் கட்சிகளும் கீழே விழ, மீண்டும் அதிமுக, திமுக என்று இரு துருவ அரசியல்மயமானதை எல்லோரும் பேசுகின்றனர். பல காரணங்கள் இதன் பின்னணியில் பேசப்படுகின்றன. உண்மை. அவற்றில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய பொதுத்தளத்தில் அதிகம் விவாதிக்கப்படாத - விஷயம் ஒன்று உண்டு. பெருநகரங்களில் தொடங்கிக் குக்கிராமங்கள் வரை இரு கட்சிகளும் வளர்த்தெடுத்திருக்கும் வலைப்பின்னல் கட்டமைப்பு.

தமிழகத்தின் 32 மாவட்டங்களை அதிமுக 50 மாவட்டங்களாகவும் திமுக 65 மாவட்டங்களாகவும் நிர்வாகரீதியாகப் பிரித்துக் கையாள்கின்றன. அதற்கு அடுத்த நிலையில், வட்டாரம், நகரம், ஒன்றியம், கிளை என்று பல கூறுகளாக இந்தக் கட்சிகளின் கட்டமைப்பு பல்வேறு பிரிவாகச் சென்று மக்களை அடைகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு குழுவைப் போட்டு செயல்படும் கட்சி அதிமுக. அடுத்ததாகத் திமுக. இந்த இரண்டு கட்சிகளைத் தவிர்த்து மற்ற எந்தக் கட்சிக்கும் இத்தகைய கட்டமைப்பு பலம் தமிழகத்தில் இல்லை.



30 பேருக்கு ஒருவர்

ஒவ்வொரு 30 வாக்குகளுக்கும் ஒரு பொறுப்பாளர் போட்டு அவர் அந்த வாக்குகளைக் கொண்டுவந்து கட்சிக்குச் சாதகமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் இன்றைய காலகட்டத்தில் தேர்தல் பணிகள் மிகவும் துல்லியமானதானதாக அதிமுகவில் மாறியுள்ளன. அந்தக் காலத்துத் தொலைபேசி எண் புத்தகத்தைப் போல ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் உட்பட்ட வாக்காளர்களை அடைவதற்கான துல்லியமான தரவுகள், திட்டமிடல்கள் இக்கட்சிகளிடம் உண்டு.

சமீப காலங்களில் தேர்தல் பணி என்பது ஹாலிவுட் படங்கள் போலப் பிரமாண்டமாகியிருக்கிறது. தமிழகத்தின் கடைசி வாக்காளரும் எந்தத் தரப்புக்கு ஆதரவானவர் / எதிரானவர் / சாதகமானவர் என்பதை யூகிக்கும் அளவுக்கு அதிமுகவின் கட்டமைப்பு இன்றைக்கு வலுவானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிலையில், திமுக அதனுடன் போட்டியிடும் நிலையில் இருக்கிறதே தவிர, அதிமுகவுடன் ஒப்பிடத்தக்க வகையில் இல்லை.



அதிமுகவின் உயிர்சக்தி

அதிமுகவின் தலைமை கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம்; ஆனால், ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் தொடங்கிக் கட்சியின் கடைசி கிளை நிர்வாகி வரை தொண்டர்கள் எவர் மீதும் புகார்கள் / குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சூழலை ஜெயலலிதா உருவாக்கியிருக்கிறார். எவர் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் மேலே வர முடியும்; கீழே தள்ளப்படும் அபாயமும் உண்டு எனும் நிலையையும் ஒவ்வொரு நிர்வாகியும் சக நிர்வாகியைக் கண்காணிக்கும் / கண்காணிக்கப்படும் சூழலும் ஏதோ ஒரு வகையில் தொண்டர்களுக்குத் தங்கள் வசம் அதிகாரம் இருப்பதான மனநிலையை உருவாக்கிவைத்திருக்கிறது.

நிர்வாகிகள் இடையே இருக்கிற இந்த கட்டுப்பாட்டுக்கு நாம் ‘ஆழ்கடலுக்குள்ளே நடக்கும் கடும் போராட்டத்தின் நடுவில் உருவாகும் மேற்கடல் சமநிலை’ யை உதாரணமாகச் சொல்லலாம். அதுவே அதிமுகவின் இன்றைய உயிர்சக்தி. அந்தக் கட்சியைத் தொடர்ந்து ஏதோ ஒருவகையில் தொடர்ந்து இதுவே புதுப்பித்துவருகிறது. திமுகவின் மாநிலத் தலைமையைப் போலவே அதன் மாவட்டத் தலைமைகளும் குறுநில மன்னர் பரம்பரைகளைப் போலக் கெட்டிதட்டிக் கிடக்கும் நிலையோடு ஒப்பிட்டால், அதிமுகவின் இந்த வியூகம் செயல்படும் முறையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். சீர்திருத்தம் என்ற பெயரில் இப்போது திமுகவில் பேசப்படும் விஷயமும் இதுவே.

திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் மாற்று பேசிய பல கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் வாக்குச் சாவடிக் குழுக்கள் போடக்கூட ஆயிரக் கணக்கான இடங்களில் ஆள் இல்லை. கட்சியை அடிமட்ட அளவில் வளர்த்தெடுக்காமல் மாற்று பேசுவதும் முதல்வர் முழக்கம் முன்வைப்பதும் கானல் தோற்றம். அனலோடு சேர்த்து அது கலைந்துதான் போகும்!

- த.நீதிராஜன்,
தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்