ஆண்மொழி அகற்றுவோம்

தமிழ் மொழி ‘குடிமகள்’ என்ற சொல்லுக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ‘சிட்டிசன்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் ‘குடிமகன்' என்ற சொல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதால் பெண்கள் அமைச்சர் பதவி போன்றவற்றை ஏற்கும்போது ‘இந்தியக் குடிமகனான நான்…' என்று சொல்லியே பதவியேற்க வேண்டியிருப்பது பெரும் சங்கடம் என்று சொல்லி, 2003-ம் ஆண்டு ‘குடிமகள்' என்ற சொல்லை அவர் புழக்கத்தில் கொண்டுவந்தார்.

மொழி என்பது சமூகத்தின் கண்ணாடி. சமூகத்தின் மேன்மைகளை மொழி பிரதிபலிப்பது போலவே சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், இழிவுகள் போன்றவற்றையும் மொழி் பிரதிபலிக்கும். அதிலும் சாதியம், ஆணாதிக்கம் இரண்டும் நம் மொழியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஒரு பெண்ணின் மீது பாலியல்ரீதியாக நிகழ்த்தப்படும் தாக்குதலைக் குறிக்க ‘கற்பழிப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சொல்லில் உள்ள ‘கற்பு' விவாதத்துக்குரியது என்பதாலும், பெண்கள் மட்டுமன்றி, சிறுவர்கள், திருநங்கைகள், ஆண்கள் போன்றோரும் பாலியல்ரீதியாகத் தாக்கப்படுவதைக் குறிக்க ‘கற்பழிப்பு' என்ற சொல் பயன்படாது என்பதாலும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது தவறு. அதற்குப் பதிலாக, பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சி போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

அறிவுவெளியிலும் ஆண்மொழி ஆதிக்கம் செலுத்துவதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. புத்தகம், சிந்தனை, கலை என்றாலே அது ஆண்கள் தொடர்பான விஷயம்போல் வாசகன், எழுத்தாளன் போன்ற ‘ன்' விகுதியில் முடியும் சொற்கள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நம்முடைய அன்றாட வாழ்விலும் ‘அப்பா சொன்னார், அப்பா வந்தாங்க’ என்றும் ‘அம்மா சொன்னாள், அம்மா வந்தாள்’ என்றும்தான் பெரும்பாலும் குறிப்பிடுகிறோம்.

பொதுவெளியில் பெண்களின் பங்கேற்பும், பெண்ணுரிமை சார்ந்த விழிப்புணர்வும் பரவலாகக் காணப்படும் இந்தச் சூழலில், நாம் ஆண்மொழியின் ஆதிக்கத்தை அகற்றியே ஆக வேண்டும். இதன் முதல் படியாக, அன்றாட வாழ்வில் பேச்சிலும் எழுத்திலும் பல மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை, பயன்படுத்த வேண்டியவை தொடர்பான பரிந்துரைகள் இதோ:

தவிர்க்க: மனிதன் வியக்கத் தக்க அறிவியல் சாதனைகளைப் புரிந்திருக்கிறான்.

பயன்படுத்துக: மனிதர்கள் வியக்கத் தக்க அறிவியல் சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள்.

தவிர்க்க: இந்தச் சாதனையை முறியடிக்க எவனாலும் முடியாது.

பயன்படுத்துக: இந்தச் சாதனையை முறியடிக்க யாராலும் முடியாது.

தவிர்க்க: விதவை, கைம்பெண்

பயன்படுத்துக: கணவனை இழந்தவர், (இதேபோல் ஆணுக்கு: மனைவியை இழந்தவர்)

தவிர்க்க: (பால் குறிப்பிடாமல் பயன்படுத்தும்போது) வாசகன், எழுத்தாளன், கலைஞன், ரசிகன், கவிஞன்.

பயன்படுத்துக: வாசகர், எழுத்தாளர், கலைஞர், ரசிகர், கவிஞர்.

பெரும்பாலான இடங்களில் 'ர்' விகுதியையோ, பன்மை விகுதியையோ பயன்படுத்தினாலே நாம் ஆண்மொழியின் ஆதிக்கத்தைக் குறைக்க முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE