மாநிலப் பிரிவினை, பாகப்பிரிவினையா?

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும் தெலங் கானாவின் முதல் முதல்வருமான கே. சந்திரசேகர் ராவின் பல கொள்கைகள் பிரிவினைவாத சாயம் பூசப் பட்டவை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சீமாந்திரா காற்று தெலங்கானாவுக்கு வீசக் கூடாது, தெலங்கானா மேகம் சீமாந்திராவில் மழையாகப் பெய்யக் கூடாது என்று அவர் உத்தரவு போடாததுதான் குறை.

பிரிக்கப்படாத மாநிலங்களின் முதல்வர்களே, தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கிறதே என்று மலைக்கும்போது, புதிய மாநிலத்தின் முதல்வர் சீமாந்திரக் காரர்களை ஒதுக்குவதை முக்கியக் கொள்கையாக வைத்திருக்கிறாரோ என்றே பலர் சந்தேகிக்கின்றனர்.

முதலில், சீமாந்திராவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தெலங்கானா பகுதியில் அரசு வேலையில் இருக்கக் கூடாது என்பதில் ராவ் தீவிரம் காட்டினார். தற்போது, தெலங்கானாவில் படிக்கும் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சீமாந்திரக்காரர்களாக இருந்தால், அவர்களுக்கு மாநில அரசின் சலுகைகளை அளிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார். ஹைதராபாதில் தெலங்கானா, சீமாந்திரா தலைமைச் செயலக அலுவலகங் களுக்கு இடையில் பிரிவுக்கோடு தெளிவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழியர்கள் நடந்துகூட எதிரெதிர்ப் பகுதிகளுக்குச் சென்றுவிடாதபடிக்கு இரும்புக் கம்பங்களை நட வைத்து, தடுப்பு வேலியையும் போட்டிருக்கிறார்கள்.

கம்மம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம், பலோன்சா வருவாய் கோட்டப் பகுதியின் 205 பழங்குடி கிராமங்களை சீமாந்திரா பகுதியின் கிழக்கு கோதாவரி மாவட்டத்துக்குக் கொடுப்பதாக முன்னர் ஒப்புக்கொண்டாலும் இப்போது அதை மறுக்கிறார். கிருஷ்ணா, கோதாவரி நதிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதிலும் நிச்சயம் சிக்கல் வரும் என்பதைத் தனது போக்கினால் உணர்த்திவருகிறார் சந்திரசேகர் ராவ்.

இதுவரை அண்ணன் தம்பிகளாக ஒன்றாக வாழ்ந்தவர்கள் இந்த அளவுக்குப் பகைமை பாராட்டுவது சரியா என்ற கேள்வி தற்போது எழுந் துள்ளது. மாநில முதலமைச்சர் என்பவர் தன்னுடைய மாநில மக்களின் நலனை உறுதிப்படுத்துவதற்காகப் பிற மாநிலத்தவர்களைப் பகைவர்களாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை. சீமாந்திரா மக்களுடனும் தலைவர்களுடனும் நெருங்கிச் செயல்படுவதன்மூலம்தான் தெலங்கானாவை வளப்படுத்த முடியும்.

தெலங்கானா என்ற தனி மாநிலம் உதயமானபோதே அதன் பங்குக்கு ரூ.2,362 கோடி கடன் சுமை தலையில் ஏறியிருக்கிறது. விவசாயக் கடனாக ரூ.1 லட்சம், ஆதரவற்ற முதியவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,500 மற்றும் 10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி என்றெல்லாம் வாக்குறுதி தந்துதான் ஆட்சிக்கு வந்திருக்கிறார் சந்திரசேகர் ராவ்.

மாநிலத்தில் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் இடம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் மத்திய அரசின் அனுதாபம் சந்திரசேகர் ராவுக்கு இருந்தாலும் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்றால், அனைவருடனும் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று பலர் கருதுகின்றனர்.

சீமாந்திரா முதல்வரான சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியிலிருந்து அரசியலுக்கு வந்தவர். 9 ஆண்டுகள் முதல்வராகவும் 10 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து அரசியலில் ஊறியவர். அவரைத் தனது போட்டியாளராகக் கருதாமல், பழைய நண்பராகக் கருதினால் இரண்டு மாநிலங்களும் வளம்பெறும் என்பதே இரு மாநில மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது. சந்திரசேகர் ராவ் இவற்றைப் புரிந்துகொள்வாரா என்பது மிக முக்கியமான கேள்வி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE