‘எட்டு மணி நேர வேலை நாள்’ என முழக்கமிட்டுப் போராடியதற்காக, அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1887 நவம்பர் 11-ம் தேதி ஆல்பர்ட் பார்சன்ஸ், ஜார்ஜ் எங்கல், அடால்ப் பிஸ்ஸர் ஆகியோரோடு தூக்கிலிடப்படுவதற்கு முன் ‘‘எங்களது வார்த்தைகளைவிட எங்களது மெளனம் அதிகமாகப் பேசும் காலம் கண்டிப்பாக வரும்’’ என ஆகஸ்ட் ஸ்பைஸ் உறுதிபடத் தெரிவித்தார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான நாட்டின் முதல் மே தினத்தை ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் 1923-ல் கடைப்பிடித்தார். தொழிலாளர்களின் மெளன சக்தியை இந்தியா அன்றைக்குக் காணத் தொடங்கியது.
நூறாண்டுக்கு முன்பு சிங்காரவேலர் எழுப்பிய அந்த உரிமை முழக்கம், நாடு முழுவதும் சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு எழுச்சி ஊட்டுவதாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக, 1924-ல் கயையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், தொழிலாளர் உரிமைகள் குறித்த தீர்மானமும் முன்மொழியப்பட்டது.
மே தின வரலாறு
வரலாற்று வளர்ச்சியின் நியதிகளுக்கு ஏற்ப 150 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கொள்ளத் தொடங்கிய முதலாளித்துவ சமூக அமைப்பு, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வளரத் தொடங்கியது. முதலாளித்துவ சமூக அமைப்பு இயற்கையாகவே ஒடுக்குமுறையைத் தன்னகத்தே கொண்டுள்ளதையும், இதற்கு மாற்றாகப் பொதுவுடைமைச் சமூகத்தை வளர்த்தெடுப்பதற்கான அவசியத்தையும், அதைச் சாத்தியப்படுத்தக் கூடிய தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள், முழக்கங்களை முன்வைத்து கார்ல் மார்க்ஸ் பேசத் தொடங்கினார்.
‘‘வேலை நேரத்தின் அளவு சட்டபூர்வமாக வரையறுக்கப்பட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் மேம்பாடு, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இது ஓர் அடிப்படையான முன்நிபந்தனை. வேலை நேரம் நிர்ணயிக்கப்படாவிட்டால், தொழிலாளி வர்க்கத்துக்கு முன்னேற்றம் சாத்தியம் இல்லை’’ என்பதையும் கார்ல் மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, கனடா நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் அமைப்புகள் 1884-ல் ‘எட்டு மணி நேரமே சட்டபூர்வமான வேலை நாள்’ என்கிற கோரிக்கையை முன்வைத்து, மே முதல் நாளன்று வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்திருந்தன.
எட்டு மணி நேர வேலை இயக்கமானது, அமெரிக்கத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் 1886 மே மாதம் ஒரு புரட்சிகர அத்தியாயத்தை உருவாக்கியது. மே 3-ம் நாள் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களின் மீது காவல் துறை காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவியது. ஆறு தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். காவல் துறையின் அடக்குமுறையைக் கண்டித்து, மே 4-ல் ‘வைக்கோல் சந்தை சதுக்கம்’ என்றழைக்கப்படும் இடத்தில் தொழிலாளர்களின் எழுச்சிகரமான போராட்டம் நடந்தது. இந்த அமைதிப் போராட்டத்தில், காவல் துறை வன்முறையை ஏவியது. பலருடைய உயிர்கள் பறிபோயின. ரத்த ஆறு ஓடியது. தொழிலாளர் தலைவர்கள் நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
இந்தப் பின்னணியில் உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களின் உரிமைக்கு வித்திடும் வகையில், மே தினத்தைக் கடைப்பிடிக்க ஏங்கெல்ஸ் தலைமையிலான சர்வதேச அமைப்பு அறைகூவல் விடுத்தது. உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமையான எட்டு மணி நேர வேலை முழக்கத்திற்காக உலகமெங்கும் நடைபெற்ற போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் களமாடினர். ரஷ்யாவில் மே தினப் போராட்டங்கள் உலகின் முதல் சோஷலிச அரசு 1917-ல் உருவாவதற்கான அடித்தளத்தை உருவாக்கப் பயன்பட்டன.
