‘உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய்’ என்று உலகு தழுவிய பார்வை கொண்ட பாவேந்தர் பாரதிதாசன், யாவருக்குமான கவிதைகளைப் படைத்தவர். தமிழ், தமிழர், திராவிடம், தேசியம், உலகப் பொதுமை என்பதாக அமைந்த அவர் கவிதைகளில் மானுடத்தின் மகத்துவமே ஒளிபெற்றுத் திகழ்கிறது.
வடமொழியை, இந்தியை, ஆரியத்தை எதிர்த்துப் பாடப்பட்ட அவரின் கவிதைகளைக் கொண்டே அவரது கவிதை எல்லை குறுக்கப்பட்டுவிட்டது. பேராசிரியர் தமிழவன் குறிப்பிடுவதைப் போல் பாரதிதாசன் தன் கவித் திறத்தால், அழகியலால், தமிழ் மரபின் வேரில் கிளைவிட்டு நிற்கும் தன்மையால், உலகக் கவிஞராகக் கருதப்பட வேண்டியவர்; ஆனால், நமது தமிழ் ஆய்வுக் களங்கள் பாரதிதாசனை வேறு புதிய தளங்களில் காணும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. இக்கூற்றின் அடிப்படையில் காண்கையில், பாரதிதாசனின் கவிதைப் பரப்பைத் தமிழ், திராவிடம், சுயமரியாதைச் சிந்தனைகள் என்று சுருக்கிக் காணும் தன்மையே நம்மிடம் நிறைந்திருப்பதை உணரலாம்.
பாரதிதாசன் அழகியல் நாட்டம் கொண்டவர். சங்க மரபின் வடிவான அகம் - புறம் என்ற கட்டமைப்பில், திணைப் பண்பில் தம் கவிதைகளைப் புது வடிவம் பெறச் செய்தவர். ‘உன்கதிர், இருட்பலாவை உரித்து ஒளிச்சுளை யூட்டிற்றே’ என்று பாடிய ‘அழகின் சிரிப்’பே அதற்குச் சான்று. அவரது குறுங்காவியங்கள் யாவற்றிலும் தமிழை உயிராக, உயிர் வளர்க்கும் அமுதாக, அந்த உயிரே தானாக நின்றவர்.
ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை முழக்கத்தைக் காதல் கவிதைகளிலும் பாடியவர். ‘கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம், கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ’ என்று பாடும்போது, அவரது புலனுட்பமும் யாவற்றிலும் தேடுகின்ற எளியவர்களின் முகமும் நமக்குத் தெளிவுறும். தொடக்கத்தில் இறையுணர்வு கொண்டு துதிப்பாடல்களையும் பாடியுள்ள பாரதிதாசன், பின்னாட்களில் பெரியார் தொடர்பும் சுயமரியாதைச் சிந்தனை எழுச்சியும் பெற்ற பிறகு, தன் கவிதைகளில் முற்போக்கு அழகியல் கோட்பாட்டைக் கொண்டவராகிறார்.
பொய்மை மயக்கங்களைத் தகர்த்தெறியும் கவிதைகளைப் படைக்கிறார். தமிழியக்கம், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்னும் மூன்றும் அவரது கவிதைச் செயல்பாட்டுக்கான களங்களாகின்றன. தன் காலத்தின் மடமைகளை, மூடத்தனங்களை, அறிவீனங்களைக் களையும் பொறுப்புடன் தன் கவிதைகளைப் படைக்கிறார். தன் மொழிக்கும் அம்மொழி பேசும் மக்களுக்கும் இடர் தரும் எதையும் எதிர்க்கும் படைக் கருவியாகத் தமிழையே காண்கிறார்.
‘சமூகத்தில் தாழ்வென்றும் உயர்வென்றும் பேதம் கொள்வதால் மனிதர்களிடம் இன்ப வாழ்வு எப்படி உண்டாகும்’ என்ற கேள்வி அவரிடம் எழுகின்றது.
‘அற்பத் தீண்டாதார் என்னும்
அவரும் பிறரும் ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தாரன்றோ - சகியே
கர்ப்பத்தில் வந்தாரன்றோ?’
என்ற வரிகளில், சித்தர்களின் கலகக் குரலையும் பின் வந்த உத்திர நல்லூர் நங்கையின் சாதிகளற்ற மானுடச் சிந்தனையையும் கொண்ட நம் மரபின் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கொண்டவராகிறார். வறுமை, அறியாமை, மூடநம்பிக்கை, சமயக் காழ்ப்பு, சாதிச் செருக்கு எனச் சமூகப் பிணிகள் அத்தனைக்கும் காரணங்களைக் கவிதைவழியாகச் சமூகத்துக்கு எடுத்துரைத்திடும் அவரது எளிய உணர்ச்சிப் பெருக்கே அவரது கவித்துவத்தைப் பாதித்தது என்றும் விமர்சனம் வைக்கப்படுவதுண்டு. என்றாலும், அந்த உணர்ச்சிப் பெருக்கே அவர் கவிதையின் தனிச் சாயலாக இருந்தது.
தமிழ்க் காதலின் தகைமையைப் பேசுகின்றபோது, இளையோரின் காதலில் ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்/ மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்று பாடும் அதே வேளையில், காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு; அவள் இருக்கிறாள் என்பதே இன்பத்தை நல்கும் என்று முதியோர் காதலையும் பாடுகின்றார். சிலையழகு என்று காணும் கவிக்கு, குழிகொண்ட கண்களில் காதலில் பேரின்பத்தை நல்கும் அன்பைச் சொல்லவும் இயல்கிறது.
பெண்ணே குடும்பத்தின் யாவும் ஆனவள் என்று சொல்லி அவளைக் குடும்ப விளக்காகக் காணும் பாரதிதாசன், அவள் அடுக்களையிலிருந்து விடுபட வேண்டும். சமைக்கும் கடமை தனக்குமானது என்று ஓர் ஆண் உணர வேண்டும். அவ்வாறு உணரச் செய்தல் பெண் கல்வியாலே சாத்தியமாகும் என்று எழுதுகிறார். ஒரு பெண் கல்வி கற்றால், குடும்பத்தைப் பல்கலைக்கழகமாக மாற்றுவாள் என்றும், இந்த வையகம் அவளால் பேதமை அற்றிடும் என்றும் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். ஆணுக்கு அறிவு புகட்டுதல், அவனது சமூகக் கடமைகளை, அவனது அறவொழுக்கத்தைச் சுட்டிக்காட்டுதல் போன்ற பண்புகள் பெண்ணுக்கே இயலும். அப்பண்புகளை அவள் பெறுவது கல்வியால்தான். இச்சமூகம் எழுச்சி பெறப் பெண் விடுதலையே அடித்தளமிடும். பெண் விடுதலையே இந்த மண்ணின் விடுதலை என்று பாடுகிறார்.
தன்னலமற்ற தூய தொண்டுள்ளத்தை, அன்புள்ளத்தை, உலக மக்களெல்லாம் ஒன்றெனக் காண்கிற தாயுள்ளம் வேண்டிய அவரது கவிதைகள், ‘உடைமை மக்களுக்குப் பொது, புவியை நடத்துப் பொதுவில் நடத்து!’ என்று பொதுவுடைமை பேசின.
‘உழைப்போர் உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன் இவ்வுலகுழைப்பவர்க் குரியதென்பதையே’ என்கிறார் பாரதிதாசன். இந்தப் புவியை வளர்ச்சியெனும் பாதையில் இட்டுச்செல்லத் தம் உழைப்பை நல்கிய எளியோருக்குத்தான் இவ்வுலகம் உரியது என்கிறது அவரது கவியுள்ளம். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் குரலுக்கு பாரதிதாசனின் எல்லோருக்கும் எல்லாமும் வழங்குகிற சமூகத்தின் உயிர்ப்பு விடையாகிறது. பாரதிக்கு பாரத தேசம் என்கிற பெரும் பரப்பே, ஆன்மிக வழிபட்ட தேடலே கவிதைக்கான களமாக இருக்கையில், பாரதிதாசனுக்குத் தமிழியக்கமும் பொதுவுடைமையும் கருப்பொருள்களாகின.
‘எளிமையினால் ஒரு தமிழன் கல்வி இல்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்!’ என்று எல்லோருக்குமான கல்வி வாய்க்கும் கனவும், அதன்வழி பிறக்கும் சமூகம் அறிவுடைச் சமூகமாகத் திகழும் என்ற முனைப்பும் கொண்ட பாரதிதாசன், நல்லறிவற்ற சான்றோரின்றி நாடு சிறக்காது என்றார்.
பாவேந்தருக்குக் கனவு, லட்சியம் யாவும் வேறுபாடுகளற்ற, சமத்துவமிக்க, எல்லோருக்கும் எல்லாமும் வாய்க்கப் பெறுகின்ற சமூகம்தான். பொதுவுடைமைக் கொள்கையைத் தம் உயிரென்று காக்கின்ற சமூகம். சித்திரச் சோலைகளை உருவாக்க இப்பாரினில் நம் முன் ரத்தம் சொரிந்த தோழர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் சமூகம்.
‘எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக
வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை
வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக;
வில்லார்க்கும் நல்ல நுதல் மாதர் எல்லார்க்கும்
விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே!’
இதுவே பாரதிதாசனின் லட்சிய நோக்காக இருந்தது. யாவையும் தனியார்மயமாகி எளியோர் பிழைக்கக் கதியற்று நிற்கும் இந்த உலகமயச் சூழலில் பாவேந்தரின் கனவுகள் பேசப்பட வேண்டியவை.
- கவிதா நல்லதம்பி, உதவிப் பேராசிரியர்.
தொடர்புக்கு: janagapriya84@gmail.com
பாரதிதாசன் பிறந்த நாள்: ஏப்ரல் 29
To Read this in English: Bharatidasan: A poet who wielded Tamil as a war weapon
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago