திருவனந்தபுரம் டு குவாஹாட்டி: அசாமுக்கே டீ!

By பி.ஏ.கிருஷ்ணன்

தேர்தல் மாநிலங்களில் ஒரு கழுகுப் பார்வை

பல ஆண்டுகளுக்கு முன்னால் குவாஹாட்டி நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன். காலை 10 மணிக்கு முக்கியமான ஒருவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அலுவலக நண்பர் வேகமாக வந்தார்.

‘‘சார், வெளியில் எங்கும் போக முடியாது. ஒரு உல்ஃபா இளைஞரை போலீஸ் சுட்டுவிட்டார்கள். பிணம் தெருவில் கிடக்கிறது’’ என்றார்.

நான் அறைக்குத் திரும்பி செல்ல வேண்டிய கட்டாயம். மூன்றாவது தளத்தில் இருந்ததால் தெருவை நன்றாகப் பார்க்க முடிந்தது. ஆட்களே இல்லாத தெரு. சில நாட்களில் அங்கு தேர்தல் நடக்கவிருந்தது. நண்பரிடம் கேட்டேன்.

‘‘இங்கு தேர்தல் எப்படி நடத்த முடிகிறது?’’

‘‘நீங்க வேற.. அசாம்காரனை ஜெயில்ல போட்டாலும் தப்பிச்சு வந்து ஓட்டுப் போடுவான். உல்ஃபாக்காரன் போடாதே என்று சொன்னால், நீ என்ன சொல்றது என்று ஆள் சேர்த்து ஓட்டுப் போடுவான்.’’

அவர் சொன்னது உண்மைதான். எல்லாத் தேர்தல்களிலும் ஏறத்தாழ 75% ஓட்டுக்கள் 1985-லிருந்து பதிவாகிக்கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 11-ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் 84.72% ஓட்டுக்கள் பதிவாகியிருக்கின்றன. 2011 தேர்தலைவிட சுமார் 10% அதிகம். இந்திய ஜனநாயகத்தின் பல பரிமாணங்களில் இதுவும் ஒன்று.

நடந்து முடிந்த தேர்தலைப் பற்றிப் பேசுவதற்காக நண்பர் சஞ்சய் ஹசாரிகாவுடன் தொடர்புகொண்டேன். அசாமின் புகழ்பெற்ற அறிவுஜீவிகளில் அவரும் ஒருவர். பல புத்தகங்கள் எழுதியவர்.

‘‘இவ்வளவு அதிகமாக ஓட்டுக்கள் விழுந்ததற்குக் காரணம், சிறுபான்மையினர் திரண்டு வந்து ஓட்டுப் போட்டதனால் இருக்கலாம். காங்கிரஸுக்கு நல்ல நேரம் இல்லை.’’

‘‘அப்போ.. பாஜக ஜெயிக்குமா?’’

‘‘சொல்ல முடியாது. பாஜகவோடு ஏஜிபியும் போடோ தேசிய முன்னணியும் சேர்ந்திருக்கின்றன. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தனியாக நிற்கிறது. அதற்கு அதிகம் சீட்டுக்கள் கிடைக்கலாம்.’’

உங்களுக்குத் தலை சுற்றுவதற்கு முன்னால் 2014 நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிச் சொல்ல வேண்டும். பாஜக 7 தொகுதிகளில் 37% வாக்குகள் பெற்று வென்றது. காங்கிரஸ் 30% வாக்குகள் பெற்று 3 தொகுதிகளில் வென்றது. போடோக்கள் அதிகம் இருக்கும் கொக்ராஜார் தொகுதியில் சுயேச்சை ஒருவர் வென்றார். மீதி மூன்று தொகுதிகளில் சிறுபான்மையினரின் கட்சி என்று அறியப்படும் ஜனநாயக முன்னணி மூன்று தொகுதிகளில் 14.8% வாக்குகளைப் பெற்று வென்றது. ஒரு காலத்தில் அசாமின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஏஜிபி என்று அழைக்கப்படும் அசாம் கண பரிஷத் - மாணவர்களால், மாநிலத்தின் பிரச்சினைகளை முன்வைத்து உருவாக்கப்பட்ட கட்சி - ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை.

நடந்து முடிந்த 2016 சட்ட மன்றத் தேர்தலில் பாஜக போடோக்களுடனும், ஏஜிபியுடனும் சேர்ந்து போட்டியிட்டது. காங்கிரஸும் ஜனநாயக முன்னணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன.

‘‘சங்கப் பரிவாரம் முன்னின்று வேலை செய்தது என்று சொல்லப்பட்டாலும், 2014-ல் கிடைத்த ஓட்டுக்கள் மறுபடியும் கிடைக்கும் என்று சொல்வது கடினம். மோடி, ‘நான் அசாம் டீதான் விற்றேன்’ என்று பெருமையாகச் சொன்னார். ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு டீக்கடைகளில் எல்லாம் கலந்த குப்பையைத்தான் கொதிக்க வைத்து டீ என்று விற்கிறார்கள் என்று தெரியும். இது அசாமுக்கே டீ விற்க முயற்சி செய்யும் விவகாரம்.’’

திருநெல்வேலிக்கு அல்வா கொடுக்கும் நமது பெருமையைப் பேசலாமா என்று நினைத்தேன். வேண்டாம்.. அவர் கதையைக் கேட்போம் என்று விட்டுவிட்டேன்.

‘‘ஆனால், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ‘மாதம் இருபதாயிரத்துக்கும் குறைவாகச் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று அறிவிக்கப்படுவார்கள்’ என்று சொல்கிறது. இந்தக் கணக்கில் 99% அசாமியர் வருவார்கள். இத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின்பும் 99% ஏழையாக வைத்திருந்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் கட்சிக்கு யார் ஓட்டுப்போடுவார்கள் என்று நீங்கள் கேட்கலாம். அசாம்காரன் போட்டாலும் போடுவான்.. சொல்ல முடியாது.’’

நண்பர் தொடர்ந்தார்.. ‘‘மக்களை ஏழையாக வைத்திருப் பதிலும் ஒரு நன்மை இருக்கிறது. வங்கதேசத்திலிருந்து இங்கு வர யாரும் தயங்குவார்கள். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? குழந்தை பெறும்போது இங்கு இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு 300 பேர். இந்தியாவிலேயே மிக அதிகமாக இங்குதான் குழந்தைபெறுகையில் இறக்கிறார்கள். வங்கதேசத்தில் இந்த எண்ணிக்கை 176 . அதே போன்று 5 வயதுக்குக் குறைவான குழந்தைகள் அசாமில் 1,000-த்துக்கு 54 என்ற வீதத்தில் இறக்கிறார்கள். வங்கதேசத்தில் இறக்கும் குழந்தைகள் ஆயிரத்துக்கு 32தான்.’’

‘‘நீங்கள் அங்கிருந்து ஆட்கள் வருவதே இல்லை என்று சொல்கிறீர்களா?’’

‘‘இல்லவேயில்லை.. வருகிறவன் கனவோடு வருவான். புள்ளிவிவரங்களைப் பார்த்துவிட்டா வருவான்? பிரச்சினை நிச்சயம் இருக்கிறது. அதை ஊதிப் பெரிதுபடுத்துவது அரசியல்கட்சிகள்தான்.’’

பிரச்சினை 1947-லிருந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றிய புரிதல் வேண்டும் என்றால், அசாமின் வரலாறு பற்றி சிறிதளவாவது பரிச்சயம் இருக்க வேண்டும்.

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: tigerclaw@gmail.com.

(தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்