தேர்தல் அறிக்கைகள் எப்படி?- மாற்றத்துக்கான முன்னெடுப்பு

By பத்ரி சேஷாத்ரி

தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டாலும், மக்கள் நலக் கூட்டணி தனியாகவே ஒரு தேர்தல் அறிக்கையை முன்வைத்துள்ளது. உள்ளாட்சிகளுக்கு அதிகாரம், சாதியத்துக்கு எதிர்ப்பு, விவசாயத்தைப் பற்றிய உண்மையான அக்கறை உள்ளிட்ட பல நல்ல அம்சங்கள் உள்ளன.

மதுவிலக்கால் ஏற்படும் இழப்பு சுமார் ரூ.30,000 கோடி. அதை எப்படிச் சமாளிப்பது என்பதை இந்த அறிக்கைதான் கூர்மையாகப் பேசுகிறது. மற்ற அறிக்கைகளைப் போலவே இதுவும் கிரானைட், மணல் ஆகியவற்றை அரசே நேரடியாக விற்பனை செய்வதன்மூலம் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும் என்கிறது.

இலவசங்களை வெட்டுவதால் ஆண்டுக்கு ரூ.3,750 கோடி சேமிப்பு, இலவசங்களை விநியோகிக்க ஆகும் செலவு குறைவதால் ரூ. 4,250 கோடி சேமிப்பு, பத்திரப் பதிவுத் துறைச் சீரமைப்புகளால் கிடைக்கும் வருவாய் ரூ. 15,000 கோடி, பொது விநியோகத் திட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைப்பதால் ரூ.1,660 கோடி சேமிப்பு, மின் சிக்கனம், மின் திருட்டுத் தடுப்பால் சேமிக்கப்படும் சுமார் ரூ. 1,500 கோடி என்று தெளிவான திட்டங்களை முன்வைக்கும் முதல் தேர்தல் அறிக்கை இது!

மதுவால் வரும் வருவாயை இத்தகைய சேமிப்புகள் மூலம் பெருமளவு சரிகட்டிவிட முடியும் என்னும் நம்பிக்கையை விதைக்கிறது மக்கள் நலக் கூட்டணி! தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள மது ஆலைகளை நிரந்தரமாக மூடுவது குறித்து அறிக்கை பேசுகிறது. இது சாத்தியமா என்று தெரியவில்லை.

உள்ளாட்சிக்கு அதிகாரம்

உள்ளாட்சிகளுக்கு 30% நிதியும் அதிக அதிகாரங்களும் தரப்படுமாம். எந்தெந்த வகைகளில் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தலாம் என்ற விவாதமும் உண்டு. உள்ளூர் வளங்கள் மீதான முடிவில் கிராம சபைகளுடன் கலந்து பேசி மட்டுமே முடிவெடுக்கப்படும் என்கிறது அது. இது ஒரு முக்கியமான விவாதப்புள்ளி.

சமூக நீதி

யாருடன் கூட்டு, யாருடன் கூட்டு இல்லை என்பதில் ஆரம்பத்திலிருந்தே மக்கள் நலக் கூட்டணிக்குத் தெளிவு இருந்தது. சில சமூகத் திட்டங்களை இந்த அறிக்கை முன்மொழிந்துள்ளது. ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம், சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சாதி மறுப்புக் காதலர்கள்/தம்பதிகளைப் பாதுகாக்கத் தனிக் காவல் பிரிவு எனும் வாக்குறுதிகள் கொண்ட ஒரே அறிக்கை இதுதான்.

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தொடரும் என்பதோடு, தனியார் நிறுவனங்களிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவர மத்திய அரசை வற்புறுத்துவோம் என்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள், மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும். தற்போது தமிழக முஸ்லிம் களுக்கான உள் ஒதுக்கீடு, மக்கள்தொகைக்கேற்ப அதிகரிக்கப்படும். முஸ்லிம் பெண்கள் கல்விக்காகவும் வேலைவாய்ப்புகளுக்காகவும் சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் சொல்கிறது அறிக்கை.

வேளாண்மை வளர்ச்சி

தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு ஆணையத்தைப் போல் மாநில அளவில் வேளாண் புள்ளிவிவர ஆணையம் ஒன்று உருவாக்கப்படும் என்கிறது அறிக்கை. இந்த ஆணையத்தின் மூலம் உற்பத்தி, ஏற்றுமதி, விளைபொருள் விலை நிர்ணயம், பயிர் சாகுபடி, விவசாயிகள் பெற்றுள்ள கடன் போன்ற பலவும் சேகரிக்கப்படும். விவசாயம் குறித்து முன்வைக்கப்பட்டதிலேயே மிக முக்கியமான முன்னெடுப்பாக இதை நான் பார்க்கிறேன். இந்தத் தகவல்கள் இல்லாமல் விவசாயத் துறைச் சீர்திருத்தம் சாத்தியமே அல்ல.

பால் விலையைத் தடாலடியாகக் குறைப்பேன் என்று திமுக சொல்வதுபோல் சொல்லாமல், பால் கொள்முதலுக்கான விலையை நிர்ணயம் செய்துவிட்டு, அஇஅதிமுக அரசு ஏற்றியதைக் குறைப்பதாகச் சொல்கிறது அறிக்கை. மீத்தேன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்கள் காவிரிப் பாசனப் பகுதியில் முற்றிலுமாகத் தடை செய்யப்படும் என்ற வாக்குறுதியும் இதில் உள்ளது.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களுக்கு விரிவுபடுத்தி, தினக் கூலியை ரூ. 250 என்று உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். இவற்றின் சாத்தியக்கூறுகள் குறைவே. மாறாக, பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது இம்மாதிரியான திட்டங்களுக்கான தேவை முற்றிலும் இருக்காது என்பதுதான் உண்மை. இலவசங்களையும் தேவையற்ற மானியங்களையும் நீக்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருக்கும் மக்கள் நலக் கூட்டணி, இதனைப் பரிசீலிக்க வேண்டும்.

நிறைகளே அதிகம்

தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.18,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதியத்தை பணவீக்கத்துக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது நியாயமே. ஆனால், 18,000 என்று எந்த அடிப்படையும் இல்லாமல் உயர்த்துவது, சிறு குறு, நடுத்தரத் தொழிற்சாலைகளைக் கடுமையாகப் பாதிக்கும்.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பை அதிகரித்தல் என்று பல துறைகளிலும் நன்கு யோசித்து முன்வைக்கப்பட்டுள்ள பல திட்டங்களை இந்த அறிக்கையில் காண முடிகிறது. அதே நேரம்.. ஒருசில, செயல்படுத்தவே முடியாத கருத்துகளையும் காண முடிகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, குறைகளைவிட நிறைகளே அதிகம் என்று மதிப்பிட முடிகிறது.

கட்டுரையாளர் பதிப்பாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: badri@nhm.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 mins ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்