மாற்று அரசியலின் தோல்வியல்ல

By மருதன்

மாற்று அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் பெருத்த வேறுபாடுகளைக் காணமுடியவில்லை என்பதே நிஜம்

முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்கிய விஜயகாந்த், அன்புமணி, சீமான் மூவரின் தோல்வியை மாற்று அரசியலின் தோல்வியாகவே பலரும் மதிப்பிடுவார்கள். இனி திராவிட கட்சிகளுக்கு ஒரு மாற்றை உருவாக்குவது இங்கே சாத்தியமில்லை என்னும் திட்டவட்டமான முடிவுக்கும் அவர்கள் வந்து சேர்வார்கள். ஆனால் இந்தப் புரிதலும் முடிவும் உண்மையில் சரியானதுதானா?

காங்கிரஸ் வீழ்த்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 1967 தேர்தலுக்குப் பிறகு 1977 முதல் இங்கு நடத்தப்பட்ட அத்தனை தேர்தல்களிலும் திமுகவும் அதிமுகவும் மட்டுமே ஒன்றையொன்று எதிர்த்து களத்தில் நின்றிருக்கின்றன. இடதுசாரிகள் தொடங்கி மற்ற கட்சிகள் அனைத்தும் இந்த இரண்டின் பின்னாலும் மட்டுமே அணிதிரண்டு நின்றிருக்கின்றன. அவ்வப்போது மாற்று அரசியலுக்கான குரல்கள் ஒலிக்கத்தான் செய்கின்றன என்றாலும், இவற்றை வாக்காளர்கள் பெரிதாக இதுவரை பொருட்படுத்தியதில்லை.

இரண்டில் ஒன்று

இந்த முறை நடந்திருப்பதும் அதுவேதான். மிகுந்த ஆரவாரத்துடனும் ஆர்ப்பாட்டத்துடனும் மாற்று அரசியல் குறித்த உரையாடல்கள் நடத்தப்பட்டன என்றபோதும் அவற்றை ஆதரிக்க மக்கள் முன்வரவில்லை. திமுக அல்லது அதிமுக. இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் பணியை மட்டுமே நாம் மீண்டும் மீண்டும் மேற்கொண்டுவருகிறோம்.

ஊழல், செயலற்ற தன்மை, அலட்சியம், மது திணிப்பு, நிர்வாக முறைகேடுகள், வேலை வாய்ப்பின்மை என்று பல பிரச்சினைகளால் மூச்சுத் திணறி நின்றபோதிலும்கூட அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் கண்டது திமுகவை மட்டும்தான். இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் அதிமுக மட்டுமல்ல திமுகவும்தான் என்பதை விரிவான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிய எவரையும் மக்கள் பொருட்படுத்தக்கூடவில்லை. முற்போக்கு அரசியல், பிற்படுத்தப்பட்டோர் நலன், சீரான நிர்வாகம், தூய்மையான ஜனநாயகப் பண்புகள் ஆகிய உன்னதமான மாற்று மதிப்பீடுகளை முழங்கியபோதிலும் அவற்றையெல்லாம் மக்கள் குறைந்தபட்சம் பரிசீலிக்கக்கூட இல்லை என்பதையே தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தர்க்க நியாயப்படி, மாற்று அரசியலை முன்வைத் தவர்களை மக்கள் அப்படியே அள்ளியணைத்து ஆதரவளித்திருக்கவேண்டும். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இந்தப் புதிய சக்தியை வெற்றிபெறச் செய்திருக்கவும் வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை? ஏன் மக்கள் மூன்றாவது அணியைக் கைவிட்டனர்? அதுவும் இத்தனை மோசமாக? ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே என்றுகூட ஏன் நினைக்கவில்லை மக்கள்? ஏன் மீண்டும் ஜெயலலிதா? மீண்டுமொருமுறை கருணாநிதியை முயன்று பார்க்க ஓரளவுக்கு ஆர்வம் செலுத்திய தமிழகம் மாற்று அரசியல் சக்திகளை ஏன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை?

சற்றே அகலமாக யோசித்துப் பார்ப்போமா? அமெரிக்காவில் கிரீன் பார்ட்டி, லிபரேஷன் பார்ட்டி, அலாஸ்கன் இன்டிபெண்டன்ட் பார்ட்டி, கம்யூனிஸ்ட் பார்ட்டி யுஎஸ்ஏ,சோஷியலிஸ்ட் ஆல்டர்நேடிவ், சிட்டிசன்ஸ் பார்ட்டி என்று வலது, இடது, மையம் என்று அனைத்து அரசியல் நிலைப்பாடுகளையும் கொண்டிருக்கும் பல கட்சிகள் இயங்கிவருகின்றன. இவை போக, ஒரே ஒரு நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும் கட்சிகளும் உள்ளன. மதுவிலக்கை ஆதரிக்க (புரோஹிபிஷன் பார்ட்டி), அயன் ராண்ட் என்பவரின் தத்துவத்தை ஆதரிக்க (அப்ஜக்டிவிஸ்ட் பார்ட்டி), போதைப் பொருள்களை ஒழிக்கக்கூடாது என்று வாதாட (யுனைட்டெட் ஸ்டேட்ஸ் மரிஜ்வானா பார்ட்டி) அங்கே கட்சிகள் பல உள்ளன.

இவை எல்லாமே அமெரிக்க அதிபர் தேர்தலில் பங்கேற்கும். தங்களுடைய வேட்பாளரை முன்னிறுத்தும். தங்களால் முடிந்தவரை பிரச்சாரம் மேற்கொள்ளும். பிறகு,கைவிரல்கள் அளவுக்கு ஓட்டுகள் வாங்கி காணாமல் போகும். இத்தனைக்கும் ரிபப்ளிகன், டெமாக்ரடிக் கட்சிகளைவிட இவர்களிடம் தெளிவான கொள்கைகளும் உயர்ந்த லட்சியங்களும் இருக்கின்றன. தெளிவான செயல்திட்டத்தையும் இவர்கள் வகுத்துவைத்திருக்கிறார்கள். இருந்தும் அமெரிக்க அதிபர் தேர்தல் என்றால் நம் நினைவுக்குமட்டுமல்ல அமெரிக்கர்களின் நினைவுக்கும்கூட டெமாக்ரடிக் கட்சியும் ரிபப்ளிகன் கட்சியும் மட்டும்தான் நினைக்கு வரும். இந்த இரண்டில் ஒன்றைத்தான் அமெரிக்கா ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கும்.

பெப்ஸியும் கோக்கும்

காரணம் எளிமையானது. அவர்கள் இந்த இரண்டால் மட்டுமே இதுவரை ஆளப்பட்டிருக்கிறார்கள். அதாவது, இந்த இரண்டுக்கும் மட்டும்தான் அவர்கள் இதுவரை பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எதிர்வரும் அதிபர் தேர்தலிலும்கூட அவர்கள் காண்பது இரண்டு வாய்ப்புகளை மட்டுமே. ஹிலாரி கிளிண்டன் அல்லது டொனால்ட் ட்ரம்ப். ஒருபோதும் அவர்கள் மேலதிகம் தேடுவதில்லை. மாற்றுக் குரல்களை அவ்வப்போது செவிமடுத்துக் கேட்பார்கள், சில சமயம் வியக்கவும் செய்வார்கள். ஆனால் ஒரு மாற்றாக அவர்களை ஒருபோதும் கருதுவதில்லை.

டெமாக்ரடிக் அல்லது ரிபப்ளிகன். அவர்களைப் பொருத்தவரை இந்த இரண்டு பிராண்டுகள் மட்டுமே நம்பகமானவை.கோக் அல்லது பெப்ஸி என்பதுபோல. வேறுவகை சுவையைப் பழகிக்கொள்ள அவர்கள் தயாராகவில்லை. அச்சம், தயக்கமென்பதைவிட ஒருவகை போதை என்று இதை அழைக்கலாம். நன்கு பழக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயத்தை மீண்டும் ஒருமுறை செய்வதே சுலபமானதாக இருக்கிறது. இது,அல்லது அது என்பதே எளிதான தேர்வாக இருக்கிறது.

இங்கும் அதே கோக் அல்லது பெப்ஸிதான். தேசிய அளவில் என்றால் பாஜக அல்லது காங்கிரஸ். கேரளா என்றால் எல்டிஎஃப் அல்லது யுடிஎப். தமிழகம் என்றால் அதிமுக அல்லது திமுக. பழக்கப்பட்ட சுவையே போதையூட்டுகிறது. மதுவை அதிகம் விரும்பி உட்கொள்ளும் ஒரு சமூகம் இப்படியோர் அரசியல் போதைக்கும் அடிமைப்பட்டுக்கிடப்பதை நிச்சயம் விநோதமாகப் பார்க்கமுடியாது. இந்த போதையுணர்வு காரணமாக நம் இரு கண்களுக்கு இரு பெரும் கட்சிகள் மட்டுமே தெரிகின்றன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டுவிடுகிறோம்.

மதுவைக் காட்டிலும் மோசமானது இந்த அரசியல் போதை. இருந்தும், இதனை மாற்று அரசியலின் தோல்வியாகப் பார்க்கமுடியாது என்பதே என் வாதம். ஏன்? கோக், பெப்ஸி இரண்டின் சுவையும் கிட்டத்தட்ட ஒன்றேதான். டெமாக்ரடிக் கட்சியும் ரிபப்ளிகன் கட்சியும்கூட மிகப் பெரும்பாலான அம்சங்களில் ஒன்றுபோலவேதான் இருக்கின்றன. திமுகவையும் அதிமுகவையும் போல.

இதையே சற்று நீட்டித்துப் பார்த்தால், மாற்று அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் இடையிலும்கூட பெருத்த வேறுபாடுகளைக் காணமுடியவில்லை என்பதே நிஜம். ஒரு ஜெயலலிதாவுக்கும் ஒரு கருணாநிதிக்கும் மாற்றாக ஒரு விஜயகாந்தை அல்லது ஒரு அன்புமணியைக் கற்பனை செய்து பார்க்கமுடியும் என்றா நினைக்கிறீர்கள்? திராவிட இயக்கத்தின் கொள்கை என்பது பாப்புலிசம் என்றால் இந்த மாற்று சக்திகளின் கொள்கையும்கூட அதுவேதான் இல்லையா? சமரசங்களே அரசியல் என்பதை திராவிட கட்சிகளைப் போலவே இந்த திராவிட எதிர்ப்பு கட்சிகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன என்பதைத்தானே சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன?

மெய்யான மாற்று

எனவேதான் மீண்டும் மீண்டும் பழக்கப்பட்ட போதைக்கு மக்கள் திரும்பிவிடுகின்றனர். டெமாக்ரடிக் அல்லது ரிபப்ளிகன். அதிமுக அல்லது திமுக. மற்றவை அனைத்தும் இந்த இரண்டின் நீட்சிகளே. நூறு பூக்கள் மலர்வதே ஜனநாயகம். இங்கே இரண்டு பூக்களே ஒவ்வொரு தேர்தலிலும் பூக்கின்றன. இரண்டு கருத்துகள் மட்டுமே ஒன்றையொன்று எதிர்க்கின்றன. அந்த இரண்டு பூக்களுக்கும், இரண்டு கருத்துகளும்கூட அடிப்படையில் ஒரே இடத்தில் இருந்து உதித்தவையே.

இதன் பொருள், உண்மையில் நாம் ஒருவரையும் தேர்ந்தெடுப்பதேயில்லை என்பதுதான். மாற்று அரசியல் என்பதே இன்னமும் நமக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதுதான். இந்த மாற்று அரசியல் என்பது மெய்யானதாகவும் புரட்சிகரமானதாகவும் இருக்கவேண்டும். அப்படியொரு பூ மலர்ந்தால் நிச்சயம் மக்கள் அதனைப் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொள்வார்கள். அள்ளியெடுத்துக்கொள்வார்கள். நிஜமான மாற்று அரசியல் என்பது மக்கள் அரசியலே.

தொடர்புக்கு : marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்