*
“எங்கள் பொதுக் கூட்டங்கள் எல்லாம் கடைசியில் ‘ஜெய்ஹிந்த்’ மற்றும் ‘ஜெய் அஹோம்’ என்ற முழக்கங்களோடு முடிகின்றன. என்னைவிட மதச்சார்பற்றவர் அசாமில் யாரும் இல்லை” என்கிறார் பத்ருதீன் அஜ்மல். “என்னுடைய தாடியையும் தொப்பியையும் வைத்து எடை போடாதீர்கள். எங்கள் கட்சியில் முஸ்லிம்கள் அல்லாத சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். எங்கள் கட்சியின் தலைவரே ஓர் ஆதிவாசிதான்.”
‘‘யார் இந்த அஜ்மல்?’’ - சில வருடங் களுக்கு முன்னர், அசாம் முதலமைச்சர் தருண் கோகோயிடம் “அஜ்மலுடன் கூட்டு வைத்துக்கொள்வீர்களா?” என்று கேட்கப்பட்டபோது, அவர் ஏளனமாகச் சொன்ன பதில் இது. இன்றோ “யார் இந்த தருண் கோகோய்?” என்று அஜ்மல் கேட்கிறார். அஜ்மல் அசாமிலிருந்து காங்கிரஸுக்குச் சமமாக மூன்று எம்பிக்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியவர். அவரது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்குத்தான் இஸ்லாமியர் பெருமளவு ஓட்டுப் போடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. குறைந்தது 40 சட்ட மன்றத் தொகுதிகளில் அவரது செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறது.
உத்தரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற தாருல் உலும் தேவ்பந்த் மதரசாவின் மாணாக்கரான மௌலானா அஜ்மல், அசாமின் ‘அத்தர் அரசன்’ என்று அறியப்படுபவர். வாசனைப் பொருட்கள் விற்றுப் பெரும் பணக்காரர் ஆனவர். அவரது ஊரான ஹோஜாய் நகரத்தில் அவரைத் தவிர, வேறு யாருக்கும் எந்தச் சொத்தும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அவரது வீடு தெலுங்குப் பட வில்லன் வீடு மாதிரி இருக்கும் என்று சொல்கிறார்கள். நான் பார்த்ததில்லை. வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் ஒலிம்பிக் பந்தயங்களை எளிதாக நடத்த முடியுமாம். பல கல்விக்கூடங்களை நடத்துகிறார். மிகப் பெரிய இலவச மருத்துவமனை ஒன்றையும் நடத்துகிறார்.
ஆனால், ‘இவருடைய திட்டமே வேறு. அசாமின் இஸ்லாமிய இளைஞர்களை பங்களாதேஷுக்குத் தன் செலவில் ஜிகாதி பயிற்சி எடுத்துக்கொள்ள அனுப்புகிறார்’ என்ற குற்றச்சாட்டு பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. இதுவரை ஆதாரம் ஏதும் இல்லை.
2005-ல் ஆரம்பிக்கப்பட்ட அஜ்மல் முன்னணி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 15% ஓட்டுகளைப் பெற்றது. ‘என்னுடைய வாக்கு சதவீதம் இன்னும் அதிகரிக்கும். காங்கிரஸும் பாஜகவும் வங்காள முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் காங்கிரஸுடன் சேர்ந்து போட்டியிட எவ்வளவோ முயன்றேன். பிஹாரின் நிதிஷ்குமார் கூட முயற்சி செய்து பார்த்தார். ஆனால், காங்கிரஸ் எங்களை ஒதுக்கிவிட்டது” என்கிறார் அவர். என்னைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை என்று அவர் சொன்னாலும், பலர் அச்சப்படுகிறார்கள். 2001-ல் 30.9% ஆக இருந்த முஸ்லிம் மக்கள்தொகை 2011-ல் 34.2% ஆக உயர்ந்துவிட்டது. 2011-ல் ஆறு மாவட்டங்களில் அவர்கள் பெரும்பான்மையினராக இருந்தார்கள். இன்று ஒன்பது மாவட்டங்களில் அவர்கள் பெரும்பான்மையினர். இதனால், இவரது கட்சி மேலோங்கினால் முஸ்லிம்கள் இன்னும் அதிகமாவார்கள் என்று இந்துக்கள் அச்சப்படுகிறார்கள். கூட்டு வைத்துக்கொண்டால் கிடைக்கக்கூடிய ஓட்டுக்களும் பாஜகவுக்குச் சென்றுவிடும் என்று காங்கிரஸும் அச்சப்படுகிறது.
கீழ் அசாமில் இருக்கும் போடோக்களுக்கும் வங்கதேச முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரங்கள் பல உயிர்களைப் பலி வாங்கியிருக்கின்றன - பல முஸ்லிம்களின் உயிர்களை. காவுவாங்கிய போடோ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்துப் பல குண்டு வெடிப்புகளில் பங்கேற்ற மொஹிலாரியின் போடோலேண்ட் மக்கள் முன்னணி, இன்று பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அரசு கொடுக்கும் சலுகைகளில் 90 சதவீதத்துக்கும் மேல் மக்கள்தொகையில் 30%-க்கும் குறைவாக இருக்கும் போடோக்களையே சேரும் என்று அங்கிருக்கும் மக்கள் பரவலாகக் கருதுகிறார்கள்.
அசாம் காங்கிரஸ் மகத்தான மக்கள் தலைவர்களை மாநிலத்துக்கு அளித்திருக்கிறது. காந்தியின் சீடரான கோபிநாத் பர்தலோய் காலத்தில் தொடங்கிய அந்தப் பரம்பரை, தருண் கோகோய் வரை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அவரோடு முடிந்துவிடுமோ என்ற அச்சம் இப்போது காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு வந்திருக்கிறது. 15 வருடங்களாக அசாமில் கோகோயின் ஆட்சி நடக்கிறது. 2001-ல் முழுவதும் திவாலாகும் நிலையில் இருந்த மாநிலத்தை ஒரு வழிக்கு அவர்தான் கொண்டுவந்தார். அசோகச் சக்ரவர்த்தியைப் போல உண்மையிலேயே கிராமங்களுக்குச் சாலைகளை அமைத்தார். மாநிலத்தில் 85%-க்கு மேலாகக் கிராமங்கள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அசாமில் இன்று அமைதி இருக்கிறது என்றால், அது கோகோயின் உழைப்பினால்தான் என்று சொல்ல வேண்டும்.
ஆனாலும் அசாமிய, வங்கதேச இந்துக்கள் அவரிடமிருந்து விலகிச் செல்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அந்நியப்பட்டுப்போனார்கள். முஸ்லிம்கள் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று எண்ணுகிறார்கள். எது எப்படியிருந்தாலும், கோகோயின் வலைதளத்தை அமைத்தவர்கள் அவரது நன்மையை விரும்புபவர்களாகத் தெரியவில்லை. வலைதளம் ‘சிலுவைப் போர் தொடர்கிறது’ என்று அறிவிக்கிறது. சிலுவைப் போர் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
(தொடரும்)
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago