அரசியல் பழகு: தேனெடுப்பவருக்கு வாய் இல்லையா?

By சமஸ்

நம்மூரில் அரசியல்வாதிகள் மீதான வெறுப்பு மேலோங்கும் போது வெளிப்படும் பேச்சுகளில் ஒன்று, “பேசாம ராணுவத்துக்கிட்டயோ, அதிகாரிங்ககிட்டயோ ஆட்சியை ஒப்படைச்சிறலாம். இவய்ங்க தேவையே இல்ல.” அதிகாரிகளே இதைக் கேட்டால், நகைப்பார்கள். நாளைக்குப் புதிதாக ஆட்சி அதிகாரத்துக்குள் நுழையும் ஒரு அரசியல்வாதிக்கு, அந்தக் கோட்டைக்குள் இருக்கும் சர்வ ஓட்டைகளையும் சொல்லிக்கொடுப்பதே அவர்கள்தானே!

நேற்று காலை ஒப்பந்ததாரர் ஒருவருடன் ‘நடப்பு நிலவரம்’ பேசிக்கொண்டிருந்தேன். “அண்ணே, நம்ம வார்டுல ஒரு கக்கூஸ் கட்டுறோம்னு வெச்சிக்கிங்க. அதுக்கான தோராயமான கமிஷன் இப்படிப் போகும். கவுன்சிலருக்கு 2%, இளநிலைப் பொறியாளருக்கு 2%, உதவிப் பொறியாளருக்கு 2%, செயற்பொறியாளருக்கு 2%, கோட்டப் பொறியாளருக்கு 2%, அலுவலகத்துல வேலை பார்க்குறவங்களுக்குச் செய்ய வேண்டிய நடைமுறைகள் 3%. இதுல அதிகாரிங்க தரப்புலேர்ந்து ஒரு கணிசமான பங்கு மேலிடத்துக்கு மொத்தமா போயிடும். எப்படிப் பார்த்தாலும், மூணுல ரெண்டு பங்கு அதிகாரிங்க கணக்காயிடும்.”

இந்தியாவுக்கு ஜனநாயகம் புதிது. ஊழல் அப்படி அல்ல. பிரிட்டிஷார் நூறாண்டுக்கும் மேல் அதை இங்கே பயிற்றுவித்திருக்கிறார்கள். உச்சி முதல் அடி வரை சிந்தாமல் சிதறாமல் லஞ்சப் பணம் போய்ச் சேருவதற்கு மிகக் கச்சிதமான நரம்புகளை இங்கே அதிகார வர்க்கம் வைத்திருக்கிறது. மக்கள் பணத்தில் கணிசமான பங்கு அரசியல்வாதிகளுக்குச் செல்வது நமக்குத் தெரியும். வாங்குமிடத்தில் இருப்பவர்கள் யார்? அரசியல்வாதிகள் வாங்கும் பணத்திலேனும் அதன் குறிப்பிட்ட பகுதி ஏதோ ஒரு விதத்தில் மீண்டும் மக்களிடத்தில் இறங்குகிறது. அதிகாரிகள் கொள்ளைப் பணம் முழுக்க அவர்களுக்கே உரித்தானது.

ஒரு மேயர், பதவிக் காலத்தில் பணத்தைச் சுருட்டுவதையே இலக்காகக் கொண்டு, மக்களிடமிருந்து விலகி நின்று மீண்டும் பதவிக்கு வர இயலாது. அதேசமயம், ஒரு மாநகராட்சி ஆணையரால் இதைச் செய்ய முடியும். உண்மையில், ஒரு அரசியல்வாதியால் இங்கு நேர்மையாக இருந்துவிட முடியும்; அதிகாரிகளுக்கு அது அத்தனை எளிதல்ல. “நீ கீழே காசு வாங்காட்டின்னா என்ன? எனக்கு வேணும். அந்தக் காசை உன் சொந்தக் காசுலேர்ந்து கொடு” என்ற மிரட்டல் வரும்போதுதான் முத்துக்குமாரசாமிகள் தற்கொலையை நோக்கி நகர்கிறார்கள். சகாயம் போன்ற ஒரு அதிகாரி இன்றைக்கு நேர்மையாக நிற்பது கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளத்தின் மத்தியில் இடையறாது எதிர்நீச்சல் போடுவதற்குச் சமம். கணம் கண்ணயர்ந்தால், வெள்ளம் மூழ்கடித்துவிடும்.