இந்தியாவில் மே தினம்
‘‘உலகத்திற்குத் தொழிலாளர் எவ்வளவு அவசியம் என்பதைத் தொழிலாளர்களே இன்னும் உணரவில்லை. உலகத்தாருக்கு வேண்டிய பொருள்களையெல்லாம், தொழிலாளர்களே உற்பத்திசெய்கின்றனர். நெல்லாக இருந்தாலும், நீராவிக் கப்பலாக இருந்தாலும் தொழிலாளர்களின் உழைப்பினாலேயே கிடைக்கிறது. ஆனால், அந்தத் தொழிலாளி உயிர் வாழ்வதற்கான உணவு, உடை, வீடு பற்றாக்குறையாக உள்ளது. இது திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்ப்பதும் தீர்வு காண்பதும் அவசியம். அதற்காகத் தொழிலாளர்கள் சங்கமாக ஒன்றுசேர்வதும் போராடுவதும் தேவையாக உள்ளது’’ என்பது சிங்காரவேலரின் சிந்தனை.
தொழிலாளர் உரிமை குறித்து கம்யூனிஸ்ட்டுகள் எழுப்பிய முழக்கங்கள் மூலம், தொழிலாளர்களை அமைப்புரீதியாக அணிதிரட்டியது இந்திய விடுதலைப் போரில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவுகளில் ஒன்றாக 1942 நவம்பர் 27-ல் நடைபெற்ற ஏழாவது இந்தியத் தொழிலாளர் மாநாட்டில், ‘வேலை நாள் என்பது எட்டு மணி நேரம்’ என பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் தொழிலாளர் துறை அமைச்சராகச் செயல்பட்ட அம்பேத்கர் அறிவித்தார்.
விடுதலை அடைந்த இந்தியா, தொடக்கக் காலகட்டங்களில் சில முற்போக்கான செயல்திட்டங்களை முன்னெடுத்தது. அதன் பிரதிபலிப்பு கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழிலாளர் நலன் எனப் பல தளங்களில் வெளிப்படத் தொடங்கியது. ஆனால், இத்தகைய செயல்பாடுகள் நிலைத்து நிற்கவில்லை. ஒருகட்டத்தில், அரசு கடைப்பிடிக்கத் தொடங்கிய பொருளாதாரக் கொள்கைகள் ஏழைக்கும் பணக்காரருக்குமான இடைவெளியைப் பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா கடைப்பிடித்துவரும் நவதாராளவாதக் கொள்கை ஏழ்மையைப் பல மடங்கு பெருக்கியிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த சொத்தில் 57% வெறும் 10 நபர்கள் கையில் குவிந்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பெரும்பாலான மக்கள் வேலையிழந்து, வருமானமிழந்து வதைபட்டுக் கொண்டிருந்த காலத்தில், இந்தியப் பெருமுதலாளிகளில் சிலர் மட்டும் லாபம் குவித்து உலகப் பணக்காரர்கள் வரிசையில் முன்னேறியிருக்கிறார்கள்.
இன்றைய அவல நிலை
உலகிலேயே அதிகத் தொழிலாளர்களைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் 50 லட்சம் தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர். அவர்களில் 94% பேர் அமைப்புசாராத் தொழில்களில் வேலை செய்கிறார்கள். 8 மணி நேரம் வேலை உள்ளிட்ட எந்த உரிமையையும் இவர்கள் அனுபவிப்பதில்லை. அதேபோல் ஒப்பந்தத் தொழிலாளர் முறையும் மற்றொருபுறம் அதிகரித்துவருகிறது.
அமேசான், ஓலா, ஊபர், ப்ளிப்கார்ட், ஸொமாட்டோ, ஸ்விக்கி போன்ற செயலி நிறுவனங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தத் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான தொழிலாளர் உரிமையோ தொழிற்சங்க உரிமையோ கிடைப்பதில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்குத்தான் 8 மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கின்றன. அவையும்கூடப் புதிய பொருளாதாரக் கொள்கை, தாராளமயமாதல், உலகமயமாதல் ஆகியவற்றின் பெயரில் மீண்டும் பறித்துக்கொள்ளப்படும் அபாயங்கள் உருவாகின்றன.
இத்தகைய சூழலில், 1886-ல் சிகாகோ நகரில் எட்டு மணி நேர வேலைக்காகத் தொழிலாளர்கள் சிந்திய ரத்தமும் இந்தியாவில் நூறாண்டுக்கு முன்பு சிங்காரவேலரால் முன்மொழியப்பட்ட மே தின முழக்கமும் இன்றைய உழைக்கும் மக்களால் உள்வாங்கப்பட்டு, தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
- ஜி.செல்வா, தொடர்புக்கு: selvacpim@gmail.com
(மே 1: சிங்காரவேலர் மே தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கியதன் நூற்றாண்டுத் தொடக்கம்)
To Read this in English: A clarion call: It’s time Indian workers resume fighting
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago