பருமனாக இருப்பது பாவச் செயலா?

By ச.கோபாலகிருஷ்ணன்

கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகையும் யூடியூப் பிரபலமுமான சேத்னா ராஜ், கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை (Liposuction) மேற்கொண்டதால் உயிரிழந்துள்ளார். ஒல்லியாகத் தோற்றமளிக்க வேண்டும் என்னும் உந்துதலில் ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகளின் விளைவாக, 22 வயதுப் பெண் சேத்னா மரணமடைந்திருப்பது, உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சைகள், சைஸ் ஜீரோ அல்லது சிக்ஸ் பேக் போன்ற மிகவும் கட்டுக்கோப்பான உடலமைப்பு மீது அதிகரித்துவரும் மோகம், பருமனாக இருப்பவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் ஆகியவை குறித்த விவாதங்களை வலுப்பெறச் செய்துள்ளது.

சேத்னாவின் இறப்புக்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளித்த மருத்துவ மையத்தின் கவனக்குறைவே காரணம் என்று அவருடைய பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். அறுவை சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டு சேத்னா உயிரிழந்திருக்கிறார். பொதுவாக, இதுபோன்ற கொழுப்பு நீக்க/எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் மிக அரிதாகச் சிலருக்கு மரணத்தை விளைவிக்கும் வரையிலான தீவிர பின்விளைவுகள் ஏற்படும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள ஆர்த்தி அகர்வால், 2015-ல் 31 வயதாகியிருந்தபோது அமெரிக்காவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இறப்பதற்கு ஆறு வாரங்களுக்கு முன் அவர் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இது போன்ற அறுவை சிகிச்சைகளால் நீண்டகால உடல்நலப் பாதிப்புகளுக்கும் சிலர் ஆளாகின்றனர். அதேநேரம், நவீன மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக இந்த அறுவை சிகிச்சைகளின் இறப்பு விகிதமும் பிற தீய விளைவுகளும் படிப்படியாகக் குறைந்துவந்துள்ளன.

ஆனாலும், இந்த அறுவை சிகிச்சைகளுக்குத் தரமான, நம்பகமான மருத்துவர்களையும் மருத்துவ மையங்களையும் தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை. திரைப்படங்கள் உள்ளிட்ட காட்சி ஊடகங்களில் இருப்பவர்கள், உடல் எடையை உடனடியாகக் குறைத்தாக வேண்டும் என்னும் அவசரம் காரணமாகத் தவறான நபர்களிடம் சிக்கிவிடுகின்றனர். வசதி குறைவானவர்கள் மலிவுக் கட்டணத்தில் கிடைக்கும் தரமற்ற சிகிச்சைக்குப் பலியாகிவிடுகிறார்கள்.

பருமனாக இருக்கும் அனைவருக்கும் இந்த அறுவை சிகிச்சை உகந்ததல்ல. தேவையானதும் அல்ல. ஒருவரின் உயரத்துக்கு ஏற்ப அவருடைய உடல் எடை எவ்வளவு இருக்கலாம் என்பதைக் கணக்கிட, ‘உடல் பருமக் குறியீடு’ (body mass index) என்னும் அளவீடு பயன்படுத்தப்படுகிறது. உடல்பருமக் குறியீடானது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட துணைநோய் இருப்போருக்கு 32.5 அல்லது அதற்கு மேலாகவும் பிறருக்கு 37.5 அல்லது அதற்கு மேலாகவும் இருந்தால் மட்டுமே அந்த நபர் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுவார்.

அதுவும் அவர் அதீத உடல் பருமனின் காரணமாக நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகளுக்கும் அகால மரணத்துக்கும் ஆளாகிவிடுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றால் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகள் முற்றிலும் பலனளிக்கத் தவறிவிட்டால் மட்டுமே அறுவை சிகிச்சைகளின் மூலம் உடல் எடையைக் குறைப்பதற்கான வழியை நாட வேண்டும்.

உடல் எடையால் விளையும் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மட்டும் அல்லாமல், சமூக அழுத்தத்தால் விளையும் உளவியல் பிரச்சினைகளிலிருந்து விடுபட விரும்புவோரும் தொழில் காரணங்களுக்காக ’அழகா’கத் தோன்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்போரும்தான் எடை குறைப்பு அறுவை சிகிச்சையை நாடுகிறார்கள். இவர்களில் பலர் உடனடித் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். அல்லது அதற்கான அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு, பருமனாக இருப்பதை இழிவானதாகவும் கிண்டலுக்குரியதாகவும் பார்க்கும் நம் சமூக மனநிலை மென்மேலும் வலுப்பட்டிருப்பதும் தீவிரமடைந்திருப்பதும் முக்கியப் பங்களிக்கிறது. பருமனாக இருப்பது குறித்த கேலிகள் நம் சமூகத்தில் நெடுங்காலமாக இருந்துவருவதுதான். ஆனால், எது பருமன், எது கேலிக்குரிய உடல் எடை என்னும் அளவுகோல் மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் தொப்பையுடன் இருப்பது ஊளைச் சதையுடன் இருப்பது ஆகியவை மட்டுமே கிண்டலுக்குரியதாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அண்மைக் காலங்களில் சற்று சதைப்பிடிப்புடன் இருப்பதே ஒருவரை ‘குண்டு’ என்று முத்திரை குத்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது.

இந்தப் பார்வை மாற்றத்தில் உடல் எடை தொடர்பான சர்வதேச அளவிலான பெருவணிகப் பெருக்கத்துக்கும் மறுக்க முடியாத பங்கிருக்கிறது. 1990-களிலிருந்து சினிமா கதாநாயகர்கள், கதாநாயகிகள் தங்களின் உடல் எடை குறித்த கவனம் அவர்களுக்கு அதிகரிக்கத் தொடங்கியது. சில நடிகர்கள், நடிகைகள் குண்டாக இருக்கிறார்கள் என்பதற்காகவே கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். ஆண்கள் என்றால் சிக்ஸ் பேக் வைத்திருக்க வேண்டும் பெண்கள் என்றால் சைஸ் ஜீரோ உடல்வாகைப் பெற்றிருக்க வேண்டும் என்பது புத்தாயிரத்துக்குப் பின் காட்சி ஊடகங்கள் வழியே பெரிதும் திணிக்கப்பட்டது. சினிமா நடிகர்கள், நடிகைகள் சிலர் இதை ட்ரெண்டாக்கியதில் பங்களித்தனர். ஒரு கட்டத்தில் ஒல்லியாக இருப்பது மட்டுமே அழகானது என்னும் மனநிலை ஊடகங்களில் மட்டுமல்லாமல் பொதுச் சமூகத்திலும் எழுதப்படாத விதியாகிவிட்டது.

அதிக எடை குறித்த இழிவான பார்வை பொதுச் சமூகத்திலும் பரவியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, பார்க்கும் நண்பரையோ உறவினரையோ “என்ன... இவ்ளோ குண்டாகிட்டீங்க?” என்று கேட்பது சர்வசாதாரணமாகிவிட்டது. முதல் முறை சந்திப்பவர்களிடம்கூட அவருடைய உடல் எடை குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் பலர் தயங்குவதேயில்லை. பலர் முன்னிலையில் ஒருவரின் உடல் எடையை விமர்சிப்பது சம்பந்தப்பட்டவருக்கு வலியைக் கொடுக்கக்கூடும் என்பது குறித்து, இப்படிக் கேட்பவர்கள் யோசிப்பதேயில்லை.

அப்படி யோசிக்கத் தேவையில்லை என்று நினைக்கும் அளவுக்கு பருமனாக இருப்பது பாவச் செயல் என்பது போன்ற மனநிலை பரவலாகிவருகிறது. பெண்கள், குறிப்பாக காட்சி ஊடகத் துறையில் இருப்போர் பன்மடங்கு அதிகமாக இந்த அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். சமூக ஊடகங்களில் ஒரு நடிகை தன் ஒளிப்படத்தைப் பதிவேற்றினால் ‘குண்டாகிவிட்டார்’, ‘சதைபோட்டுவிட்டார்’ என்று கூறுவது தொடங்கி, அதற்காகக் கிண்டலடிப்பது, இழிவுபடுத்துவது வரை கடுமையான எதிர்வினைகளைக் காண முடியும். இதன் காரணமாகவே அண்மைக் காலங்களில் வழக்கமான எடை என்று சொல்லக்கூடிய தோற்றம்கொண்ட நடிகைகள் சிலர் மிகவும் ஒல்லியாகியிருப்பதைக் காண முடிகிறது. அப்படி ஒல்லியான பிறகும் ‘நோயாளிபோல் இருக்கிறார்’ என்பது போன்ற விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேர்கிறது.

இன்னொருபுறம், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த அக்கறை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. உடற்பயிற்சிக் கூடங்கள் பன்மடங்கு அதிகரித்துவிட்டன. அனைத்து வயது ஆண்களும் பெண்களும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்கின்றனர். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிற அக்கறையும் அதற்கான முனைப்புகளும் வரவேற்கத் தகுந்தவைதான். ஆனால், கட்டுக்கோப்பான உடல் அமைப்பு மீதான அதீத மோகத்துக்கும் அதனால் விளையும் அழுத்தத்துக்கும் அவை சார்ந்த வணிகத்துக்கும் பங்கிருப்பதை மறுக்க முடியாது.

கட்டுக்கோப்பான உடலமைப்பை விரைவாகப் பெற வேண்டிய உந்துதலில், போதிய பயிற்சி இல்லாமல், கடினமான உடற்பயிற்சிகளைச் செய்து, உடலுக்கு நீண்ட கால பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டுவிடுகின்றனர். இது போன்ற அழுத்தங்கள் தேவையற்றவை என்பதை அனைவரும் உணர வேண்டும். எடை குறைப்பு, உடலைக் கச்சிதமாகக் கட்டமைப்பது இரண்டும் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டலுடன் நிதானமாக, படிப்படியாக நிகழ வேண்டிய விஷயங்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உடல் கட்டுக்கோப்பாக இருப்பதைவிட ஆரோக்கியமாக இருப்பதே முதன்மையானது என்பதை உணர வேண்டும்.

பருமனாக இருப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்பது மறுக்கவே முடியாத மருத்துவ உண்மை. எனவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால், அதற்கு உடனடித் தீர்வுகளை நாடுவது தேவையற்ற ஆபத்துகளை விளைவிக்கும். தக்க மருத்துவ ஆலோசனையுடனும் வழிகாட்டுதலுடனும் உடல் எடைக் குறைப்பை மேற்கொண்டு ஆரோக்கியத்தைப் பெறுவதற்கே பருமனாக இருப்பவர்கள் கவனம்குவிக்க வேண்டும். கிண்டல்களையும் அழுத்தங்களையும் பொருட்படுத்தாமல் கடக்கும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

- கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

To Read this in English: Is obesity a contemptible cardinal sin?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்