அரசியல் பழகு: தண்ணீர் விட்டா வளர்த்தார்கள்?

By சமஸ்

டெல்லியிலுள்ள லால் பகதூர் சாஸ்திரியின் நினைவில்லத்தில், ஒரு கண்ணாடிப் பேழைக்குள் விரலளவு கொண்ட சின்ன டம்ளர் ஒன்றை வைத்திருந்தார்கள். உடன் வந்த நினைவில்லக் காப்பாளர் அதன் வரலாற்றைச் சொன்னார். “இது சாஸ்திரியிடம் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற அவருடைய மனைவி லலிதா வாங்கிய டம்ளர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் சாஸ்திரி சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே ஏழ்மையான பின்னணியைக் கொண்ட அவருடைய குடும்பத்தை சாஸ்திரியின் சிறைவாசம் மேலும் வறுமையில் தள்ளியது. சிறையிலிருந்த சாஸ்திரியைப் பார்க்க லலிதா சென்றபோது அவர் கடுமையாக மெலிந்திருந்தார். சாஸ்திரி சிறையிலிருந்தபோது குடும்பச் சுமையை ஏற்றிருந்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தார் லலிதா. தன் உடல்நலத்தை அவர் எப்போதுமே பொருட்படுத்த மாட்டார் என்பதால், ‘எனக்காக தினமும் ஒரு டம்ளர் பால் மட்டுமாவது நீ சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று லலிதாவிடம் உறுதிகேட்டார் சாஸ்திரி. லலிதா உறுதிகொடுத்தார். தினமும் அப்படிப் பால் குடிக்கும் அளவுக்கு வீட்டின் நிதி நிலைமை இல்லை. அதேசமயம், கணவருக்குக் கொடுத்த உறுதியையும் மீறக் கூடாது என்று நினைத்தவர் குழந்தைகள் விளையாட்டுக்குப் பயன்படுத்தும் விரலளவு டம்ளரை வாங்கினார். வீட்டுக்குப் பிள்ளைகளுக்கு டீ போட வாங்கும் கொஞ்சம் பாலில், தன் பங்கை இதில் நிரப்பிக் குடித்தார். அந்த டம்ளரே இது!”

இதை அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, என் கூட நின்று இதைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு பெண் அப்படியே அந்த இடத்தில் மண்டியிட்டு வணங்கினார். அந்தக் கண்ணாடிப் பேழையைத் தொட்டு வணங்கியபோது, அவர் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

நெடுங்காலமாக நிலப்பிரபுத்துவ ஆட்சியின் கீழ் இருந்த இந்த தேசத்தின் மக்கள் ஜனநாயகத்தைச் சுவீகரித்துக்கொண்ட வேகமும் அதற்கு அளித்த உத்வேகமூட்டும் தியாகங்களும் இன்றளவும் உலகின் அரசியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்துவது. இந்தியச் சுதந்திரப் போராட்டமே இந்திய மக்களுக்கு அதற்கான அரசியல் கல்வியை அளித்த மிகப் பெரிய களம். தேசிய ஒற்றுமை, பழமைவாதத் தளைகளிலிருந்து விடுதலை, அறியாமை - வறுமைக்கு எதிரான உரத்த குரல், வர்க்கப் போராட்டம், கடைக்கோடி மனிதருக்குமான அதிகாரம், சுயமரியாதை, சமூக நீதி, பாலின சமத்துவம் இப்படி நாம் இன்றைக்குக் கேட்கும் ஜனநாயகத்தின் பன்மைக் குரல்கள் பலவும் ஏகக் காலத்தில் எழுச்சியும் உந்துதலும் பெற்ற களம் நம்முடைய சுதந்திரப் போராட்டக் களம். பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, ராஜாஜி, முகமது அலி ஜின்னா, பெரியார், ஜவாஹர்லால் நேரு, அம்பேத்கர், ஜெயப்ரகாஷ் நாராயண், பி.சி.ஜோஷி, ராம் மனோகர் லோஹியா இப்படி இன்றைக்கு நினைவுகூரப்படும் பல்வேறு போக்குகளைக் கொண்ட ஆளுமைகளையும் சுதந்திரப் போராட்டக் களமே வெளியே கொண்டுவந்தது. இவர்கள் யாவரும் கூடிக் கொடுத்த கொடையே நம்முடைய இன்றைய ஜனநாயகம்.

