மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மட்டுமா பொறுப்பு?

By செய்திப்பிரிவு

கடந்த ஒரு மாத காலமாக வகுப்பறைகளில், பள்ளிகளில், பேருந்துகளில் மாணவர்கள் நடந்துகொள்ளும் ஒழுங்கீனமான காணொளிகள் பொதுவெளியில் பரவி, விவாதத்துக்குள்ளாகியுள்ளன. வகுப்பறையில் நடனமாடுவது, ஆசிரியர்களை இழிவாகப் பேசுவது, ஆசிரியர்களைத் தாக்க முயல்வது, மேஜைகள், இருக்கைகள் போன்றவற்றை உடைப்பது, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது என சில மாணவர்களின் செயல்பாடுகள் வருத்தத்தையும் கவலையையும் ஒருசேர ஏற்படுத்துகின்றன.

இவை போன்ற காணொளிகள் மாணவர்களாலேயே எடுக்கப்பட்டு, மாணவர்களாலேயே பரப்பப்படுகின்றன. இதில் எல்லாத் தரப்பு மாணவர்களும் உள்ளனர். படித்த, படிக்காத முதல் தலைமுறை, மூன்றாம் தலைமுறை, ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்படாத என்னும் பாகுபாடு இல்லை. இவ்வாறான நெறிபிறழ் நடத்தைகளுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பேசாமல் மாணவர்களை மட்டும் குறை சொல்வது சரியானதன்று.

கரோனா காலத்தில் ஒரு வருடம் வீட்டில் இருந்தது, இணையவழி வகுப்புக்காக கைபேசிகளைப் பயன்படுத்தியது, படித்தல், தேர்வு ஆகியவற்றிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தது, தேவையற்ற போதைப் பழக்கம், வீட்டில் அதீதச் செல்லம், கண்டிப்பின்மை போன்ற காரணிகள் அவர்களின் மாறுபட்ட நடத்தைக்குக் காரணமாக அமைகின்றன. மிக முக்கியமாக, திரைப்படங்கள் முன்வைக்கும் கதாநாயக பிம்பத்தைச் சொல்ல வேண்டும். நடை உடை பாவனைகள், பன்ச் வசனங்கள், வன்முறை போன்றவை மாணவர்களின் மனதில் திரும்பத் திரும்பப் பதியவைக்கப்படுகின்றன. தன்னைக் கதாநாயகனாகக் காட்டிக்கொள்ள முயலும்போது, கதாநாயகனின் செய்கைகளையும் போலச் செய்கிறான்.

கதாநாயக வழிபாடு என்பதைச் சமூகம் ஏற்றுக்கொண்டதால், ஓரளவு மாணவர்களும் தங்களை அவ்வாறு கட்டமைத்துக்கொள்கிறார்கள். கவன ஈர்ப்பும் தேவையாக இருக்கிறது. எனவே, பள்ளியில் தங்களின் ‘வீரதீர சாகசங்’களைக் காணொளி எடுத்துப் பதிவிடுகின்றனர். அந்தக் கதாநாயகத்தன்மை மாணவர்களின் மன வயதுக்கும் உடல் வயதுக்கும் பொருத்தமானதன்று, ஆபத்தானது. இச்செயல்களுக்காக அவர்களைத் தற்காலிக நீக்கம் செய்தல், மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் போன்றவை தீர்வாகாது. அவர்கள் செய்வது தவறு என்பதை உணரச் செய்யும் மாபெரும் விழுமியத்தை அவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். அதுவரை தாம் செய்வதைச் சரி என்றே அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

மாணவர்கள் வளர்ச்சியில், கல்வியில் எந்த அளவுக்கு ஆசிரியர்களின் பங்கு இருக்கிறதோ அந்த அளவுக்குப் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆனால், சாதி, மத, வர்க்க, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகுந்திருக்கும் சமூகத்தில் ஒரே மாதிரியான வீட்டுச்சூழல் அனைவருக்கும் அமைவதில்லை. வசதியானவர்களும் ஓரளவு வசதியானவர்களும் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். வசதி குறைவானவர்களும், உடலுழைப்புப் பணிசெய்யும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் கட்டிச் சேர்த்திருப்பதால் மாணவர்களின் கல்வி குறித்து அக்கறையும் பெருமிதமும் ஏற்படுகின்றன.

தனியார் பள்ளிகளின் நெறிமுறைகளுக்கும் இன்ன பிறவற்றுக்கும் அவர்கள் கட்டுப்படுகின்றனர். ஆனால், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் முதல் வகுப்பிலோ ஆறாம் வகுப்பிலோ குழந்தைகளைச் சேர்த்தவுடன் தங்களின் கடமையும் பொறுப்பும் முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்கள். தம் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எப்படிப் படிக்கிறார்கள் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலையில்லை. பெற்றோர் சந்திப்புக்கு அழைத்தாலும் அவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. மாணவர்களின் படிப்பு குறித்து, நடத்தை குறித்து பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்தாலும் அவர்கள் பெரிதாக எதிர்வினையாற்றுவதில்லை.

