கடந்த 20 ஆண்டுகளாக, ஆளுங்கட்சி மீதான மதிப்பீடாகவே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இருந்துவருகிறது. ஆனால், 2016 தேர்தல் களம் மட்டும் ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி என்ற இரண்டு கட்சிகளின் மீதான மதிப்பீடாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 50 ஆண்டுச் சலிப்பு காரணமாக, “அதிமுகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம்” என்ற கோஷம் உரத்து ஒலித்துக்கொண்டிருந்த தருணத்தில், அதிமுகவுக்கு இணையாகவும் இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் அதிகமாகவும்கூட மீண்டும் இரு கட்சிகளும் தங்கள் செல்வாக்கை உறுதியாக நிரூபித்துள்ளன. ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும், தொடர் தோல்வியிலிருந்து மீண்டு இந்த முறை வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது திமுக.
தமிழக அரசியல் களத்திலிருந்தே துடைத்தெறியப் பட்டுவிட்டது என்று மக்களவைத் தேர்தலில்கூடப் பேசப்பட்ட திமுகவை இந்த நிலைக்குக் கொண்டுவந்ததன் பின்னணியில் 5 அம்சங்கள் பொதிந்திருக்கின்றன.
1. ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ சந்திப்புகள்
இடதுசாரிக் கட்சிகளின் தேசியத் தலைமையுடன் ஒருபக்கம், தேமுதிகவுடன் ஒருபக்கம் என்று பல முனைகளில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடந்தன. ஆனாலும், எதுவுமே பலன் தராது என்ற சூழ்நிலையில் ‘நமக்கு நாமே’ பிரச்சாரத் திட்டத்தை அறிவித்தார் மு.க.ஸ்டாலின். தமிழகம் முழுக்கச் சுற்றுப் பயணம் சென்றார்.
இந்தப் பயணத்துக்கு மூன்று இலக்குகள் இருந்தன. ஒன்று, தி்முகவின் வாக்குவங்கியை உறுதிசெய்வது. இரண்டு, பொதுத்தளத்தில் செல்வாக்கை உயர்த்துவதன் வழியாக திமுகவுடன் கூட்டணி சேரத் தயங்கும் கட்சிகளை வழிக்குக் கொண்டுவருவது. மூன்று, அதிமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வலிமை திமுகவுக்கு மட்டுமே உண்டு என்ற சித்திரத்தை உருவாக்குவது.
விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் ஸ்டாலின் மேற்கொண்ட நடைப்பயணப் பிரச்சாரம் ஸ்டாலின் என்ற பெயரைத் தமிழகம் முழுக்க ஒலிக்கச்செய்தது. அதன் மூலம் அவருடைய மூன்று இலக்குகளில் ஒன்று நிறைவேறியது. அது, திமுகவினர் மத்தியில் உருவாக்கிய எழுச்சி. தொடர் தோல்விகளால் துவண்டுகிடந்த திமுகவினரைத் தட்டி எழுப்பியது ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம். திமுக ஆட்சிக்காலத்தில் தவறுகள் நடந்திருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக ஸ்டாலின் பகிரங்கமாகச் சொன்னது, அவர் மீதான நம்பிக்கையைச் சற்றே அதிகப்படுத்தியிருக்கிறது. இரண்டாவது, பெரிய கட்சி இலக்கையும் அவர் தொட்டார். மூன்றாவது இலக்கான வானவில் கூட்டணியை ஸ்டாலினால் அடைய முடியவில்லை.
இஸ்லாமியர்களின் வாக்குகளை முழுமையாகக் கவர்ந்துவிடும் நோக்கில் மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தது திமுக. தென் மாவட்டத்தில் திமுக கூட்டணியைப் பலப்படுத்தவும், தலித் வாக்குகளைத் திரட்டவும் புதிய தமிழகத்தைச் சேர்த்துக்கொண்டது. தேமுதிகவே திமுகவின் பிரதான இலக்கு. அதற்காக சாம, பேத, தான, தண்ட முறைகள் அனைத்தையும் பயன்படுத்தியது. ஒருகட்டத்தில் காங்கிரஸைக் கூட்டணிக்குள் கொண்டுவந்து, அதனைத் தூண்டில் முனை மண்புழுவாக மாற்றியது. அப்போதும் தேமுதிக மசியாத நிலையில், காங்கிரஸ் உள்ளிட்டோருடன் கூட்டணியை இறுதிசெய்தது திமுக.
2. மநகூவின் வாக்குகள்
அதிமுகவின் ‘பி டீம்' என்பது மக்கள் நலக் கூட்டணி மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட விமர்சனம். காரணம், அவர்கள் அனைவரும் திமுகவின் வாக்குகளைப் பிரிப்பார்கள் என்பது பொதுவான கணிப்பு. ஆனால், கள யதார்த்தம் முற்றிலும் மாறுபட்டது.
இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளும் 2009 முதல் திமுக எதிர்ப்பு அரசியலையே செய்துவருகிறார்கள். தொடக்கம் முதலே திமுக எதிர்ப்பு அரசியல்தான் தேமுதிகவின் அடையாளம். இவர்கள் அனைவருமே 2011 தேர்தலில் அதிமுகவுடன் அணி அமைத்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக மிகத் தீவிர திமுக எதிர்ப்பு அரசியலைச் செய்துவருகிறது மதிமுக. ஆகவே, அவர்கள் பெறும் வாக்குகளில் கணிசமானவை அதிமுகவுக்கான இழப்பே.
தவிரவும், தலித் வாக்குவங்கி என்பது அதிமுக, காங்கிரஸ் வசம் இருந்திருக்கிறதே தவிர, எக்காலத்திலும் திமுகவுக்குச் சாதகமாக இருந்ததில்லை என்பது திருமாவளவனின் சமீபத்திய மதிப்பீடு. ஆகவே, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி திமுகவைத் தீவிரமாகப் பாதிக்கத் தர்க்கரீதியான காரணங்கள் இல்லை. ஆகவே, அவை திமுகவுக்கு எதிரானதாகப் போயிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
3. கருத்துக் கணிப்பு
அதிமுகவும் வேண்டாம், திமுகவும் வேண்டாம் என்ற கோஷத்துடன் மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் என்று நான்கு அணிகள் உருவாகின. அந்த கோஷம் மாற்று அணிக்கான வாய்ப்பை வலுப்படுத்தியது. ஊடகங்களும் தொடக்கக் காலத்தில் மநகூ உள்ளிட்ட மாற்று அணிகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்தன.
ஆனால், தேர்தல் நெருக்கத்தில் வெளியான கருத்துக் கணிப்புகள் மநகூ, பாமக உள்ளிட்ட மாற்று அணியினரின் செல்வாக்கை முற்றிலுமாகக் குலைத்துப்போட்டன. இந்தக் கட்சிகளால் அல்லது அணியால் பெரிய கட்சிகளின் வாக்குவங்கியை நெருங்கக்கூட முடியாது என்ற தோற்றத்தை உருவாக்கின. அதன் மூலம் இரு துருவ அரசியல் மீண்டெழுந்தது அல்லது மீண்டும் உறுதிசெய்யப்பட்டது. அது திமுகவுக்கான பாதையைப் பகுதி அளவில் திறந்துவிட்டது.
4. இரண்டாவது பெரிய கட்சி
வென்றாலும், தோற்றாலும் திமுகவின் அடிப்படை வாக்குவங்கி 25%. அதன் மூலம் அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி திமுக. தவிரவும், மாற்று அணிகள் பலமற்றவை என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது திமுகவின் இரண்டாம் இடத்தை உறுதிசெய்தது. அதன் மூலம் ஆளுங்கட்சியான அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அதற்கான வாய்ப்பும் வாக்குவங்கியும் திமுக வசமே இருக்கிறது என்ற பிம்பம் திமுகவுக்குச் சாதகமாக மாறியது. கூட்டணிச் சேர்க்கையும் தேர்தல் அறிக்கையின் முக்கியமான அம்சங்களும் திமுகவின் வீழ்ச்சியைப் பெரிய அளவில் தடுத்திருப்பதாகவே தெரிகிறது.
5. அரசு அதிருப்தி வாக்குகள்
ஐந்தாண்டு ஆட்சியை எந்தக் கட்சி நடத்தினாலும் அதிருப்தி வாக்குகள் கணிசமான அளவுக்கு உருவா வதும், அது அடுத்த தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதும் இயல்பான ஒன்று. தமிழ்நாட்டில் அந்த அதிருப்தி வாக்குகள் ஒவ்வொரு தேர்தலின்போதும் 8% முதல் 12% வரை உருவாகியுள்ளன என்பது தமிழகத் தேர்தல் வரலாறு. அந்த அதிருப்தி வாக்குகள் இரண்டாவது பெரிய கட்சியான திமுகவின் பக்கம் முழுமையாகச் செல்லாவிட்டாலும், காத்திரமான அளவு சென்றிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
திமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்த்தியதில் மேற்கண்ட ஆறு அம்சங்களின் பங்களிப்பே பிரதானம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago