தமிழ்நாட்டில் ஓராசிரியர் பள்ளிகளுக்கு முடிவு காலம் எப்போது?

By செய்திப்பிரிவு

கடந்த மார்ச் மாதம், தமிழ்நாடு முதல்வர் டெல்லிக்குப் பயணம் சென்றுவந்தார். அப்போது அங்குள்ள மாதிரிப் பள்ளிகளைப் பார்வையிட்டு, அவற்றால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டிலும் மாதிரிப் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாகவும் கூறிவிட்டுவந்தார். வந்ததோடு, பல்லாவரம் மறைமலை அடிகளார் பள்ளியை மாதிரிப் பள்ளியாக மாற்றுவதற்கான பணிகள் குறித்த செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன. இது மிகவும் பாராட்டுதலுக்குரிய செயல்!

அதற்கு முன்பாகத் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் களநிலவரம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியதும் அவற்றுக்கான சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் கட்டமைப்பு சார்ந்தும் கற்பித்தல் சார்ந்தும் இன்னும் தன்னிறைவு அடையாதது குறித்து நாம் நன்கறிவோம். குறிப்பாக, ஓராசிரியர் பள்ளிகள்தான் அடிப்படைப் பிரச்சினையாக, கற்றலுக்கான தடையாக இருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கும் தொடக்கப் பள்ளிகள் மொத்தம் 2,631 என்று கடந்த ஆண்டு வெளிவந்த யுனெஸ்கோவின் புள்ளிவிவரம் கூறுகிறது. தளி, ஓசூர், சூளகிரி, கெலமங்கலம் ஒன்றியங்களில் ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் உள்ளன என கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் கூறுகின்றனர். தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓராசிரியர் பள்ளிகள் அதிகமாக இயங்கிவருகின்றன.

ஓராசிரியர் பள்ளிகளாக இருக்கும் 2,631 பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 23 பாடப்புத்தகங்களைக் கையாள வேண்டிய சூழல் அந்தப் பள்ளிகளின் ஒற்றை ஆசிரியருக்கு உண்டு. தரமான கற்பித்தல் கிடைக்க வேண்டுமானால் பள்ளிகளில், குறிப்பாகத் தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியராவது இருக்க வேண்டுமல்லவா? மொழிப் பாடத்தின் அடிப்படை வாசிப்புக்குள் நுழைவதற்கும், எழுத்துகளைக் கற்றுக்கொள்வதற்கும், கணக்குப் பாடத்தில் அடிப்படைத் திறன்களைப் பெறவும் என எல்லாவற்றுக்குமான தருணம் தொடக்க வகுப்புகள்தான்.

அந்தக் குழந்தைகளைத்தான் நாம் அதிகக் கவனத்துடன் கையாள வேண்டிய சூழல் இருக்கிறது. அப்படியான சூழலில் நமது தமிழ்நாட்டில் 2,631 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருக்கும்போது, எல்லாத் திறன்களையும் ஒரே ஆசிரியரே 5 வகுப்புக் குழந்தைகளுக்கும் எவ்வாறு கற்றுக்கொடுக்க முடியும்? அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான பாடங்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல், உளவியல்ரீதியான அணுகுமுறையாகட்டும், மற்ற எல்லாவிதமான திறன்களையும் குழந்தைகளிடமிருந்து வெளிக்கொணர எவ்வாறு ஒரே ஆசிரியரால் முடியும்?

தற்போது கற்பித்தல் சாராத பணிகளையும் ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் செய்துகொண்டிருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களின் கல்வியும் ஆளுமைத் திறன் வளர்ச்சியும்தான். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்க மக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்த பிறகு அந்தக் குழந்தைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் இதுவரை இல்லை. மற்ற வகுப்புகளைக் காட்டிலும் தொடக்க வகுப்புகளுக்குக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 30 குழந்தைகள் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு ஒரே ஆசிரியர் நியமனம் என்ற ஒற்றைக் கூறை அடிப்படையாக வைத்து ஆசிரியர்கள் நியமனமும் இன்றி, பணி நிரவல் நடந்துகொண்டே இருக்கிறது. தொடக்கப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈராசிரியர் பள்ளிகளும் ஓராசிரியர் பள்ளிகளும் அதிகமாக இருப்பது தொடர்பான எந்தத் தீர்வை நோக்கியும் நாம் நகரவில்லை.

ஈராசிரியர், ஓராசிரியர் தொடக்கப் பள்ளிகளைக் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் யாரும் கேள்வி எழுப்பவில்லை, தீர்மானம் கொண்டுவரவில்லை என்பது வேதனை. தற்போது பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பள்ளிகளை மேம்படுத்திவரும் சூழலில், ஓராசிரியர் பள்ளிகளுக்கும் ஈராசிரியர் பள்ளிகளுக்கும் தீர்வுகாண்பதற்கு இப்போதாவது வழிகாணப்படும் என்பதே எல்லோருடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை ஓராசிரியர் பள்ளிகளில் அந்த ஒரு ஆசிரியருக்கும் ஏதாவது உடல்நிலை சரியில்லை என்றாலும் அவசரமாக விடுப்பு தேவைப்பட்டாலும் அவர்களால் எடுக்க முடியவில்லை. அந்த ஒரு ஆசிரியரும் வரவில்லை என்றால், அந்தப் பள்ளி என்ன ஆகும் என்று கேள்வி எழுகிறது. பக்கத்துப் பள்ளிகளிலிருந்து மாற்றுப் பணியில் ஒருசில நாட்கள் ஆசிரியர்கள் வந்தாலும் அந்த நாட்களில் இந்தக் குழந்தைகளோடு புதிய ஆசிரியர் எப்படிப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்வார், அவர்களோடு இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்குப் போதுமான காலம் அவர்களுக்கு இருக்கும் என்று கூற முடியாது. இது மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் கழிப்பறை பிரச்சினைகளும் ஏராளமாக இருக்கின்றன. வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு அனைத்து ஓராசிரியர் பள்ளிகளையும் குறைந்தபட்சம் 5 ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளாக மாற்ற வேண்டும். அப்போதுதான் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும்.

வாசிப்புத் திறன் இல்லை, அடிப்படைக் கணிதத் திறன் இல்லை என்று மாணவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆசிரியர் இருந்தால்தானே அங்கு கல்வி கற்பிக்க முடியும். ஆசிரியர்களுக்கு இப்போது கூடுதலாக ரெக்கார்ட்ஸ் எழுதக்கூடிய பணியை அதிகமாகக் கொடுக்கின்றனர். அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தலைமையாசிரியரைச் சமீபத்தில் சந்தித்துப் பேசும்போது அவர் இப்படிக் கூறினார்:

“வகுப்பில் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துகிறீர்களோ இல்லையோ, அதற்குக் கேள்வி கிடையாது. அதிகாரிகள் ‘பாடத்திட்டக் குறிப்பேடு முடிச்சாச்சா, இதர பதிவேடுகள் முடிச்சாச்சா?’ என்றுதான் கேட்கிறார்கள். இரண்டு ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளை ஒரு ஆசிரியரும் 4, 5-ம் வகுப்புகளில் தலைமையாசிரியரும் கவனிக்கும்போது அந்த மூன்று வகுப்புகளுக்கு 13 வகையான பாடத் திட்டங்களை எழுத வேண்டியுள்ளது. ஒரு வகுப்பிற்கு, ஒரு பாடத்திற்கு எழுதக்கூடிய பாடத்திட்டமே பல பக்கங்களை உள்ளடக்கியது. ஆறு நாட்களும் பள்ளியையும் வைத்துவிடுகிறார்கள். எங்களால் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு இந்தப் பாடத்திட்ட நோட்டையும் சரிவர எழுத முடியவில்லை என்றால், மெமோ கொடுப்பேன் என்கிறார்கள். இதுதான் கல்வித் துறையில் நடக்கிறது.”

பாடம் நடத்துகிறார்களா, அந்தக் குழந்தைகள் கற்றலுக்கு உட்படுகிறார்களா, என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஆசிரியர்களை மிரட்டும் போக்கு நிலவுகிறது என்று ஆசிரியர்கள் வருத்தப்படுகின்றனர். மார்ச் மாதம் வெளியான பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகளிலும் இப்பிரச்சினை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. டெல்லியைப் போல நம் பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். ஓராசிரியர் பள்ளிகள் இல்லாத மாநிலம் என்ற நிலையை அடைந்தால்தான் அது சாத்தியமாகும். இன்னும் ஒருசில வாரங்களில் பள்ளிகள் திறக்கவிருக்கும் சூழலில், இப்போதிருந்தே அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் மாற்றம் நிச்சயமே என்று நம்புவோம்.

- சு.உமாமகேஸ்வரி, ஆசிரியர். தொடர்புக்கு: uma2015scert@gmail.com

To Read this in English: Will one-teacher schools be upgraded?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

25 days ago

கருத்துப் பேழை

25 days ago

கருத்துப் பேழை

25 days ago

மேலும்