1984-க்குப் பிறகு, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியில் ஆளுங்கட்சியே அமர்கிறது. ஆறு முனைப் போட்டி, திமுகவின் கடுமையான போராட்டம் எல்லாவற்றையும் தாண்டி இந்த வெற்றிக்கனியைப் பறித்திருக்கிறார் ஜெயலலிதா.
திமுக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் தேர்தலுக்கு முன்னதாகத் தாங்கள் செய்த முயற்சிகளையும் அமைத்த கூட்டணியையும் வகுத்த வியூகத்தையும் தயாரித்த தேர்தல் அறிக்கைகளையும் நினைவுகூர்ந்தும் மறுவாசிப்பு செய்தும் பார்த்தால் தவறு எங்கே என்று புரியும்.
வானவில் கூட்டணி
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், எல்லா மாநிலங்களிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக வானவில் கூட்டணி வியூகம் பரவிவந்த நிலையில், தமிழகத்தில் அப்படி ஒரு கூட்டணி அமையாத சூழலை உருவாக்கியதாலேயே வெற்றியை நோக்கிய அவருடைய முதல் நகர்வு தொடங்கிவிட்டது. தன்னுடைய பிரச்சாரங்களில் திமுக நீங்கலாக ஏனைய கட்சிகளைப் புறந்தள்ளியதால், அவை அதிமுக மீது கடும் விமர்சனங்கள் முன்வைப்பதைத் தவிர்க்கவும் அவற்றின் பாய்ச்சல் திமுகவை நோக்கி அமையவும் வழிவகுத்தார்.
எளியவர்களும் புதியவர்களும்
பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஜெயலலிதா முன்னதாகவே தொடங்கினார். கடந்த தேர்தலில் விஜயகாந்தைச் சேர்த்துக்கொண்டதால் வெற்றி கிடைத்தாலும், அதற்கு அவர் உரிமை கொண்டாடியதை மறக்கவே இல்லை. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பெற்ற வெற்றி அவருடைய தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது. வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை இரண்டிலும் தனிப்பட்ட முறையில் தன்னுடைய பங்களிப்பைச் செய்தார். கூட்டணி அமைக்கும்போது, ஓரளவுக்கு மேல் தொகுதிகளைக் கேட்ட வேல்முருகன் முதல் வாசன் வரை எவரையும் இழக்க அவர் தயாராக இருந்தார். அதேபோல, கூட்டணிக்குள் வந்த சிறு கட்சிகள் - ஒருவேளை தொங்கு சட்டசபை போன்ற சூழல் ஏற்பட்டால் - குதிரைப் பேரம் நடத்தாமல் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கவும், தோற்றுவிடாமல் இருக்கவும் அதிமுக சின்னத்திலேயே அவர்களைப் போட்டியிடவைத்தார். (திமுக அணியின் கணிசமான தோல்விகள், அது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் நடந்திருப்பதை ஒப்பிடும்போது ஜெயலலிதா கூட்டணி விஷயத்திலும், வேட்பாளர்கள் மாற்றத்திலும் காட்டிய பிடிமானத்தைப் புரிந்துகொள்ள முடியும்). ஜெயலலிதாவின் வேட்பாளர் பட்டியல் நாம் கவனிக்கத்தக்க ஒன்று. ஒரு இடத்தில்கூடத் தோற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, பல முறை பட்டியலை மாற்றி அமைத்தார். கூட்டணி அமைக்கும்போது, கூடுதலாக புதியவர்களுக்கும் குறிப்பாக எளியவர்களுக்கும்கூடப் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.
பிரச்சாரக் களத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் எவற்றையெல்லாம் பெரும் பலங்களாகக் கருதினவோ, அவை எல்லாவற்றையும் தன்னுடைய தேர்தல் அறிக்கைக்குள் கொண்டுவந்தார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற வழக்கமான வாக்குறுதிகளோடு அனைவருக்கும் செல்போன், மகளிர் ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் என்று அறிவித்தார். அத்துடன் அந்தந்தத் துறையினருக்குப் பல சலுகைகளை அறிவித்தார். முக்கியமாக, மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்துவோம் என்று காரிய சாத்தியமான முறையில் அறிவித்து, குடிப்பவர்கள் - குடியை வெறுப்பவர்கள் என்று இருதரப்பினரையும் தனக்கு வாக்களிக்கச் செய்துவிட்டார்.
இரு துருவ அரசியல்
இந்த வெற்றியினூடாக மேலும் சில காரியங்களைச் சாதித்திருக்கிறார் ஜெயலலிதா. தமிழகத்தின் இரு துருவ அரசியலை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஒருவகையில், திராவிட அரசியல் அவ்வளவு சீக்கிரம் வெல்லப்படக் கூடியது அல்ல என்று உறுதிப்படுத்தியிருக்கிறார். “உங்களுக்கு இனிமேல் எல்லாமே வீழ்ச்சிதான்” என்று கூறிய விஜயகாந்தை அவருடைய சொந்தத் தொகுதியிலேயே தன் கட்சிக்காரர் மூலம் வீழ்த்தியதன் வாயிலாகத் தான் சொன்னதைச் சாதித்திருக்கிறார். திமுக மீண்டும் தன் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கும் எதிர்க்கட்சி யாக உயிரோட்டமாகச் செயல்படுவதற்குமான நிர்ப்பந்தத்தையும் உருவாக்கியிருக்கிறார்.
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago