தலைநூல்: ஒரு பொற்காலத்தின் கல்வெட்டு!

By த.நீதிராஜன்

தமிழகத்தில் முதல்வராக காமராஜர் இருந்த காலகட்டம் ஒரு பொற்காலம். இன்றும் நல்லாட்சி என்ற பதத்துக்கு உண்மையான அர்த்தமாக காமராஜர் ஆட்சியே பார்க்கப்படுகிறது. காமராஜர் தொடர்பான பல்வேறு அரசியல் நிகழ்வுகளை எதிர்காலத் தலைமுறைக்காகப் பாதுகாத்து, புத்தகமாகத் தொகுத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கோபண்ணா.

காமராஜரின் குடும்பப் பின்னணி, ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த அவரிடம் மாணவர் பருவத்திலேயே வெளிப்பட்ட சுதந்திரப் போராட்ட உணர்வு, அதிலிருந்து அவரது மனத்தைத் திருப்ப குடும்பத்தினர் செய்த முயற்சிகள், கேரளாவுக்கு வியாபாரம் செய்ய அவரை அனுப்பியது, பெரியார் பங்கேற்ற ‘வைக்கம் போராட்ட’த்தால் அவர் கவரப்பட்டது என ஆரம்பகால வரலாறுகளில் இருந்தே தொடங்குகிறது நூல். காமராஜரின் நூற்றாண்டான 2003-ல் தொடங்கிய இந்தத் தொகுப்பை மேலும் மேலும் செழுமைப்படுத்தி ஒரு கிடைப்பதற்கரிய பொக்கிஷமாகவே ஜொலிக்க வைத்துள்ளார் கோபண்ணா.

மக்களிடம் செல்வாக்கு இல்லாதவரான ராஜாஜி, காந்தியடிகளையும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களையும் உடன் வைத்துக்கொண்டு, மக்களின் தொண்டராக இருந்து படிப்படியாக உயர்ந்த காமராஜரிடம் செய்த அரசியல் தந்திரங்கள், இத்தகைய சூழலில் அதிகாரபூர்வமான தலைவரான காமராஜரையும் அவரது தொண்டர்களையும் கும்பல் என்று வர்ணித்து, காந்தியடிகள் அவரது பத்திரிகையில் எழுதியது உட்பட அந்தக் கால காங்கிரஸ் கட்சியின் வரலாறு மேற்பூச்சுகளின்றி அசலாகப் பதிவாகியிருக்கிறது.

தமிழக முதல்வர் பதவியைப் பிடித்துக் கொண்ட ராஜாஜி, யதேச்சாதிகாரமாகக் குலக் கல்வித் திட்டத்தை அறிவித்ததிலிருந்து அவரது வீழ்ச்சி தீவிரமானது. அவருக்குப் பிறகு முதல்வரான காமராஜர், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், மின்துறை வளர்ச்சி உள்ளிட்ட தொழில்கள், விவசாயத்துக்குத் தேவையான அணைகளைக் கொண்டுவந்ததுடன், பல்வேறு தொழிலதிபர்கள், விவசாய மக்கள் உதவியோடு உருவாக்கிய ஆரம்பக் கல்விக்கான அடித்தளம் எல்லாம் துறைவாரியான விவரங்களோடு உள்ளன.

“காங்கிரஸ் சாதியை ஒழிக்காது என்பதால், நான் காங்கிரஸை ஒழிப்பேன் என்றேன். தற்போது எல்லோருக்கும் கல்வி கொடுத்து சாதி ஒழிக்கும் வேலையை காங்கிரஸ் சார்பாக காமராஜர் செய்கிறார். அதனால் நான் காங்கிரஸை ஆதரிக்கிறேன்” என்றார் பெரியார். சமூக நீதியைக் காப்பதற்கான முதலாவது அரசியல் சாசனத் திருத்தத்தை உருவாக்கியதில் காமராஜரும் பெரியாரும் இணைந்து செய்த பணிகள் அபாரமானவை.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உயர்ந்த காமராஜர் பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குரியவராக நீண்டகாலம் இருந்ததும், நேருவின் மறைவுக்குப் பின்னர், அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவுசெய்பவராக இருந்ததும் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன. இந்திரா காந்தியைப் பிரதமராக்கிய காமராஜர், அதன் தொடர்ச்சியான விளைவுகளால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுப்பில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட படங்கள் பெரும் வரலாற்று ஆவணங்கள். காமராஜர் போன்ற இணையற்ற தலைவரின் காலப் பதிவுகள் மூலம் இன்றைய இளைஞர்களுக்குச் சமூகப் பொறுப்பையும், அற உணர்வையும் கடத்தும் உயிராற்றல் கொண்டது இந்தத் தொகுப்பு.

காமராஜ் ஒரு சகாப்தம்

ஆசிரியர்: ஆ.கோபண்ணா

விலை: ரூ. 1,500

வெளியீடு: நவ இந்தியா பதிப்பகம்,

கீழ்ப்பாக்கம், சென்னை- 600 010.

தொடர்புக்கு: 9444950044.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்