காந்தியின் பங்கேற்புக்கு நெடுங்காலம் முன்பே நம்முடைய சுதந்திரப் போராட்டம் தொடங்கிவிட்டது என்றாலும், காந்தியே அதை எழுச்சியான மக்கள் இயக்கமாக உருவாக்கினார். தன் அரசியல் குருவாக காந்தி வரித்துக்கொண்ட கோகலே, காந்தியின் இந்திய வருகைக்குப் பல ஆண்டுகள் முன்னரே இவ்வாறு எழுதினார்: “வருங்கால இந்தியா இந்து இந்தியாவாகவோ முஹம்மதிய இந்தியாவாகவோ இருக்காது. இந்துக்கள், முஸ்லிம்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள் - ஏன் இந்தியாவைத் தம் தாய்நாடாக ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர்கள் என அனைத்து மக்கள் அடங்கிய ஒரு நாடாக அது இருக்க வேண்டும்.” இதைச் செயலாக்கிக் காட்டியவர் காந்தி. உலகின் மூன்று வெவ்வேறு புவிசார் அரசியல் பின்னணியைக் கொண்ட கண்டங்களிலும் வாழ்ந்த அனுபவம் கொண்ட காந்தி, தான் உள்வாங்கிக்கொண்ட மேற்கத்திய நவீனச் சிந்தனைகளை இந்தியாவின் தொன்மையான சிந்தனை மரபோடு இணைத்தார். பிராந்தியரீதியாக, மதரீதியாக, மொழிரீதியாக, இனரீதியாக இயங்கிய இந்நாட்டின் மக்கள் ஒரு பொது இலக்கின் கீழ் அணி திரண்டது வரலாற்றில் அதுவே முதல் முறை. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சம்ஸ்கிருதக் கல்லூரியில், 1885 டிசம்பர் 28 அன்று 72 பேருடன் கூடிய அகில இந்திய காங்கிரஸின் முதல் மாநாட்டுப் புகைப்படம் காந்திக்கு முந்தைய காங்கிரஸின் வரலாற்று முகத்தை ஒரு நொடியில் சொல்லிவிடக் கூடியது. பிரிட்டிஷ் இந்தியாவின் படித்த, உயர்குடி இந்திய வர்க்கத்தின் அதிகாரக் கனவுக்கான மேடை அது. ரொம்பக் காலம் அது அப்படித்தான் இருந்தது. காந்தியின் வருகைக்குப் பின்னரே, இந்நாட்டு எளிய மக்களை அரசியல்மயப்படுத்தி, உலகின் மாபெரும் ஜனநாயக இயக்கமாக அது உருவெடுத்தது.

ஒரு தனிமனிதனின் எழுச்சியை ஒரு மக்கள் இயக்கத்தின் எழுச்சியோடு இணைத்துப் பொருத்த நீண்ட பயிற்சி தேவை. இந்தப் பயிற்சிக்கான களமாக அன்றைக்கு காங்கிரஸை காந்தி மாற்றியிருந்தார். காந்தி செய்த மகத்தான சாதனைகளுள் ஒன்று தன்னைப் பின்னிழுத்துக்கொண்டு சரியானவர்களை முன்னால் கொண்டுவந்தது. ஒரே ஒரு ஆண்டு மட்டுமே அவர் காங்கிரஸின் தலைவராக இருந்தார் (1924). கட்சியில் முதன்முதலில், ஆங்கில ஆதிக்கத்தையும் மத்திய ஆதிக்கத்தையும் ஒழித்து மாநிலங்களில் அவரவர் மொழி வழியே கட்சியைக் கட்டியமைத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் செல்வாக்குள்ளவர்களைத் தளபதிகளாக்கினார். ஒவ்வொருவருடைய ஆளுமையும் அவரவர் விருப்பங்களுடன் கைகோத்துப் பணிபுரிய வழிவகுத்தார். எல்லாவற்றுக்கும் மேல் என்றென்றைக்கும் மக்களோடு ஒருவராக, யாரும் அணுகக்கூடியவராகவும் வெளிப்படையான கருத்துகளுக்குச் செவிசாய்ப்பவராகவும் இருந்தார். 1930-களில் எழுதிய தன்னுடைய சுயசரிதையில் நேரு குறிப்பிடும் வாசகங்கள் காந்தியின் அணுகுமுறையை மிகச் சுருக்கமாகச் சொல்லிவிடக் கூடியது. “என்றைக்கு நான் காந்திஜியின் அரசியல் தொடர்பைப் பெற்றேனோ, அன்றைக்கே அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்: ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் என்னுடைய கருத்துகளை அடக்கிக்கொள்ளக் கூடாது.”

இந்த அணுகுமுறையே ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்கும் ஒரு சுதந்திர இயக்கம் முகங்கொடுக்க வேண்டிய வெவ்வேறு களங்களுக்கு காந்தியை அழைத்துச் சென்றது. சமூகப் பொருளாதார விடுதலை சாத்தியமில்லாமல் தேசிய விடுதலை அர்த்தப்படாது என்பதை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். சுதந்திரப் போராட்டம் உச்சம் தொட்ட வெவ்வேறு காலகட்டங்களில்கூட கிராமியப் பொருளாதார இயக்கம், மது ஒழிப்பு இயக்கம், பெண் விடுதலை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு இயக்கம் என்று பல்வேறு சமூக இயக்கங்களைத் தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருந்தார். எல்லாத் தரப்புகளுடனும் அவர் பேசிக்கொண்டிருந்தார். இன்றைய நரேந்திர மோடி அரசு ‘பாரத ரத்னா’ விருது அளிக்கும் மதன் மோகன் மாளவியாதான் பூனா ஒப்பந்தத்தில் இந்துக்களின் தரப்பில் நின்று அம்பேத்கரோடு பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்துப் போட காந்தியால் அனுப்பப்பட்டவர் எனும் ஒரு நகர்வு காந்தியின் ஜனநாயகத்தன்மையையும் ராஜதந்திரத்தையும் நுட்பமாகக் கூறிவிடக் கூடியது.

உலக வரலாற்றில், ஒரு நாட்டின் விடுதலைக்குத் தலைமை தாங்கிவிட்டு, சுதந்திரத்தோடு அதிகாரமும் உடன் வரும்போது அதை உதறித் தள்ளி, மீண்டும் அடுத்த போராட்டக் களம் நோக்கிச் சென்ற மிக அரிதான வரலாறு காந்தியினுடையது. இந்தியச் சுதந்திரப் போராட்டம் மூன்று புரட்சிகளை நிகழ்த்தியது: 1.சுதந்திரம், 2.மக்களாட்சியுடனான அனைவருக்கும் வாக்குரிமை, 3.ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு!

(பழகுவோம்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்