திருச்சியில் செய்தியாளராக இருந்தபோது, குல்சும் பீபியைச் சந்தித்தேன். 116 வயது மூதாட்டி. நாட்டிலேயே அதிக வயதானவராக இருந்த அவருக்கான வாக்காளர் அட்டையை அன்றைய ஆட்சியர் நந்தகிஷோர் நேரில் சென்று வழங்கினார். நான் கேள்விப்பட்டு சென்றபோது நத்தர்ஷா பள்ளிவாசலில் குல்சும் பீபி இருப்பதாகச் சொன்னார்கள். பழமையான அந்தப் பள்ளிவாசலின் வாயிலில் யாசகம் பெறுபவராக அந்த மூதாட்டி அமர்ந்திருந்தார். ஒரு ஆச்சரியமான விஷயம், எல்லாத் தேர்தல்களிலும் அவர் தவறாமல் வாக்களித்திருந்தார். குல்சும் பீபி ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விவரிக்கையில் சொன்னார், “வெள்ளைக்காரங்க ஆட்சியை, முழுக்கவுமே குறையாச் சொல்லிற முடியாது. என்ன மாதிரி ஒரு ஏழைப்பட்ட முஸ்லிம் பெண் அந்தக் காலத்திலேயே பள்ளிக்கூடம் போய்ப் படிக்க முடிஞ்சுதுன்னா, அது வெள்ளைக்காரங்க வராட்டினா இங்க நடந்திருக்குமா?”
இந்தியக் கல்வி முறையை மாற்றியமைத்த ஆங்கிலேயர் மெக்காலேவை தலித் மக்கள் வழிபடும் கோயில் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் இருப்பதை அங்கு சென்றிருந்தபோது ஒரு நண்பர் சொன்னார். ஆங்கிலேயர் ஆட்சி, மிகப் பெரிய சுரண்டலையும் ஊழலையும் பல கோடிப் பேரைக் கொன்றழித்த பஞ்சங்களையும் இந்தியா மீது திணித்த ஆட்சி என்பதில் சந்தேகமே இல்லை. அதேசமயம், எந்த ஆட்சியாளரையும் ஒரே கண் கொண்டு மட்டுமே பார்க்க முடியாது. இந்நாட்டில் ஜனநாயக விதைகள் விழுந்ததில் மிக முக்கியமான பங்கு பிரிட்டிஷ் ஆட்சிக்கு உண்டு.
நவீன இந்தியா எனும் கருத்தாக்கம், இன்றைய நவீனக் கல்வி, நவீன ஆட்சி அமைப்பு, நீதி நிர்வாகப் பரிபாலன முறை, மக்களுக்கும் அரசுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றப் பாலங்களாக அமைந்திருக்கும் ஊடகங்கள் இவை யாவும் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவுகளில் நாம் பெற்றவை. இந்திய ஜனநாயகத்தின் முப்பெரும் சிற்பிகளான காந்தி, நேரு, அம்பேத்கர் மூவருமே பிரிட்டிஷ் சிந்தனையால் தாக்கம் பெற்றவர்கள். இந்தியாவில் ஜனநாயகக் கட்டமைப்புக்கான செயலூக்கத்தை அவர்கள் பிரிட்டிஷாரிடமிருந்தே பெற்றார்கள். எதிரியாக அல்ல; மாற்றுத் தரப்பாக அவர்களை ஜனநாயக முறையில் அணுகியே நாம் சுதந்திரம் பெற்றோம்.
நிலப்பரப்பு, காலநிலை, தட்பவெப்ப வேறுபாடுகள்; இன, மத, சாதி வேறுபாடுகள்; உணவு, உடை, மொழி, கலாச்சார வேறுபாடுகள் எனப் பல நூறு சிறுபான்மை இனக் குழுக்களைக் கொண்ட தொகுப்பே இந்தியா. காந்தி இந்திய அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்த காலத்தில், கிட்டத்தட்ட நூற்றுக்கு தொண்ணூறுக்கும் மேற்பட்டோர் ‘அரசியல் என்றால் என்ன?’ என்று கேள்வி கேட்கக் கூடியவர்கள். அதிகாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாமலிருந்தவர்கள். இவர்களுக்கு ஜனநாயகக் கல்வியை எப்படிக் கற்றுக்கொடுப்பது?
போராட்டங்கள் என்றாலே முகம் சுளிக்கும் ஒரு தலைமுறையை இன்றைக்குப் பார்க்கிறோம். மாணவர் சங்கங்களை, தொழிற்சங்கங்களை இழிவாகவும், வளர்ச்சிக்கு எதிரான அமைப்புகளாகவும் பேசுவதைப் பார்க்கிறோம். உண்மையில் ஜனநாயகக் கல்வி, அங்கிருந்தே தொடங்குகிறது. போராட்டங்களும் சங்கக் கூட்டங்களுமே மக்களை அணிதிரட்டுவதற்கான களங்கள். ‘நீ தனிநபர் அல்ல; உன்னைப் போல் எதிர்த்துப் போராட ஒரு படையே இருக்கிறது’ என்பதைக் கற்பிப்பதற்கான வகுப்பறைகள். காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய மூன்று பெரும் போராட்டங்களே இந்நாட்டின் கோடிக்கணக்கான எளிய மக்களுக்குப் பெருமளவில் அரசியலையும் ஜனநாயகத்தையும் கற்றுக்கொடுத்த போராட்டக் களங்கள்.
காந்தி, நேரு, அம்பேத்கர் இந்த மூவருக்கும் இடையில் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தன. இன்றைக்கு இந்த வேறுபாடுகளை மட்டும் பேசி, மூவரையும் துருவ எதிரிகளாகப் பிரித்துக் கும்மியடிக்கும் ஒரு வெறுப்புக் கூட்டமே இருக்கிறது. உண்மையில், ஆத்மசுத்தியோடு ஜனநாயகத்தை அணுகுபவர்களால் இந்த மூன்று ஆளுமைகளையும் புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் ஜனநாயகத்தைப் பற்றிப் பேச முடியாது. மூவருமே பல நூறு மேடைகளில் பேசியவர்கள்; பல்லாயிரக் கணக்கான பக்கங்களை எழுதியவர்கள். பரஸ்பர மரியாதையை எங்கே காட்ட வேண்டும், பரஸ்பர கருத்து முரண்பாடுகளை எங்கே காட்ட வேண்டும் எனும் ஜனநாயகக் கல்வியைத் தம் வாழ்வின் மூலம் நமக்குச் சொல்லிக்கொடுத்தவர்கள்.
காந்தியின் அடிப்படைக் கனவு இந்தியா கிராமங்களில் வாழ வேண்டும் என்பது. அம்பேத்கர் நேரெதிர் கருத்தைக் கொண்டிருந்தார். கிராமங்களைக் குறுகிய எண்ணங்கள் ஊறிய சாக்கடைகளாகவும் சாதியமும் அறியாமையும் நிறைந்த இருட்டுக் குகைகளாகவும் பார்த்தார் அம்பேத்கர். “விலங்குகளைப் போல் மனிதன் வாழ்வதிலிருந்து அவனை விடுவிக்க இயந்திரங்களும், நவீன சமூக அமைப்பும் மிக அடிப்படையானவை” என்றார் அவர்.
நேருவுக்கும், அம்பேத்கருக்கும் இதில் பெரிய வேறுபாடு இல்லை. 1930-ல் எழுதிய சுயசரிதையிலேயே நேரு குறிப்பிடுகிறார். “நகர நாகரிக வசதிகள் யாவையும் கிராமத்தவர்களுக்கும் பரவச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை… ஏர் உழும் மனிதனை வானில் வைத்துப் பாராட்டுவதற்கு என்ன இருக்கிறது? எண்ணற்ற தலைமுறைகளாக அவன் நசுக்கப்பட்டிருக்கிறான். பல காலமாக அவனைச் சுரண்டிக்கொண்டே வந்திருக்கிறார்கள். அவனுக்கும் அவனோடு வாழும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது!”
காந்தியோ கடைசி வரை தன் கருத்தில் உறுதியாக இருந்தார். 1945, அக்டோபர் 5 அன்று நேருவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இந்தியா உண்மையான விடுதலை பெற வேண்டுமாயின், இந்தியாவின் வாயிலாக உலகம் மெய்யான சுதந்திரம் காண வேண்டுமாயின், விரைவாகவோ அல்லது பின்னரோ கிராமங்களிலேதான் நாம் வாழ வேண்டிவரும். நகரங்களில் அல்ல… எளிமையான கிராம வாழ்க்கையில் மாத்திரம்தான் சத்தியத்தையும் அகிம்சையையும் நாம் நடைமுறையில் கொண்டுவர முடியும்... இன்று உலகம் தவறான வழியில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து நாம் அஞ்சக் கூடாது... நான் கனவு காணும் தலைசிறந்த கிராமத்தில் கிராம மக்கள் மதியீனர்களாக இருக்க மாட்டார்கள்; புத்திசாலிகளாகவும் எழுச்சிகரமாகவும் இருப்பார்கள்; மிருகங்களைப் போல் புழுதியிலும் இருளிலும் உழல மாட்டார்கள்; அங்கே ஆண்களும் பெண்களும் சுதந்திரர்களாக இருப்பார்கள்; உலகிலுள்ள எவருக்கும் எவ்விதத்திலும் சரிநிகர் சமானமானவர்களாக இருப்பார்கள்!”
காந்திதான் இந்தியா என்று கருதப்பட்ட காலம் அது. காந்தியின் அடிப்படைக் கனவிலிருந்தே முரண்பட்ட இரு ஆளுமைகள்தான் சுதந்திர இந்தியாவைக் கட்டியமைத்தார்கள். நவீனராகக் கருதப்பட்ட நேருவே காந்தியின் அரசியல் வாரிசானார். கால் நூற்றாண்டு காலம் காந்தியைக் கடுமையாக விமர்சித்த அம்பேத்கரே இந்திய அரசியல் சட்டத்தின் தந்தையானார்.
சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில், காந்தியையும் காங்கிரஸையும் கடுமையாக எதிர்த்த மூவர் முக்கிய இடங்களில் இடம்பெற்றிருந்தார்கள். முதலாமவர் அம்பேத்கர் சட்ட அமைச்சர். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர். இரண்டாமவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி தொழில் துறை அமைச்சர். அன்றைய இந்து மகா சபையைச் சேர்ந்தவர், இன்றைய பாஜகவின் தாயான ஜனசங்கத்தை நிறுவியவர். மூன்றாமவர் பல்தேவ் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சர். சீக்கியர்களின் பந்திக் கட்சியைச் சேர்ந்தவர். எப்படி இவர்கள் அமைச்சரவைக்குள் வந்தார்கள்?
டெல்லியில் இன்றளவும் நினைவுகூரப்படும் கதை இது. சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவைப் பட்டியல் காந்தியின் கைக்குப் போகிறது. பட்டியல் முழுக்க காங்கிரஸ்காரர்களின் பெயர்கள். காந்தி பட்டியலைத் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சொன்னாராம், “சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல!”
(பழகுவோம்..)
-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
5 days ago