விவசாயிகளின் குரலைக் கேளுங்கள்!

By பெ.சண்முகம்

திமுக, 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தன. கடந்த ஓராண்டு காலத்தில் பல வாக்குறுதிகள் செயல்வடிவம் பெற்றிருக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்று, ‘விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்; விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது’ என்பது. திருச்சியில் முதல்வர் அறிவித்த 7 உறுதிமொழிகளுள் ஒன்று ‘10 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக உயர்த்தப்படும்’ என்பது.

ஆனால், அரசின் அணுகுமுறை மேற்குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இல்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை புதிதாக ஆறுவழிச் சாலை அமைக்க அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் அமைக்கப்படவுள்ள மத்திய அரசுத் திட்டம். சாலை அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள பகுதி முப்போகம் விளையும் நல்ல நஞ்சை நிலமாகும்.

ஆழ்குழாய் மூலம் 80 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும் பகுதி. இப்படியொரு வளமான நிலப் பகுதியைச் சாலை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தவுள்ளது. ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு தாலுகா பகுதிகள் ஆற்றுப் பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, மலர் சாகுபடிகள் அதிகமாகச் செய்யப்படும் பகுதிகள் ஆகும். மாவட்ட ஆட்சியரால் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டபோதே, நில உரிமையாளர்களான விவசாயிகள் அனைவரும் நிலத்தைத் தர விருப்பமில்லை என்று தங்கள் எதிர்ப்பை வலுவாகப் பதிவுசெய்துள்ளனர்.

சாலை அமைக்கப்பட்டால் 787 சிறு - குறு விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான 1,236 ஏக்கர் நிலங்களை இழந்து நடுத்தெருவில் நிறுத்தப்படுவார்கள். 15 ஏரிகள், 30 குட்டைகள் அழிக்கப்படும். அரசு 1956-ம் ஆண்டு நெடுஞ்சாலைகள் சட்டத்தின்படி நிலத்தைக் கையகப்படுத்துகிறது. ஆனால், இழப்பீடு மட்டும் 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதே 2013-ம் ஆண்டு சட்டத்தில், முப்போகம் விளையும் நிலங்களை உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தவிர்க்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘சாலைகள் இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு எப்படிக் கொண்டுவருவார்கள்? சாலை இல்லாமல் வளர்ச்சி எப்படி ஏற்படும்?’ என்ற கருத்தே அரசுத் தரப்பின் நியாயமாக முன்வைக்கப்பட்டது.

இதே போல், மதுரை திருமங்கலம் முதல் செங்கோட்டை புளியரை வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், ராஜபாளையம் முதல் புளியரை வரை உள்ள பகுதி முப்போகம் சாகுபடி செய்யப்படும் பகுதி. தென்னந்தோப்புகள், வாழைத்தோட்டங்கள் உள்ளதும் நெல் சாகுபடி செய்யப்படுவதுமான பகுதி. இந்தத் திட்டத்துக்காக கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதிகளில் மட்டும் சுமார் 2,800 ஏக்கர் நல்ல விளைநிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. 1,800-க்கும் மேற்பட்ட சிறு-குறு விவசாயிகள் நிலத்தைக் கொடுக்க விருப்பமில்லை என்று 2019-லேயே மாவட்ட ஆட்சியரிடம் தனித்தனியாக மனு அளித்துள்ளனர்.

இப்போது அரசு திட்டமிட்டுள்ள பகுதி முக்கிய நகரங்களை இணைக்காமலும், வளைந்து நெளிந்தும், தேவையற்று அதிக தூரம் உள்ள வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, தூரம் குறைவாகவும், சாலை நேராக அமையும் வகையிலும், திருவேங்கடம், சங்கரன்கோவில், தென்காசி தாலுகாவுக்கு உட்பட்ட புஞ்சை நிலப் பகுதியில் சாலையை அமைக்கலாம் என்று மாற்று வழியை விவசாயிகள் முன்வைத்துள்ளனர். இந்த மாற்று வழியை ஏற்பதில் அரசுக்கு என்ன சிக்கல் என்பதை வெளிப்படையாக இதுவரை தெரிவிக்கவில்லை. நில விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருசிலரின் நலன்களுக்காக மாற்றுப் பாதையைப் பரிசீலிக்க அரசு தயாராக இல்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் விருப்பமில்லாமல் நிலத்தைக் கையகப்படுத்த மாட்டோம் என்று கொடுத்த வாக்குறுதி குறித்துக் கவலையேபடாமல், நிலத்தைக் காவல் துறை மற்றும் வருவாய்த் துறையைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவது எவ்விதத்திலும் நியாயமில்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தனபள்ளி பகுதியில் சுமார் 3,300 ஏக்கரில் புதிதாக சிப்காட் அமைக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதில் சுமார் 2,200 ஏக்கர் முப்போகம் விளையக் கூடிய, பாசன வளம் நிறைந்த நிலப் பகுதியாகும். ஏற்கெனவே ஓசூரைச் சுற்றி நான்கு சிப்காட்கள் உள்ளன. இப்போது இது ஐந்தாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி விவசாயிகளும் சிப்காட்டுக்கு நிலத்தைக் கொடுக்க மாட்டோம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். ஆனால், அது பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல், சட்டமன்றத்தில் சிப்காட் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் ‘சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது’ என்ற உறுதிமொழியிலிருந்து திமுக அரசு நழுவுவதாகவே கருத வேண்டியுள்ளது. சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை வேண்டாம் என்று விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்ததற்கான காரணங்கள் அனைத்தும் அப்படியேதான் உள்ளன என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

2050-ல் இந்தியாவின் மக்கள்தொகை 150 கோடியாக அதிகரிக்கவிருக்கிறது. இவ்வளவு மக்களுக்கும் உணவளிக்க உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. இதற்கேற்ப விவசாயப் பரப்பளவு அதிகரிக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, இருபோகச் சாகுபடி பரப்பளவை இருமடங்காக உயர்த்துவதாகத் தொலைநோக்குத் திட்டம் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக இருக்கிற நிலங்களை அழிக்கும் வகையில் அரசின் அணுகுமுறை இருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. விளைநிலங்களை வேறு செயல்பாடுகளுக்கு மாற்றிவிட்டால், மீண்டும் விளைநிலங்களாக மாற்ற முடியாது.

‘வளர்ச்சி’ என்ற வார்த்தைக்குள் எல்லாவிதமான அழிவுகளையும் நியாயப்படுத்தக் கூடாது. நல்ல விளைநிலங்களை, அதிலும் நஞ்சை நிலங்களை அழித்து சாலையும் தொழிற்சாலைகளும் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? மேற்கண்ட பிரச்சினைகளில் மாற்றுவழிகள் குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரமும் நாட்டின் உணவுப் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். எனவே, விவசாயிகளின் உணர்வுகளுக்கும் உரிமைக் குரலுக்கும் அரசு மதிப்புக் கொடுக்க வேண்டும்.

- பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். தொடர்புக்கு: pstribal@gmail.com

To Read this in English: Please, lend ears to farmers’ voices!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்