ஒரு ஆச்சரியம் என்னவென்றால், ஊழலை முன்வைத்து அரசியல் துறையே முற்றிலுமாக நிராகரிக்கப்படும் இந்நாட்டில்தான், உத்தரப் பிரதேச அரசு 368 பியூன் பணியிடங்களுக்கு ஆளெடுப்பு அறிவிப்பை வெளியிடும்போது, பொறியியல் பட்டதாரிகள் உட்பட 23 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். ஊழல் மீதான வெறுப்பே அரசியல் ஒவ்வாமைக்குக் காரணம் என்றால், நம் நாட்டில் அரசு வேலைகளுக்கு ஏன் இவ்வளவு மவுசு? நாம் சாமர்த்தியர்கள். இரட்டை வேடதாரிகள்!

நம் நாட்டில் எப்போதெல்லாம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் ஊடகங்கள் அதைப் பற்றி எதிர்மறையாகச் செய்திகள் வெளியிடுவதும் பொதுத்தளத்தில் கூச்சல்கள் கேட்பதும் சகஜம். உண்மையில், நம்முடைய மக்கள் பிரதிநிதிகளை இழிவான நிலையிலேயே நாம் வைத்திருக்கிறோம். பிரதமர் மோடி வாங்கும் ரூ.1.6 லட்சம் ஊதியம், எங்கள் தெருமுக்கில் மளிகைக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சியின் வருமானத்தைவிடவும் குறைவு.

இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு ஊதியம் என்ற ஒன்றே கிடையாது அல்லது மிகச் சொற்பமான தொகையை அளித்து அவர்களைக் கேவலப்படுத்துகிறோம். ரூ.5,123 கோடிக்கு பட்ஜெட் போடும் சென்னை மாநகராட்சி, தன்னுடைய மாமன்ற உறுப்பினர்களுக்கு எந்தச் சம்பளமும் அளிக்கவில்லை. ஒரு கூட்டத்தில் பங்கேற்க அவர்களுக்கு அளிக்கப்படும் தொகை ரூ.800. போக்குவரத்துப் படியாக அளிக்கப்படும் ரூ.50-ஐ வைத்துக்கொண்டு ஆட்டோவில்கூட அவர்கள் வந்திறங்க முடியாது. மின்சாரம் தடைப்பட்டால்கூட நகர்மன்ற உறுப்பினர்களை அழைப்பவர்கள் நம்மூரில் உண்டு. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், ஒரு நகர்மன்ற உறுப்பினரின் வட்டத்துக்கு உட்பட்டு மட்டும் பல கோடிகளில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஊழல் தொடர்பாகப் பேசும்போது நம் கிராமங்களில் புழங்கும் ‘தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பான்?’ சொலவடை ஞாபகத்துக்கு வருகிறது. கூர்ந்து யோசித்தால், கள யதார்த்தத்தை நோக்கி நாம் நிறைய நகர வேண்டி இருப்பதை உணர்த்தும் ஒரு சொல்லாடல் அது.

இந்தியா போன்ற ஒரு நாட்டில், சமூக, பொருளாதார நிலைகளில் கீழிருக்கும் சமூகங்கள் அதிகாரத்தை நோக்கி வரும்போது எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் பொருளாதாரம். நேர்மைக்கும் எளிமைக்கும் பேர் போன முன்னாள் அமைச்சர் கக்கன் வாழ்வின் கடைசியில், அரசு ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்தார்; ஒரு பஸ் பாஸ் அரசு சார்பில் தரப்படும் நிலையில் இருந்தார் எனும் செய்திகள் எல்லாம் நமக்கு உணர்த்துவது என்ன? பொதுப் பணிக்கு வரக் கூடிய ஒரு மனிதர், அரசியலைத் தேர்ந்தெடுப்பதாலேயே தன் மனைவி, பிள்ளைகளை வீதியில் விடும் சூழலை எதிர்கொள்ள வேண்டும் என்பது என்ன நியாயம்?

எந்த ஒரு அமைப்பிலும் கொள்கை வகுப்பாளர்களே எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள்; அவர்கள் போற்றப்பட வேண்டிய இடத்திலிருப்பது அவசியம். நம் பிரதிநிதிகளுக்குக் கண்ணியமான ஒரு நிரந்தர வருவாய் - ஊதியம், ஓய்வூதியம் - வழங்குவது அத்தியாவசியம்.

சத்தியமங்கலம் வனத்துக்குச் சென்றிருந்தபோது, மக்கள் அணுகுவதற்கு எளிதாக மலை மேலேயே ஓரிடத்தில் அலுவலகம் அமைத்து ஆட்களை நியமித்திருந்தார் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தரம். அரசு ஊழியர்களின் சேவையைப் போலவே இப்படியான கட்சி ஊழியர்களின் சேவையும் மக்களுக்குத் தேவைப்படுகிறது. அப்படியென்றால், அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது யார்? தேனை எடுப்பவருக்கும் வாய் இருக்கிறது, வயிறு இருக்கிறது, குடும்பம் இருக்கிறது; அவருக்கான கூலியாக ஒரு போத்தல் தேனைக் கொடுத்துவிட்டு, “நீ ஏன் புறங்கையை நக்குகிறாய்?” என்று நாம் கேள்வி கேட்கலாம். அமைப்பில் உள்ள கோளாறுகளைச் சீரமைக்காமல் வெறுமனே ஊழல் எதிர்ப்பு வசனங்கள் பேசுவதிலேயோ, ஒட்டுமொத்த அமைப்பையுமே குறைகூறுவதிலேயோ அர்த்தம் இல்லை.

நாம் கவனிக்க வேண்டிய உதாரணம் சிங்கப்பூர். உலகிலேயே ஊழல் குறைவானதாகக் கருதப்படும் நாடு அது. உலகிலேயே மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிக சம்பளம் வழங்கும் நாடும் அது. இந்தியாவில் ஒப்பீட்டளவில், ஊழல் எதிர்ப்பில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னணியில் நிற்கின்றன என்றால், கட்சி ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச அளவிலேனும் ஊதியம் அளிப்பதை அவை முறையாகக் கொண்டிருப்பதும் ஒரு முக்கியமான காரணம். இவற்றுக்கு இணையாக நாம் கவனம் அளிக்க வேண்டிய இன்னொரு விஷயம், சிக்கனத்துடன் கூடிய எளிமையான அணுகுமுறை.

கடைசிக் காலம் வரை காந்தி ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டிகளிலேயே நாடெங்கும் பயணித்தார். முக்கியமானவர்களுக்குக் கடிதம் எழுதக்கூட ஏற்கெனவே ஒரு பக்கம் பயன்படுத்தப்பட்ட காகிதங்களின் பின்பக்கத்தைப் பயன்படுத்தினார். தன்னுடைய 60-வது வயதில் உப்பு சத்தியாகிரகத்துக்காக மேற்கொண்ட யாத்திரையைக்கூட ரத யாத்திரையாக அல்ல; நடை யாத்திரையாகவே திட்டமிட்டார். கோடையில் 400 கி.மீ. நடந்தார். தலைவர் இப்படி நடந்ததாலேயே கட்சி கொடுத்த ஒரு அணா காசை வாங்கிக்கொண்டு காடுகளிலும் மலைகளிலும் ஏறிக் கட்சிப் பணியாற்றினார்கள் காங்கிரஸ்காரர்கள்.

இப்படியெல்லாம் எளிமையாக இருந்த தலைவர்களே அன்றைக்கு மக்களாலும் கொண்டாடப்பட்டார்கள். இன்றைக்கு நம் வீடுகளிலேயே மதிப்பிழந்துகொண்டிருக்கும் ஒரு வார்த்தை எளிமை. ஹெலிகாப்டர்களில் பறப்பவர்களே ஆள முடியும்; ஆட்டோவில் போய் வரும் தலைவர்கள் அவரவர் தொகுதியில் நின்று ஜெயிப்பதே உத்தரவாதம் இல்லை என்றால், பிரச்சினை ஒரு தரப்பினுடையது மட்டும் அல்ல. ஜனநாயகத்தை நாம் உள்வாங்கிக்கொள்ளும் முறையிலேயே கோளாறு இருக்கிறது!

(பழகுவோம்…)

- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்