பள்ளியில் ஒழுங்கீனமாக இருக்கும் மாணவர்கள் வீட்டிலும் அவ்வாறு நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே, அவர்களுடைய நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால் பெற்றோர்கள் கவனித்து அவர்களுடன் உரையாடி அறிவுரை கூறவோ கண்டிக்கவோ வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறும்போது அதன் நீட்சியாக அவர்கள் பள்ளியிலும் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்கிறவர்களாகவும், காலை சென்றால் மாலை வெகு நேரம் கழித்து வீடு திரும்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, அவர்களால் மாணவர்களைக் கவனிக்க இயலாத சூழலே உள்ளது. பள்ளியில் மாணவர்கள் இருக்கும் நேரத்தைவிட வீட்டில் இருக்கும் நேரம்தான் அதிகம். அந்த நேரத்தில் பெற்றோர்கள் சில அடிப்படைப் பண்புகளை, அறத்தை போதிக்கலாம். அது கூடுதல் பலன் தரும்.

அரசும் பள்ளிக் கல்வித் துறையும் இவ்விஷயங்களை மேலோட்டமாக அணுகுகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. நடத்தை நெறி பிறழும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் இரண்டாம் தாயாக இருந்து திருத்த வேண்டும் என்று எளிதில் பள்ளிக் கல்வித் துறை கூறிவிட்டது.

அப்படி எளிதில் கடக்கக்கூடிய விஷயமா இது? ஆசிரியர்கள் எவ்வளவுதான் பொறுப்பெடுத்துக்கொள்ள இயலும்? ஆசிரியர்கள் வெறும் கற்பித்தலை மட்டும் செய்வதில்லை. மாறாக, அரசின் விலையில்லாப் பொருட்கள் வழங்குவதிலிருந்து, கல்வி உதவித் தொகை, சான்றுகள் பெற்றுத்தருவது, மருத்துவ முகாம், பயிற்சிகள், கணக்கெடுப்பு, இணையவழியில் மாணவர்களின் வருகையைப் பதிவுசெய்தல் என 60% பள்ளி நேரம் அதிலேயே செலவாகிவிடுகிறது. மீதி 40% நேரத்தில்தான் கற்பித்தல் நடக்கிறது. கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல் அரசு கேட்கும் புள்ளிவிவரங்களைத் திரட்டி அனுப்பக்கூடிய இயந்திரங்களாக ஆசிரியர்களை மாற்றிவிட்டிருக்கிறது அரசு. 100% தேர்ச்சி, 100% வருகை என்பதுதான் அரசின் குறிக்கோள். ஆசிரியர்களை நோக்கிச் சாட்டையைச் சொடுக்குகிறது அரசு.

ஒவ்வொரு வகுப்பிலும் அறுபது எழுபது மாணவர்கள் இருக்கிறார்கள். ஒரு பாடவேளைக்கான 45 நிமிடத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு நிமிடம்கூட செலவழிக்க முடியாத நிலைமை. அவனைக் கண்டிக்கவும் முடியவில்லை. அறிவுரையை ஏற்கும் மனநிலையிலும் அவர்கள் இல்லை. அன்பாகப் பேசித் திருத்தலாம் என்பது தேய்வழக்கு. கேட்கும் மாணவர்கள்தான் கேட்கிறார்கள்.

ஆக, மாணவர்களை நல்வழிப்படுத்துதல் என்பது ஒரு கூட்டுச் செயல்பாடு. அரசையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மாறிமாறிக் குறைசொல்வதாலும் குற்றம்சாட்டிக்கொள்வதாலும் பயன் ஒன்றும் விளையப்போவதில்லை. மாறாக, எல்லாரும் பொறுப்பேற்க வேண்டும். அரசானது சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:40 என்று இருக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு, மனநல ஆலோசகர் பணியிடம் ஏற்படுத்தப்பட வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 11-ம், 12-ம் வகுப்புகளைப் பிரித்து, அவற்றைக் கல்லூரிகளில் இணைத்து ஜூனியர் காலேஜ் என்ற ஒன்றைத் தொடங்க வேண்டும். அந்தக் காலத்து பியூசி போல 12-ம் வகுப்பானது கல்லூரியோடு இணைக்கப்பட வேண்டும்.

போதைப்பொருட்களின் நடமாட்டத்தை அரசு கண்காணித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களிடம் தேர்ச்சி, தேர்ச்சி என்று கல்வித்துறை அதிகாரிகள் கடுமை காட்டாமல் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் நடத்த வேண்டும். அரசும் பள்ளியும் ஆசிரியர்களும் பெற்றோரும் கைகோத்து மாணவர்களை அரவணைத்துக்கொள்ள வேண்டும். அன்பும் கண்டிப்பும் அக்கறையுமே மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆயுதங்கள். இதன் மூலம் மாணவர்கள் மகத்தான ஆளுமைகளாகப் பரிணமிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

- சுகிர்தராணி, கவிஞர், அரசுப் பள்ளி ஆசிரியர். தொடர்புக்கு: sukiertharani@yahoo.co.in

To Read this in English: Are teachers alone responsible for students?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்